ஆதார் எண்ணிலுள்ள முக்கிய தகவல்கள் பாதுகாப்பானதாக உள்ளது என்று மத்திய எலக்ட்ரானிக்ஸ் மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்தார்.
மாநிலங்களவையில் நேற்று கேள்வி நேரத்தின்போது ஆதார் தகவல்கள் பாதுகாப்பானவையா என்பது தொடர்பான எழுந்துள்ள சர்ச்சைக்கு பதிலளித்து மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் பேசியதாவது:
ஆதார் எண் பாதுகாப்புக்காக பிரத்யேக அடையாள முறையை மத்திய அரசு பயன்படுத்தி வருகி றது. எனவே ஆதார் எண் தகவல் தொகுப்பை யாராலும் முறை கேடாகப் பயன்படுத்தவோ, திருடவோ முடியாது. ஆதார் எண் தகவல்களுக்காக தனியான சட்டமுறையை மத்திய அரசு உருவாக்கியுள்ளது.
ஆதார் எண்ணின் கீழ்வரும் முக்கிய தகவல்கள் மொத்தமும் பாதுகாப்பானவை. ஆதார் எண் திட்டத்தைக் கொண்டு வந்து பயனாளர்களுக்கு நேரடியாக வங்கிக் கணக்குக்கு பணத்தைச் செலுத்துவதன் மூலம் ரூ.90 ஆயிரம் கோடி மீதமாகியுள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.