`இந்தியாவுடன் நல்லுறவைப் பேண விரும்பும் பாகிஸ்தானியர்களில் நானும் ஒருவன்!’ – இம்ரான் கான் உருக்கம்

‘காஷ்மீர் விவகாரத்தில் இந்தியாவும் பாகிஸ்தானும் பேசித் தீர்வுகாண வேண்டும்’ என்று பாகிஸ்தான் தேர்தலில் அதிக தொகுதிகளை வென்ற பாகிஸ்தான் தெஹ்ரீக் இ இன்சாஃப் கட்சித் தலைவர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.

இம்ரான் கான்

பாகிஸ்தானில் நேற்று, நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்று முடிந்தது. இதுவரை வந்துள்ள தேர்தல் முடிவில், ஓய்வுபெற்ற கிரிக்கெட் வீரர் இம்ரான் கானின் கட்சியான பாகிஸ்தான் தெஹ்ரிக்-இ-இன்ஃசாப் அதிக தொகுதிகளைக் கைப்பற்றியுள்ளது. இருப்பினும், அந்தக் கட்சி ஆட்சி அமைக்கும் அளவுக்கு பெரும்பான்மை பெறவில்லை.

இந்த நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய இம்ரான் கான், “வாக்களித்த பாகிஸ்தான் மக்களுக்கும் வெற்றியை தேடித்தந்த இறைவனுக்கும் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். 22 ஆண்டுக்காலப் போராட்டத்துக்கும் கிடைத்த வெற்றி. இந்தியாவுடன் நல்லுறவைப் பேணவே விரும்புகிறேன். குறிப்பாக, வணிக விவகாரங்களில் நட்புடன் இருக்கவே விரும்புகிறேன். கிரிக்கெட் போட்டியின் காரணமாக, நான் இந்தியா முழுவதும் பயணப்பட்டிருக்கிறேன். இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் காஷ்மீர் விவகாரம் மிகப்பெரிய பிரச்னையாக உள்ளது. காஷ்மீர் பிரச்னையை இரு நாடுகளும் பேசித் தீர்க்க வேண்டும். இந்தியா விரும்பினால், இரு நாடுகளுக்கிடையே உறவை வலுப்படுத்த விரும்புகிறேன். இரு நாடுகளுக்கிடையே உறவு வலுப்படுவது நமது பிராந்தியத்துக்கு நன்மை பயக்கும்.

நாம் இன்னும் முதல் கட்டத்திலேயே இருக்கிறோம். இந்தியா, பலுசிஸ்தானைப் பார்க்கிறது. பாகிஸ்தான், காஷ்மீரைப் பார்க்கிறது. மாறி மாறி குற்றம் சாட்டும் விளையாட்டை நிறுத்த வேண்டும். காஷ்மீர் விவகாரத்தில் சமாதானமாகச் செல்ல இந்தியா ஓர் அடி எடுத்துவைத்தால், நாங்கள் இரண்டு அடி எடுத்துவைப்போம். எதிர்க்கட்சிகள் அழுது ஏமாற்றுகின்றன. ராணுவ ஒத்துழைப்பின் உதவியால் நான் வெற்றிபெற்றதாக ஏமாற்றுகின்றனர்.

கடந்த சில மாதங்களாக, இந்திய ஊடகங்கள் என்னைச் சித்திரித்த விதம், என்னை மிகவும் வேதனையடையச் செய்தது. பாலிவுட் பட வில்லன் பாணியில் நான் உருவகப்படுத்தப்பட்டேன். இந்தியாவுடன் நல்லுறவைப் பேண விரும்பும் பாகிஸ்தானியர்களில் நானும் ஒருவன்’’ என்று தெரிவித்தார்.

Leave a comment

Your email address will not be published.