அப்துல்கலாம் நினைவிடத்தில் குடும்பத்தினர் பிரார்த்தனை; ஆயிரக்கணக்கான பொதுமக்கள் அஞ்சலி

மறைந்த முன்னாள் ஜனாதிபதி டாக்டர் அப்துல்கலாம் 3-ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு இன்று காலை முதல் அவரது நினைவிடத்தில் ஏராளமானோர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

மறைந்த மக்கள் ஜனாதிபதி டாக்டர் ஏ.பி.ஜெ.அப்துல்கலாம் நினைவிடம் ராமேஸ்வரத்தை அடுத்துள்ள பேய்க்கரும்பு என்ற இடத்தில் அமைந்துள்ளது. இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் சார்பில் அமைக்கப்பட்ட இந்த தேசிய நினைவகத்தை கடந்த ஆண்டு இதே நாளில் பிரதமர் நரேந்திரமோடி நாட்டுக்கு அர்ப்பணித்தார். இதைத்தொடர்ந்து இதுவரை இந்த நினைவிடத்துக்கு 33 லட்சத்துக்கும் அதிகமானோர் வருகை தந்து கலாமுக்கு அஞ்சலி செலுத்திச் சென்றதுடன், இங்கு அமைக்கப்பட்டுள்ள கலாமின் வாழ்க்கை வரலாற்றுக் காட்சிக் கூடம், அவர் உருவாக்கிய விண்வெளி சாதனங்கள், அவர் பெற்ற விருதுகள்  ஆகியவற்றையும் கண்டு மகிழ்ந்து செல்கின்றனர்.

அப்துல்கலாம் நினைவிடத்தில் அவரது குடும்பத்தினர் பிரார்த்தனை

இந்நிலையில், இன்று அவரது 3-வது நினைவு தினம் நாடு முழுவதும் கடைப்பிடிக்கப்படுகிறது. இதையொட்டி இன்று காலை அப்துல்கலாம் நினைவிடத்தில் அவரின் குடும்பத்தினர் சிறப்பு பிரார்த்தனை நடத்தினர். கலாமின் மூத்த சகோதரர் முத்து முகம்மது மீரா மரைக்காயர், அவரின் மகள் நஸீமா மரைக்காயர், மகன் ஜெயினுலாபுதீன், பேரன்கள், சேக், சலீம் மற்றும் உறவினர்கள், ராமேஸ்வரம் ஜமாத் நிர்வாகிகள் உள்ளிட்டோர் இந்தப் பிரார்த்தனையில் பங்கேற்றனர். இதைத்தொடர்ந்து ஏராளமானோர் கலாமின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். மாநில அரசு சார்பில் அமைச்சர் மணிகண்டன், மாவட்ட ஆட்சியர் நடராஜன் ஆகியோர் அஞ்சலி செலுத்த வருகை தர உள்ளனர். இதேபோல் அ.ம.மு.க பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரனும் அஞ்சலி செலுத்துவதற்காக வர உள்ளார்.

கலாமின் நினைவு தினத்தை முன்னிட்டு அப்துல்கலாம் இன்டர்நேஷனல் பவுன்டேசன் சார்பில் இன்று மாலை கல்லூரி மற்றும் பள்ளி மாணவ மாணவிகளுக்கான சிறப்பு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட உள்ளன. கலாமின் நினைவு தினத்தை முன்னிட்டு அவரது நினைவிடம் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு ஜொலித்து வருகிறது.

Leave a comment

Your email address will not be published.