இந்தியாவில் ஆதார் எண்ணைக் கட்டாயப்படுத்தியதிலிருந்தே அதற்கு ஆதரவும் எதிர்ப்பும் குறைவில்லாமல் இருந்துவருகிறது. ஆதார் அட்டையின்மூலம் ஒருவரது அந்தரங்கம் களவாடப்படும் ஆபத்திருப்பதாக ஆதார் அட்டையை எதிர்ப்பவர்கள் கூறிவருகிறார்கள். இதனை மறுக்கும்விதமாக, டிராய் தலைவர் ராம் சேவாக் ஷர்மா, தனது ஆதார் எண்ணை ட்விட்டரில் வெளியிட்டு, முடிந்தால் இதைவைத்து எனக்கு எவ்விதமாக பாதிப்பை ஏற்படுத்த முடியுமென்று காட்டுங்கள் பார்க்கலாமென சவால்விட்டார். இதற்கு பதிலடியாக, ஹேக்கர்கள் ராபர்ட் பேப்டிஸ்ட் என்று அழைக்கப்படும் எலியாட் ஆண்டர்சன், கனிஷ்க் சஞ்சானி மற்றும் கரண் சய்னி ஆகியோர், ஆர்.எஸ்.ஷர்மாவின் பிறந்த தேதி, தற்போதைய முகவரி, செல்போன் எண், பான் கார்டு எண், புகைப்படம் போன்றவற்றை வெளியிட்டு பரபரப்பாக்கினார்.

ஆனால் ஷர்மா, இந்த தகவல்களை எடுப்பதற்காக தான் சவால் விடுக்கவில்லையென்றும், பாதிப்பை ஏற்படுத்தும்படி வேறென்ன செய்ய முடியுமென்றும் கேட்டிருந்தார். இவரது கேள்வி சரியென்று இவருக்கு ஆதரவாக ஒருசாரரும், இதுதானா நீஙகள் ஆதார் தகவல்களைப் பாதுகாக்கும் லட்சணமென்று ஒருசாரார் எதிர்ப்பு தெரிவிப்பதுமாக இருந்தது.

இந்நிலையில்தான் டிராய் தலைவரின் மகளான கவிதா ஷர்மாவிற்கு ஒரு மிரட்டல் இமெயில் வந்துள்ளது. அந்த மெயிலில் அவரது தந்தையின் இமெயில் கைப்பற்றப்பட்டதாகவும், அதனை மீட்பதற்கு பணம் தர வேண்டுமென்றும், அப்படித்தராவிட்டால் அந்த இமெயில் அக்கவுன்டிலுள்ள மிகமுக்கியமான ஃபைல்களனைத்தும் பொதுமக்களுக்கு பகிரங்கப்படுத்தப்படுமென்று கூறப்பட்டது. இதிலிருந்து தப்ப, அந்த அக்கவுன்டை உடனடியாக மூட வேண்டுமென்றும் கூறப்பட்டிருந்தது.
ஆக, இந்த
ஆதார் எண் விவகாரம் புலிவாலைப் பிடித்ததுபோல தொடர்ந்துகொண்டிருக்கிறது. இன்னும் அடுத்தடுத்து எந்த பூகம்பம் கிளம்புமென்று அனைவருக்கும் எதிர்பார்ப்பைத் தூண்டியுள்ளது.