அமெரிக்காவின் அடுத்த அதிரடி……ஐ.நா. சபையின் மனித உரிமை கவுன்சிலில் இருந்து விலகல்

கலிஃபோர்னியா: ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை கவுன்சிலில் இருந்து விலகுவதாக அமெரிக்கா திடீரென அறிவித்துள்ளது. ஐ.நா. சபைக்கான அமெரிக்க தூதர் நிக்கி ஹாலே, வெளியுறவு அமைச்சர் மைக் பாம்பியோ ஆகியோர் நேற்று அறிவிப்பு ஒன்றை வெளியிட்டனர். அப்போது பேசிய நிக்கி ஹாலே, ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை கவுன்சில் கேலிக்குரியதாக செயல்பட்டு வருகிறது என்று குற்றம் சாட்டினார். இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் இருந்து அமெரிக்கா விலகுவதாக அவர் தெரிவித்துள்ளார்.

மனித உரிமை ஆணையத்தை சீரமைக்க அமெரிக்கா செய்த முயற்சிகளுக்கு ரஷ்யா, சீனா, கியூபா, எகிப்து ஆகிய நாடுகள் முட்டுக்கட்டை போட்டதாக நிக்கி ஹாலே குற்றம் சாட்டினார். காஸா பிரச்சனை தொடர்பாக ஐ.நா. சபையில் இஸ்ரேலுக்கு எதிராக நிறைவேற்றப்படும் தீர்மானங்களுக்கு அமெரிக்கா கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தது. இந்த நிலை தொடர்ந்தால் ஐ.நா. சபை மனித உரிமை கவுன்சிலில் இருந்து வெளியேறி விடுவோம் என அந்நாடு ஏற்கனவே கூறியிருந்தது.

மேலும் மெக்சிகோவில் இருந்து அமெரிக்காவுக்கு சட்டவிரோதமாக குடியேறுபவர்களைத் தடுக்கும் விதமாக குறிப்பிட்ட வயதினருக்கு மேல் அமெரிக்காவுக்குள் நுழைய அனுமதி மறுக்கப்படுகிறது. இதன் காரணமாக குடியேறிகளின் குழந்தைகளையும், பெற்றோரையும் அமெரிக்க அதிகாரிகள் பிரித்து வைத்த விவகாரத்தில் ஐ.நா. மனித உரிமை கவுன்சில் கடும் கண்டனம் தெரிவித்தது. முன்னதாக அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவியேற்ற பிறகு யுனெஸ்கோ அமைப்பில் இருந்தும், பாரிஸ் பருவநிலை ஒப்பந்தத்தில் இருந்தும் அமெரிக்கா வெளியேறியது குறிப்பிடத்தக்கது.

Leave a comment

Your email address will not be published.