AI எனப்படும் செயற்கை நுண்ணறிவு திறன் தற்போது அனைத்துத் துறைகளிலும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஸ்மார்ட்போன்களில்கூடப் பரவலாகிவிட்ட இந்தத் தொழில்நுட்பத்தைக் கொண்ட டிவி-யை இப்போது இந்தியாவில் அறிமுகப்படுத்தியிருக்கிறது எல்ஜி நிறுவனம்.
OLED, Super UHD மற்றும் UHD என பல்வேறு வகைகளில் 25-க்கும் மேற்பட்ட டிவிகள் கடந்த திங்கள்கிழமையன்று அறிமுகப்படுத்தப்பட்டிருக்கின்றன. 32,500 (32-இன்ச்) ரூபாயிலிருந்து தொடங்கும் இந்த டிவி-களின் விலை அதிகபட்சமாக 29,49,990 (77-இன்ச்) ரூபாய் வரை விலை நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது.
எல்ஜி நிறுவனத்தால் ThinQ என்று அழைக்கப்படும் இந்தப் புதிய தொழில்நுட்பத்தைக் கொண்ட டிவிகள் வெளிநாடுகளில் முன்னரே அறிமுகப்படுத்தப்பட்டுவிட்டன. எதிர்காலத்தில் இந்தத் தொழில்நுட்பம் பரவலாகப் பயன்படுத்தப்படும் என்றும், எனவே அதை முன்னரே மக்களிடம் கொண்டு சேர்ப்பது மட்டுமின்றி முற்றிலும் புதிய அனுபவத்தை இந்த டிவிகள் மூலமாகப் பெற முடியும் என எல்ஜி நிறுவனம் தெரிவித்திருக்கிறது. இந்தப் புதிய டிவிகள் வாய்மொழியாக இடப்படும் கட்டளைகளைப் புரிந்துகொண்டு அதற்கேற்றபடி செயல்படும். இதனுள்ளே 800-க்கும் மேற்பட்ட கமென்ட்கள் பதிந்து வைக்கப்பட்டிருக்கின்றன, இவை இணைய இணைப்பு இல்லாமல் செயல்படும்.