ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஆட்டத்தை 1-1 என டிராவில் முடித்தது டென்மார்க்

உலகக் கோப்பை கால்பந்து தொடரில் நேற்று சி பிரிவில் நடைபெற்ற டென்மார்க் – ஆஸ்திரேலியா இடையிலான ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிவடைந்தது.

ரஷ்யாவில் உள்ள சமரா மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் தரவரிசையில் 12-வது இடத்தில் உள்ள டென்மார்க் 4-2-3-1 என்ற பார்மட்டிலும், 36-வது இடத்தில் உள்ள ஆஸ்திரேலியா 4-4-1-1 என்ற பார்மட்டிலும் களமிறங்கின. ஆட்டம் தொடங்கிய 7-வது நிமிடத்திலேயே டென்மார்க் அணி கோல் அடித்தது. பாக்ஸ் பகுதிக்குள் பந்தை பெற்ற நிக்கோலை ஜோர்கன்சன் எதிரணி டிபன்பர்களுக்கு ஊடாக பந்தை கட் செய்து வலதுபுறத்தில் இருந்த கிறிஸ்டியன் எரிக்சனுக்கு அனுப்ப அவர், நொடிப்பொழுதில் தனது வலுவான ஷாட்டால் கோலாக மாற்றினார். இதனால் டென்மார்க் அணி 1-0 என முன்னிலை பெற்றது.

22-வது நிமிடத்தில் டென்மார்க்கின் சிஸ்டோ அடித்த பந்தை ஆஸ்திரேலியா கோல்கீப்பர் மேத்யூ ரியான் தடுத்தார். 23-வது நிமிடத்தில் ஆஸ்திரேலியாவின் தாமஸ் ரோகிக், பாக்ஸ் பகுதிக்கு வெளியே இருந்து அடித்த பந்து, கோல்கம்பத்துக்கு வலது புறம் சென்றது. 30-வது நிமிடத்தில் ஆஸ்திரேலியாவின் ஆரோன் மூய் பாக்ஸ் பகுதிக்கு வெளியே இருந்து அடித்த பந்து இடைமறிக்கப்பட்டது. 36-வது நிமிடத்தில் கார்னர் கிக்கில் இருந்து உதைக்கப்பட்ட பந்தை ஆஸ்திரேலியாவின் மேத்யூலெக்கி துள்ளியவாறு தலையால் முட்டினார்.

அப்போது பந்தானது, அவருக்கு முன்புறம் நின்ற டென்மார்க் அணியின் டிபன்டரான பவுல்சனின் கையில் பட்டது. இதையடுத்து ‘விஏஆர்’ தொழில்நுட்ப உதவியுடன் ஆஸ்திரேலிய அணிக்கு பெனால்டி கிக் வாய்ப்பு வழங்கப்பட்டது.

இதை பயன்படுத்தி 38-வது நிமிடத்தில் ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் மைல் ஜெடினக், டென்மார்க் அணியின் கோல்கீப்பரை ஏமாற்றி வலது புறமாக பந்தை கோல் வலைக்குள் செலுத்தினார். இதனால் ஆட்டம் 1-1 என சமநிலையை எட்டியது. 43-வது நிமிடத்தில் டென்மார்க்கின் லார்சன், பாக்ஸின் மையப்பகுதியில் இருந்து பந்தை தலையால் முட்டி கோல் அடிக்க முயற்சித்தார். ஆனால் அதனை கோல்கீப்பர் முறியடித்தார். இதனால் முதல் பாதி ஆட்டம் 1-1 என சமநிலையில் இருந்தது.

2-வது பாதியில் ஆஸ்திரேலிய அணி கூடுதல் உத்வேகத்துடன் விளையாடியது. 72-வது நிமிடத்தில் ஆரோன் மூய் உதவியுடன் பந்தை பெற்ற தாமஸ் ரோகிக், பாக்ஸ் பகுதிக்கு வெளியே இருந்து இலக்கை நோக்கி தட்டி விட்ட பந்தை ஆஸ்திரேலிய கோல்கீப்பர் ஸ்கிமிசெல் தடுத்தார். இதேபோல் 88-வது நிமிடத்தில் அடுத்தடுத்து இருமுறை ஆஸ்திரேலிய அணியின் கோல் அடிக்கும் வாய்ப்பையும் முறியடித்தார் ஸ்கிமிசெல். கடைசி நிமிடங்களில் அவரது அபார திறனால் டென்மார்க் அணி மேலும் கோல் வாங்குவதில் இருந்து தப்பித்தது.

காயங்களுக்கு இழப்பீடாக வழங்கப்பட்ட 3 நிமிடங்களிலும் இரு அணிகள் தரப்பில் கோல் அடிக்கப்படவில்லை. இதனால் ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிவடைந்தது. இதனால் இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டது. டென்மார்க் அணி தனது முதல் ஆட்டத்தில் பெரு அணியை வீழ்த்தியிருந்தது. அதேவேளையில் ஆஸ்திரேலிய அணி தனது முதல் ஆட்டத்தில் பிரான்ஸ் அணியிடம் தோல்வி கண்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a comment

Your email address will not be published.