இது பக்திப் பதிவு அல்ல. கிண்டலடிக்கும் பதிவும் அல்ல. கொஞ்சம் சீரியஸாகவே படியுங்கள்.

அத்திவரதரும் ஹைகார்ப் டயட்டும்

இது பக்திப் பதிவு அல்ல. கிண்டலடிக்கும் பதிவும் அல்ல. கொஞ்சம் சீரியஸாகவே படியுங்கள்.

ஒரே விஷயத்தைப் பற்றித் தொடர்ந்து சிந்திக்கும்பொழுது அது நமக்கு வசப்படும், பல ஒப்பீடுகளைக் காட்டும் என்பது போல.

அத்திவரதரின் 1979 மற்றும் தற்பொழுதைய 2019 புகைப்படங்கள் பார்க்கும்பொழுது உணவு மாற்றங்கள் அதில் விளம்பரங்கள் மற்றும் நாகரீக தாக்கம் என்னவெல்லாம் செய்திருக்கிறது என்ற ஒப்பீடு வந்துவிட்டது.

குறிப்பாக இரு படங்களிலும் பெருமாளுக்குப் பணி செய்யும் பட்டர்களைப் பாருங்கள். 1979 ல் ஒருவருக்குக் கூட உடல் பருமன் இல்லை. 2019 ல் கிட்டத்தட்ட அனைவருமே ஒபிசிடி கேட்டகிரியில் இருக்கிறார்கள்.

40 வருடங்களில் ஆகமத்திலோ, கோவிலின் அன்றாடப் பணிகளிலோ பெரிய மாற்றங்கள் வந்திருக்க வாய்ப்பில்லை.

ஆனால், அன்றாட உணவில்..?

இங்கே முழுக்க நாம் பேசுவது முட்டை கூட உண்ணாத சைவ மக்களைப் பற்றி மட்டுமே.

அரிசி சோறு, காய்கறி, கீரை, பால், பருப்பு, கடலை வகைகள், பழம், எண்ணெய், சர்க்கரை, கோதுமை இவைகளுக்குள் அடங்கிவிடக்கூடிய உணவை வழிவழியாக உண்டு ஒரே போன்ற வேலையையும் வழிவழியாகச் செய்யும் ஒரு மக்கள் 40 ஆண்டுகளில் உணவு சார்ந்து உடல் ஆரோக்கியத்தில் ஏற்பட்ட மாற்றம் என்ன என்பதை உணர்த்தும் படமாகவே இதைப் பார்க்கலாம்.

1980 களில் டெலிவிஷன் பரவலாகத்துவங்கியது.

பாக்கெட்டில் அடைத்து நீண்ட நாட்கள் கெடாமல் இருக்கும் உணவுகள் பரவலாயிற்று.

மேகி முதல் மாருதி 800 வரை அறிமுகமான காலகட்டம்.

உப்பும், கரித்தூளும் உங்கள் பற்களில் கீறலை வரவழைக்கும் என்று கண்ணாடியில் போட்டுத் தேய்த்து கீறலைக் காண்பித்து வறட்டு வெள்ளை டூத்பேஸ்ட்டா என்று அதற்கும் ஆப்பு வைத்து வாயைத்திறந்தாலே ரோஜா மணம் வீசும் என்று க்ளோசப் பேஸ்டுகள்தான் பற்களைக் காக்கவந்த மீட்பர் என்று கருப்பு வெள்ளை டீவிகளில் சத்தியம் செய்தார்கள். இன்றைக்கு உங்க டூத்பேஸ்டில் உப்பும் கரித்தூளும் இருக்கா ? என்று அதே கம்பெனி நம்மையே திரும்பக் கேட்கிறார்கள்.

நெய்க்கு மாற்று வனஸ்பதி. கோதுமை நல்லது. கேஸ் சிலிண்டர்களில் சமைத்தால் ஆபத்தில்லை என்று சிலிண்டர் கனெக்‌ஷன்கள் கூவி விற்கப்பட்டது. ரெப்ரிஜிரேட்டர்கள், க்ரைண்டர்கள், மிக்ஸிகள் வி ஜி பிக்களால் அத்தியாவசியமாகின.

புழு மாதிரி இருக்கே? மனுஷன் தின்பானா என்று முகம் சுளித்த மேகி நூடுல்ஸை மக்கள் கூடுமிடங்களில் இலவசமாக சமைத்து சாப்பிடக்கொடுத்தார்கள். இட்லி, தோசையில் இல்லாத வைட்டமின்கள், காய்கறிகள் இதிலுண்டு என்று துண்டு போட்டுத் தாண்டினார்கள்.

ஜுனூனும், மகாபாரதமும் மக்களை டிவி முன்னால் கட்டிப்போட்டது.

சபீனாவில் தேய்த்தால்தான் பாத்திரம் பளிச்சிடும் என்று ஆராய்ச்சிகளில் கண்டுபிடித்தார்கள்.

அதிகம் வெயிலில் விளையாடி, சைக்கிள் மிதித்த அந்தக் காலம் 40 ஆண்டுகளில் வெகுவாக மாறிவிட்டது.

தின்ற ஹை கார்ப் எனும் மாவுச்சத்து உணவுகளோடு, ருசிக்கான உணவு சாத்தான்கள் அதிகரித்துவிட்டன. பிஸ்கெட் இல்லாத காலை காப்பிக்கள் ஒரு மாதிரி ஆகிப்போனது.

முதலடி குழந்தைகளுக்கான உணவில் ஆரம்பித்தது. பாட்டியோ, அம்மாவோ, அத்தையோ, அக்காவோ வட்டமாக தரையில் உட்காரவைத்து ஒன்றாக உண்ட சத்தான காலங்கள் மலை ஏறின. பாரெக்ஸ், புட்டிப்பால், ஆவின் பாக்கெட் பால், ஐஸ் க்ரீம், மில்கா ப்ரெட்கள், லிம்கா, கோல்ட் ஸ்பாட், சன் ப்ளவர் ஆயில் என்று டிவி எனும் சனியனால் நாம் நம்பவைக்கப்பட்டு கழுத்தை அறுத்தவைகள் ஏராளம்.

இண்ட் சுசுகி, ஹீரோ ஹோண்டா, டி வி எஸ் 50 பரவலானபிறகு நடைகள் குறைந்தது, உடலுழைப்புகள் குறைந்தது. காம்ப்ளானும், ஹார்லிக்ஸும் குடிக்காவிட்டால் எலும்புகள் பலமிழந்து, குழந்தைகள் வளர்ச்சி அடையாமல் வம்சாவளியே காணாமல் போய்விடுமென்று பயமுறுத்தினார்கள். நிர்மா போடாவிட்டால் வெள்ளைத்துணிகளுக்கு விமோசனமே இல்லை என்றாகிப்போனது.

பானுமசாலா பான்பராக்கை தூர்தர்ஷன் நாடெங்கும் கொண்டு சேர்த்தது. வனஸ்பதி இல்லாத சமையல் சமையலே இல்லை. மீல் மேக்கரே சைவ சிக்கன்.

உணவு மட்டும் மாறவில்லை, கார்போஹைட்ரேட்டும், இனிப்புகளும், உணவில் சர்க்கரையும் கூடிக்கொண்டே சென்றது.

40 வருடங்களில் நுகர்வோர் எனும் ப்ராய்லர் கோழிகளான நமக்கு நாம் உண்ணும் தீனிகளை மாற்றி நம்மை அறியாமலேயே கொழுக்க வைத்தார்கள். ஒரு ஸ்டெதஸ்கோப்பை மாட்டிக்கொண்டு தெருமுனையில் க்ளினிக் வைத்து, நாடிபிடித்து, திரும்ப உட்காரச்சொல்லி, நல்லா மூச்ச உள்ள இழுத்து விடுங்க என்று பரிசோதித்த சர்வ ரோக கண்டுபிடிப்பு டாக்டர்கள் காணாமல் போய், ஸ்பெசலிஸ்ட்கள் பெருகும் அளவிற்கு வித விதமான நோய்கள், ஆயிரக்கணக்கில் மருத்துவமனைகள், லட்சக்கணக்கில் பார்மஸிகள் என்று மாற்றப்பட்ட நுகர்வோர் எனும் கோழித்தீவனம் பல கதவுகளைத் திறந்தது.

வெறும் 40 வருடங்களில் அத்திவரதர் நமக்குச் சொல்லும் பாடம் இதுதான். இது தொடர்ந்தால் 2059 ல் பூஜை செய்ய ஐயங்கார் ரொபோட்கள் மட்டுமே மீதம் இருக்கும். கன்வேயர் பெல்ட்டில் இன்சுலினை ஏற்றிக்கொண்டே அத்திவரதரைப் பார்க்கும் நிலையும் வரலாம்.

ஒவ்வொரு 40 வருடங்களுக்கொருமுறையும் நாம் புதிய வகை நோயாளியாக்கப்படுகிறோம். மெல்லக் கொல்லும் விஷமாக நம் உணவு மாற்றப்படுகிறது. நவீனம் என்று நம்பி நரக வாழ்வை வாழ்கிறோம்.

எது நல்ல உணவு? எது ஆரோக்கியமானது? இவ்வளவு அறிவும், அறிவியலும் இல்லாத காலகட்ட நம் முன்னோர்களை குறைந்தபட்சம் உடல்பருமனிலிருந்தாவது காத்த உணவு எது என்பதை சிந்திக்கவே 5 மணி நேரம் நடக்கவைக்கிறார் அத்திவரதர். 2059 லாவது கேடுகெட்ட உணவுகளைப் புறக்கணித்து பலமுடனும், ஆரோக்கியத்துடனும் அவரைச் சேவிக்க நல்லுணவு ஞானத்தை வளர்த்துக்கொள்வோம். நம் குழந்தைகளுக்கும் கற்றுத்தருவோம்.

ஆகமவிதிக்கெதிராக அத்திவரதரின் உணவு மாறவில்லை. ஜெனடிக் விதிக்கெதிராக பக்தர்களின் உணவு மாறிவிட்டது.

அனைத்தும் அத்தி வரதருக்கே வெளிச்சம்…!

நன்றி…🙏🏽
✨வாழ்க வளமுடன், நலமுடன்✨