அந்தரங்கம் திருட உதவும் `டிராக்கிங்’ ஆப்கள்… தப்பிப்பது எப்படி

அந்தரங்கம் திருட உதவும் `டிராக்கிங்’ ஆப்கள்... தப்பிப்பது எப்படி?

மது உலகம் ஸ்மார்ட்போன்களால் நாளுக்கு நாள் சுருங்கிக்கொண்டிருக்கிறது. நமக்குத் தெரிந்தோ, தெரியாமலோ ஸ்மார்ட்போன்கள் மூலம் நாம் கண்காணிக்கப்பட்டுக்கொண்டுதான் இருக்கிறோம். இப்போது ராமநாதபுரத்தில் டிராக்கிங் ஆப்பினால் நடந்திருக்கும் செயல் அதற்கு மிகச்சிறந்த எடுத்துக்காட்டாக அமைந்திருக்கிறது.

ஸ்மார்ட்போன்களில் டிராக்வியூ

ராமநாதபுரம் மாவட்டம், தேவிப்பட்டினம் அருகே ஸ்மார்ட் போன் ஆப்பைப் பயன்படுத்தி பல பெண்களின் வாழ்க்கையைச் சீரழித்த ஒருவர் கைது செய்யப்பட்டிருக்கிறார். அவரது பெயர் தினேஷ்குமார். எம்.சி.ஏ. பட்டதாரியான இவர் தனியார் கல்லூரியில் லேப் டெக்னீஷியனாகப் பணியாற்றி வந்திருக்கிறார். அங்கு வேலை செய்தபோது பல பெண்களுக்குப் பாலியல் தொல்லை கொடுத்ததாகப் பணிநீக்கம் செய்யப்பட்டிருக்கிறார். அதன்பின் தான் கற்றுக்கொண்ட தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி இவர் செய்திருக்கும் செயல் மிக கொடூரமானது. அடுத்தவரின் மொபைலை டிராக் செய்ய உதவும் மொபைல் அப்ளிகேஷனை மற்றவர்கள் மொபைலில் இன்ஸ்டால் செய்து, அதைப் பயன்படுத்திப் பல பெண்களுக்குப் பாலியல் தொல்லை கொடுத்திருக்கிறார். இந்த அப்ளிகேஷனை பெண்களின் ஸ்மார்ட்போனில் இன்ஸ்டால் செய்துவிட்டு அவர்களுக்கே தெரியாமல் மற்றொரு போனில் கண்காணித்திருக்கிறார். கண்காணித்து அவர்களது அந்தரங்க நடவடிக்கைகளைப் பதிவு செய்து, அதை வைத்து மிரட்டி பாலியல் தொல்லை கொடுத்து வந்திருக்கிறார். தொழில்நுட்பங்களை வைத்து மோசமான காரியங்களில் ஈடுபட்டது மிகப்பெரிய தவறு. அதற்கான தண்டனையை தினேஷ்குமார் அனுபவித்தே ஆக வேண்டும். அதேநேரம் ஸ்மார்ட்போன்களின் மீதும் எளிதாகப் பழி சுமத்திவிட முடியாது. எந்த ஒரு தொழில்நுட்பமும் பயன்படுத்தும் விதத்தை வைத்தே அதன் பலன்களைத் தரும்.

எனக்குத் தெரிந்த நண்பரின் மொபைலை யாரோ ஒருவர் கண்காணிப்பதாக பலமுறை என்னிடம் தெரிவித்தார். அவர் தொடர்புகொள்ளும் எண்களுக்கு இவர் எண்ணிலிருந்தே குறுஞ்செய்திகளும், மெயில்களும் அனுப்பப்பட்டிருந்தன. இதுதவிர, இவரது மொபைலில் இருந்த ஃபேஸ்புக்கையும் பார்வையிட்டு வந்திருக்கிறது அந்த உளவாளிக் கூட்டம். நண்பர் பலமுறை அதைக் கண்டுபிடிக்க முயன்றும் முடியவில்லை. இறுதியில் மொபைலை ரீசெட் செய்துவிடுமாறு சொன்னேன். அவரும் ரீசெட் செய்த சில நாள்கள் கழித்து, இப்போது யாரும் கண்காணிப்பதாகத் தெரியவில்லை என்று சொன்னவர், சில நாள்களுக்குப் பின்னர் மொபைலையே மாற்றப்போவதாகவும் தெரிவித்தார். நாம் அனுமதி கொடுக்கும் சில ஆப்ஸ் பின்னர் நமக்கே தொல்லையாக முடியும். நாம் ப்ளே ஸ்டோரில் டவுன்லோடு செய்யும் அனைத்து ஆப்ஸ்ஸும் நூறு சதவிகிதம் பாதுகாப்பானது கிடையாது.

ஸ்மார்ட்போன்கள்

அப்ளிகேஷன்களைப் டவுன்லோடு செய்ய உதவும் ப்ளே ஸ்டோரில், ஒரு ஆப்க்கு 25 அமெரிக்க டாலர்கள் பணம் செலுத்தி, யார் வேண்டுமானாலும் மக்களின் பயன்பாட்டுக்காக ஆப்களை அப்லோடு செய்துவிட முடியும். ஆனால், அந்த ஆப்ஸின் நம்பகத்தன்மை குறித்து யாரும் பரிசோதிப்பதில்லை. எனவே, ஒரு ஆப்பைப் பதிவிறக்கம் செய்யும் போது நமக்குத் தேவையா எனச் சிந்தித்து முடிவெடுக்க வேண்டும். ஆப்ஸ் இன்ஸ்டால் செய்யும்போது நமக்குத் தேவையான ஆப்ஸை மட்டும் தேர்ந்தெடுப்பது சிறந்தது. இதுதவிர, வாரம் ஒருமுறை நமது மொபைல் செட்டிங்கில் உள்ள அப்ளிகேஷன் மேனேஜரில் இருக்கும் ஆப்ஸைப் பார்த்து உடனே அன் இன்ஸ்டால் செய்துவிடுவது நல்லது.

எந்தச் சந்தேகம் வந்தாலும் சர்வீஸ் சென்டருக்குப் போகும் முன் வீட்டிலிருக்கும் டெக்னாலஜி தெரிந்தவர்களிடம் கேட்பது நல்லது.

Leave a comment

Your email address will not be published.