இதுவரை எங்க ராஜினாமாவுக்கு எந்தப் பதிலும் வரலை; இது நியாயமா?!” ரம்யா நம்பீசன்

“ஒருவேளை சங்கத்திலிருந்து எங்களை நீக்கியிருந்தாலும் கவலையில்லை. அடிப்படை நியாயம் கிடைக்காத இடத்தில் உறுப்பினரா இருந்து என்ன பயன்?”

லையாள நடிகர் சங்கமான ‘அம்மா’வில் நடிகர் திலீப் மீண்டும் சேர்க்கப்படுவதாக எடுக்கப்பட்ட முடிவுக்குப் பல நடிகைகள் எதிர்ப்பு தெரிவித்தனர். டபிள்யூ.சி.சி (பெண்கள் நல கூட்டமைப்பு) அமைப்பைச் சேர்ந்த நடிகைகளான ரம்யா நம்பீசன், கீது மோகன்தாஸ், ரீமா கலிங்கல் மற்றும் பாதிக்கப்பட்ட நடிகை உள்ளிட்டோர் ‘அம்மா’ சங்கத்திலிருந்து ராஜினாமா செய்வதாகவும் அறிவித்தனர். பிரச்னை விஸ்வரூபம் எடுத்ததும், நடிகர் திலீப்பை சங்கத்தில் மீண்டும் சேர்க்கும் முயற்சியிலிருந்து ‘அம்மா’ பின்வாங்கியது. மேலும், சில முக்கியமான பிரச்னைகள் குறித்து விவாதிக்க ஆகஸ்டு 7-ம் தேதி சங்கத்தின் கூட்டத்துக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்தக் கூட்டத்துக்கு, ‘தற்போது சங்கத்தில் உறுப்பினர்களாக இருப்பவர்கள் மட்டுமே கலந்துகொள்ள வேண்டும்’ எனவும் ‘அம்மா’ கூறியிருக்கிறது. இதனால், ராஜினாமா செய்திருக்கும் ரம்யா நம்பீசன் உள்ளிட்ட சில நடிகைகள் கலந்துகொள்ள முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக நடிகை ரம்யா நம்பீசனிடம் பேசினோம்.

ரம்யா நம்பீசன்

“பாதிக்கப்பட்ட எங்கள் தோழிக்கு நியாயம் கிடைக்க வேண்டும். இனி திரைத்துறையில் எந்தப் பெண்ணுக்கும் பிரச்னை வரக்கூடாது என்றுதான் நாங்கள் போராடறோம். எங்க தரப்பு கோரிக்கையை அழுத்தமாகச் சொன்னோம். ஒருகட்டத்தில் ராஜினாமாவும் செய்தோம். இனி, சங்கத்தின் முக்கிய நிர்வாகிகள்தான் நியாயமான முடிவை எடுக்கணும். மீட்டிங்கில் கலந்துகிட்டாலும் இதைத்தான் சொல்வேன். அதனால், கூட்டத்துல கலந்துக்க முடியலையேனு கவலையில்லை. எங்க டபள்யூ.சி.சி அமைப்பைச் சேர்ந்த ரேவதி, பத்மப்ரியா, பார்வதி ஆகியோர் மீட்டிங்கில் கலந்துக்கப் போறாங்க. அவங்க எங்க தரப்பு நியாயங்களைப் பேசுவாங்க. நடிகர் திலீப் விவகாரத்தை மட்டுமே இப்போ பெரிதுபடுத்தி பேசறாங்க. ஆனால், சினிமாவில் பெண் கலைஞர்கள் எல்லோருக்கும் ஆண்களுக்கு இணையான முக்கியத்துவம் கிடைக்கவும் நாங்க வலியுறுத்துறோம். அப்போதான் பெண்களுக்கு எதிரா நடக்கும் பிரச்னைகளுக்கு நியாயமான குரல் வரும்; விரைவில் தீர்வும் கிடைக்கும்.

திலீப்

‘அம்மா’ நிறைய நல்ல விஷயங்களை செய்துட்டிருக்கிறதை நாங்க மனதார பாராட்டுறோம். அதேநேரம், நியாயமான கோரிக்கைகளுக்கு உரிய நடவடிக்கையை எதிர்பார்ப்பதும் எங்களின் தார்மீக உரிமை. ராஜினாமா செய்தது, எங்க சொந்தக் காரணத்துக்காக இல்லை. அதைச் சங்கத்தின் முக்கிய நிர்வாகிகள் உணரணும். அப்போதான் சரியான முடிவை எடுக்க முடியும். தப்பு யார் செய்தாலும் தண்டிக்கப்படணும். அவர் பிரபலமானவர், சிலருக்கு வேண்டப்பட்டவர்னு காப்பாற்றும் நடவடிக்கை இருக்கக் கூடாது. ‘உங்க தரப்பு கோரிக்கையை ‘அம்மா’வின் தலைவர் நடிகர் மோகன்லால் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகளிடம் சொன்னீங்களா?’னு கேட்கிறாங்க. இதுவரை இந்த விஷயம் பற்றி நிறையவே பேசிட்டோம். ராஜினாமாவும் செய்திருக்கிறோம். தனிப்பட்ட முறையில் சொல்லித்தான் அவங்களுக்குத் தெரியணும்னு இல்லையே. உயர் பொறுப்பில் இருக்கும் அவங்க, எங்களை அழைத்துப் பேசியிருக்கணும். அப்படி இதுவரை எதுவும் நடக்கலை” என்கிறார் ரம்யா நம்பீசன்.

Leave a comment

Your email address will not be published.