இந்தியாவில் கூட்டணி அரசியல் தற்போது அவசியமாகியுள்ளது: தமாகா தலைவர் ஜி.கே.வாசன் கருத்து

தமிழகத்தில் மட்டுமல்ல இந்திய அளவில் கூட்டணி அரசியல் அவசியமாகி உள்ளது என தமாகா தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.

தமாகா சார்பில் காமராஜர் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் சென்னை அரும்பாக்கம் எம்.எம்.டி.ஏ. காலனியில் நேற்றுமுன்தினம் நடைபெற்றது. இந்த பொதுக்கூட்டத்துக்கு கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் தலைமை தாங்கினார்.  மூத்த துணை தலைவர்கள் பி.எஸ்.ஞானதேசிகன், கோவைத்தங்கம், பொதுச்செயலாளர்கள் விடியல் சேகர், ஏ.ஞானசேகரன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

கூட்டத்தில் ஜி.கே.வாசன் பேசியதாவது: காமராஜரின் ஆட்சிக்கு பிறகு யாராலும் அவரின் பொற்கால ஆட்சியை கொடுக்க முடியவில்லை. மத்திய பாஜக அரசும், அதிமுக அரசும் மக்களின் எண்ணங்களை பிரதிபலிக்கவில்லை.

காமராஜர் ஆட்சியில் பொதுநல அரசியல் இருந்தது. இன்றைக்கு சுயநல அரசியல்தான் இருக்கிறது. அன்று தொலைக்குநோக்கு பார்வையில் திட்டங்கள் நிறைவேற்றப்பட்டன. இன்று குறுகிய பார்வைதான் இருக்கிறது.

கிராமங்கள்தோறும் காமராஜர் பள்ளிகளை திறந்தார். இன்று கிராமங்கள்தோறும் டாஸ்மாக் கடைகள்தான் இருக்கின்றன. காமராஜர் தனது ஆட்சியில் அணைகளை கட்டி பாசனத்துக்கு வித்திட்டார்.

ஆனால், தற்போது விவசாய நிலங்கள் வீட்டு மனைகளாக மாறி வருகின்றன. காமராஜர் ஆட்சியில் தொழில் புரட்சி ஏற்பட்டது. தற்போது தொழில்துறை பரிதாப நிலையில் உள்ளது. மணல் கொள்ளை, விதிமீறல்களால் கட்டுமான தொழில் கடும் பாதிப்படைந்துள்ளது. பெட்ரோல், டீசல் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. மக்களுக்கு மேன்மேலும் ஏற்படும் சுமையை குறைக்க அரசு தயாராக இல்லை.

தமிழகத்தில் மட்டுமல்ல இந்திய அளவில் கூட்டணி அரசியல் அவசியமாக உள்ளது. நல்லவர்களுடன் இணைந்து நாடாளும் நேரம் நெருங்கி கொண்டிருக்கிறது. தேர்தலில் தமாகா தவிர்க்க முடியாத சக்தியாக இருக்கும்.

Leave a comment

Your email address will not be published.