அர்ஜெண்டின வீரர்கள் பெண்கள் போல் தரையில் விழுந்து அழுதனர்: குரேஷிய வீரர் வ்ரசாலிகோ கிண்டல்

அர்ஜெண்டினாவைக் கேலி செய்த வ்ரசாலிக்கோ ஆட்டத்தின் போது பெற்ற மஞ்சள் அட்டை.| ஏ.எஃப்.பி.

வியாழனன்று நடைபெற்ற உலகக்கோப்பை 2018-ன் குரூப் டி ஆட்டத்தில் குரேஷியா 3-0 என்று அர்ஜெண்டினாவை வீழ்த்தியது, இதனால் அர்ஜெண்டினா அடுத்த சுற்றுக்கு தகுதி பெறுவதில் கடும் சிக்கல்கள் எழுந்துள்ளது.

53வது நிமிடத்தில் அர்ஜெண்டினா கோல் கீப்பர் கபரெல்லோ கிளப் மட்டத்துக்கும் கீழான ஒரு இமாலயத் தவறைச் செய்ய ஆன்ட்டே ரெபிச் அபாரமாக அதனை கோலாக மாற்றினார், பிறகு 80வது நிமிடத்தில் லுகா மோட்ரிக் அர்ஜெண்டின வீரர்கள் இருவருக்குக் கடும் போக்குக் காட்டி 25 அடியிலிருந்து அடித்த வளைந்த கோல் இந்த உலகக்கோப்பையின் சிறந்த கோலுக்கான போட்டியில் இடம்பெறத் தக்கதாகும், கடைசியில் ராக்கிடிச் வெந்த புண்ணில் வேலைப்பாய்ச்ச 3-0 என்று அர்ஜெண்டினாவுக்கு அதிர்ச்சியளித்தது குரேஷியா.

அர்ஜெண்டினா அணி ஆதிக்கம் செலுத்தியது என்று அந்த அணியின் பயிற்சியாளர் ஜோர்ஹே சம்போலி தெரிவிக்க, அதனை கடுமையாக மறுத்த குரேஷிய தடுப்பாட்ட வீரர் வ்ரசாலிகோ குரேஷிய ஊடகம் ஒன்றில் கூறியதாவது:

அவர் இந்தப் போட்டியைத்தான் பார்த்தாரா அல்லது வேறு போட்டியையா என்று தெரியவில்லை.

அர்ஜெண்டின வீரர்கள் தரையில் விழுந்து பெண்கள் போல் அழுததைத்தான் நான் பார்த்தேன்

அவர்களை விட நாங்கள்தான் உறுதியுடனும், சிறப்புடனும் ஆடினோம், எங்களுக்குத்தான் வாய்ப்புகள் அதிகம் இருந்தது, எனவே நாங்கள்தான் ஆதிக்கம் செலுத்தினோம்.

அர்ஜெண்டினா அடுத்த போட்டியில் நைஜீரியாவுக்கு எதிராகச் சிறப்பாக ஆடியேயாக வேண்டும். அதாவது அவர்கள் அடுத்தச் சுற்றுக்கு போக வேண்டுமென்றால், போவார்களா?

என்று நக்கலாகப் பேட்டியளித்துள்ளார்.

Leave a comment

Your email address will not be published.