அமெரிக்காவில் வியக்க வைத்த அதிசயக் குழந்தை:பிறந்த தேதி, நேரம், எடை அனைத்தும் ஒரேமாதிரி
அமெரிக்காவின் டென்னிஸி நகரில் பிறந்த குழந்தை ஒன்று அனைவரையும் வியக்கவைத்துள்ளது. என்னவென்று கேட்கிறீர்களா, அந்த குழந்தை பிறந்த தேதி, நேரம், எடை அனைத்தும் ஒரே மாதிரி இருப்பதுதான் வியப்புக்குரிய காரணமாகும்.
அப்படி என்ன தேதியில் பிறந்தது என்று கேட்கிறீர்களா. நியூயார் நகரில் இரட்டை கோபுரம் தீவிரவாதிகளால் தகர்க்கப்பட்ட தேதியில்தான் இந்த குழந்தை பிறந்தது.
கடந்த 2001-ம் ஆண்டு அல்கொய்தா தீவிரவாதிகள் விமானத்தைக் கடத்தி நியூயார்க்கில் உள்ள இரட்டை கோபுரத்தை தகர்த்தனர். இந்த தாக்குதலில் ஏறக்குறைய 3 ஆயிரம் பேர் கொல்லப்பட்டனர். இந்த கோரத் தாக்குதலின் 18-வது நினைவு தினம் கடந்த 11-ம் தேதி அனுசரிக்கப்பட்டது, அதாவது 9/11 என்று சுருக்கமாக இந்த நினைவு தினத்தை அனுசரிக்கின்றனர்.
கடந்த 11-ம் தேதிதான் டென்னிஸி நகரில் உள்ள ஜெர்மன்டவுன் பகுதியில் உள்ள மெதோடிஸ்ட் லீபோனர் மருத்துவமனையில் இந்த அதிசயக் குழந்தை பிறந்தது. 9/11-ம் தேதியன்று, இரவு 9.11மணிக்கு குழந்தை பிறந்தது, அந்த குழந்தையை எடைப் போட்டால், அதன் எடையும் 9.11 பவுண்ட்(ஏற்ககுறைய 4.38 கிலோ) இருந்தது.
குழந்தை பிறந்த தேதி, நேரம், எடை அனைத்தும் ஒரே மாதிரி இருப்பது கண்டு பிரசவம் பார்த்த மருத்துவர்கள், செவிலியர்கள், பெற்றோர் என அனைவரும் வியந்துவிட்டனர்.
அதியக் குழந்தைக்கு கிறிஸ்டினா பிரவுன் என்று பெற்றோர் பெயரிட்டுள்ளனர். அந்த குழந்தையிந் தாய் கேம்ட்ரியோன் மூர் கூறுகையில், ” அமெரிக்காவில் நடந்த மிகப்பெரிய பேரழிவுக்கும், துயரத்துக்கும் இடையே இந்த குழந்தை பிறந்துள்ளது. அறுவைசிகிச்சை மூலம் பிறந்த என் குழந்தையின் பிறந்த தேதி, நேரம், எடை அனைத்தும் ஒரே மாதிரியாக இருப்பது குறித்து மருத்துவர்கள் கூறியதும் எனக்கு வியப்பாக இருந்தது” எனத் தெரிவித்தார்
குழந்தை கிறிஸ்டினாவின் தந்தை ஜஸ்டின் பிரவுன் கூறுகையில், ” எனக்கு குழந்தை செப்டம்பர் 11ம் தேதியும், பிறந்த நேரம் இரவு 9.11 மணிக்கும், எடை 9.11 பவுண்ட் இருப்பதாக மருத்துவர்கள் கூறியதைக் கேட்டதும் வியப்பாகவும், மகிழ்ச்சியாகவும் இருந்தது. ஒவ்வொருவரும் இதைக்கேட்டு ஆச்சர்யப்பட்டார்கள். மிகப்பெரிய சோகநாளான அந்த தருணத்தில் குழந்தை பிறப்பு அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்திவிட்டது” எனத் தெரிவித்தார்.
மருத்துவமனையின் செவிலியர் ராச்செல் லாஹ்லின் கூறுகையில், “நான் 35 ஆண்டுகளாக இந்த மருத்துவமனையில் பணியாற்றி வருகிறேன். இதுபோன்ற பிறந்ததேதி, நேரம், எடை அனைத்தும் ஒரேமாதிரியான குழந்தையை நான் வாழ்வில் கண்டதில்லை” எனத் தெரிவித்துள்ளார்.🌐