இணைய பயன்பாட்டுக்காக தனி செயற்கைக்கோள் செலுத்துகிறது பேஸ்புக்

நியூயார்க்:  முதல் முறையாக இணையதள பயன்பாட்டிற்காக பிரத்யேக செயற்கைக்கோள் ஒன்றை அனுப்புவதற்கு பேஸ்புக் நிறுவனம் முடிவு செய்துள்ளது. உலகம் முழுவதும் பேஸ்புக் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் உலகத்தில் உள்ள அனைவரையும் இணையம் மூலம் எளிதாக இணைப்பதற்காக பேஸ்புக் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. ஏற்கனவே, இந்நிறுவனம் அகுலா என்ற பறக்கும் பலூன் மூலம் சில ஆப்பிரிக்க கிராமங்களுக்கு இணையத்தை வழங்கியுள்ளது. தற்போது நேரடியாக செயற்கைக்கோளை அனுப்புவதற்கு திட்டமிட்டுள்ளது. இணைய பயன்பாட்டிற்கான இந்த செயற்கைக்கோளுக்கு “அதீனா” என பெயர் வைக்கப்பட்டுள்ளது. இது  முழுவதும் இணைய சேவை பயன்பாட்டிற்காக மட்டுமே அனுப்பப்பட உள்ளது.

உலகத்தில் உள்ள அனைத்து நாட்டு மக்களும் செயற்கைக்கோள் மூலமாக இணையத்தை பயன்படுத்தும் வகையில் இந்த செயற்கைக்கோள் உருவாக்கப்பட உள்ளது. இதன் மூலம், அனைவரும் பேஸ்புக்கை மிக எளிதாக பயன்படுத்த முடியும். அது மட்டுமின்றி மற்ற இணைய சேவையை பயன்படுத்தவும் இந்த செயற்கைக்கோள் உதவியாக இருக்கும். இது தொடர்பாக பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜூகர்பெர்க் கூறுகையில், “ உலகம் முழுவதும் எளிதாக இணையம் மூலம் இணைப்பதை குறிக்கோளாக கொண்டே தனி செயற்கைக்கோள் அனுப்பப்பட உள்ளது” என்றார். இந்த செயற்கைக்கோளை இந்த ஆண்டிலேயே செலுத்த பேஸ்புக் திட்டமிட்டிருந்து. ஆனால், எதிர்பாராதவிதமாக உருவான தகவல் திருட்டு பிரச்னை, பங்குகள் சரிவு போன்றவற்றால் இத்திட்டத்தில் தொய்வு ஏற்பட்டது.

எனவே, அடுத்த ஆண்டு மார்ச்சில் செயற்கைக்கோளை விண்ணில் செலுத்த பேஸ்புக் திட்டமிட்டுள்ளது. செயற்கை கோளால் ஏற்படும் பல முக்கிய பயன்களை பேஸ்புக் ரகசியமாக வைத்துள்ளது. ஏற்கனவே, எலோன் மஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் உலகம் முழுவதையும் இணையத்தால் இணைப்பதற்காக அடுத்த சில ஆண்டுகளில் செயற்கைக்கோளை செலுத்த திட்டமிட்டிருந்தது. சாப்ட் பேங்க் நிறுவனம், அமேசானின் ப்ளு ஒரிஜின் நிறுவனங்களும் செயற்கைக்கோள் அனுப்பும் திட்டத்தை வைத்துள்ளன.

Leave a comment

Your email address will not be published.