ஆதார் எண் என்பது பொதுமக்கள் தங்களுக்கான சலுகைகள், மானியங்கள் உள்ளிட்ட பல்வேறுவகையான சேவைகளைப் பெறுவதற்காக உருவாக்கப்பட்ட தனித்துவமான எண்ணாகும்.
டிராய் தலைவர் ஆர்.எஸ்.ஷர்மா தனது ஆதார் எண்ணை ட்விட்டரில் வெளியிட்டு இதனை எவ்வாறு தவறாகப் பயன்படுத்த முடியும் என்பதை நிரூபித்துக் காட்டுங்களென சவால் விட்டிருந்தார். இதன் தொடர்ச்சியாக சில ஹேக்கர்கள், ஆர்.எஸ்.ஷர்மாவின் தொலைபேசி எண், பான் கார்டு எண் உள்ளிட்ட சில தகவல்களைக் கண்டறிந்து சொல்லவும் இந்த சவால் விவகாரம் விஸ்வரூபம் எடுத்தது. பொதுமக்கள் பலரும் ஆதார் எண் இவ்வளவு பலவீனமானதா என்று கேள்வியெழுப்பத் தொடங்கவும், ஆதார் ஆனையத்தின் சார்பாக, ஆர்.எஸ்.ஷர்மாவுக்கு ஆதரவாக அறிக்கை வெளியிடப்பட்டது. அந்த அறிக்கையில், ஷர்மா குறித்த தகவல்கள் அவரது ஆதார் எண்ணிலிருந்து பெறப்பட்டவை இல்லையென்றும், அனைத்தும் பொதுத்தளத்திலிருந்து பெறப்பட்ட தகவல்களே என்றும் கூறியிருந்தது.
இந்நிலையில் ஆதார் ஆணையம் (UIDAI) மீண்டும் தற்போது வெளியிட்டுள்ள அறிக்கையில் ஆர்.எஸ்.ஷர்மாவின் செயலுக்கு மறைமுகமாகக் குட்டு வைத்துள்ளது. “ஆதார் எண் என்பது பொதுமக்கள் தங்களுக்கான சலுகைகள், மானியங்கள் உள்ளிட்ட பல்வேறுவகையான சேவைகளைப் பெறுவதற்காக உருவாக்கப்பட்ட தனித்துவமான எண்ணாகும். பல்வேறு விழிப்புணர்வுப் பிரச்சாரங்களின் மூலம், அந்த எண்ணை மிகவும் பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டுமென்பது குறித்தும், பொதுத்தளத்தில் வெளிப்படுத்தக்கூடாதென்பது குறித்தும் அறிவுறுத்தியிருந்தோம். ஆதார் எண் என்பது, வங்கிக்கணக்கு எண், பான் கார்டு எண் போன்றே ரகசியமாகப் பாதுகாக்க வேண்டிய ஒன்றாகும். தேவைப்படும் இடங்களில், தேவைப்படும் பொழுது மட்டுமே சட்டப்படி இந்த எண்ணைப் பயன்படுத்த வேண்டும். ஆதார் ஆக்ட் 2016ன்படி, பொதுத்தளத்தில் தேவையேயில்லாமல் ஆதார் எண்ணைத் தெரிவிப்பதும், சவால் விடுவதுமான செயல்கள் சட்டத்திற்குப் புறம்பானவைகளாகும்” என்று தெரிவித்துள்ளது.