இந்திய தொழில்முனைவோர் குழு கண்டறிந்த பெண்கள் பாதுகாப்பு கருவிக்கு 10 லட்சம் டாலர் பரிசு

இந்திய இளம் தொழில்முனைவோர் குழு கண்டறிந்த, பெண்கள் பாதுகாப்புக் கருவிக்கு 10 லட்சம் டாலர் பரிசுத் தொகை கிடைத்துள்ளது. உடலில் அணிந்துகொள்ளும் வகையிலான இந்தக் கருவியின் மூலம் தங்களை யாராவது அச்சுறுத்தினாலோ அல்லது தாக்கினாலோ அது குறித்த தகவல்களை பெண்கள் அவசர செய்தியாக பிறருக்கு அனுப்ப முடியும்.

இந்திய-அமெரிக்க சமூக சேவையாளர்களான அனு மற்றும் நவீன் ஜெயின் முன்னெடுத்த ‘பெண்கள் பாதுகாப்பு எக்ஸ்பிரைஸ்’ என்ற இந்தப் போட்டியில் 18 நாடுகளைச் சேர்ந்த 85 அணிகள் கலந்துகொண்டன. இதில் புதுடெல்லியைச் சேர்ந்த லீஃப் வியரபில்ஸ் நிறுவனம் இறுதி சுற்றுக்கு தகுதி பெற்றிருந்தது. லீஃப் வியரபில்ஸ் நிறுவனம், ஐஐடி டெல்லி மற்றும் டெல்லி தொழில்நுட்ப பல்கலைகழகத்தைச் சேர்ந்த மாணவர்களால் தொடங்கப்பட்ட ஸ்டார்ட் அப் நிறுவனமாகும். இந்த நிறுவனத்தின் ‘சேஃபர் ப்ரோ’ என்ற கருவிக்கு இந்தப் போட்டியில் பரிசு கிடைத்துள்ளது.

பெண்கள் பாதுகாப்புக்கு தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதை குறிக்கோளாகக் கொண்டு அனு மற்றும் நவீன் ஜெயின் இருவரும் எக்ஸ்பிரஸ் என்ற என்ஜிஓவுடன் இணைந்து இந்தப் போட்டியை ஏற்பாடு செய்திருந்தனர். போட்டியில் கலந்துகொள்ளும் அணிகள் 40 டாலருக்கும் அதிகமான தொகையில், இணையத்தை பயன்படுத்த வேண்டிய தேவை இல்லாத வகையில் ஒரு கருவியை வடிவமைக்க வேண்டும். பெண்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படும்போது இந்தக் கருவி 90 விநாடிகளுக்குள் இதுகுறித்த தகவல்களை சரியான நபர்களுக்கு தெரிவிக்கவேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டிருந்தது. இந்தப் போட்டியில் லீஃப் வியரபில்ஸ் நிறுவனத்தைச் சேர்ந்த மாணிக் மேத்தா, நிஹாரிகா ராஜீவ் மற்றும் அவினாஷ் பன்சால் ஆகியோர் வெற்றிபெற்று 10 லட்சம் டாலர் பரிசுத்தொகையை வென்றுள்ளனர்.

இந்தக் கருவியின் மூலம் ஆடியோ தகவல்களையும் சேமிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. இதனை குற்றச் சம்பவங்களில் ஆதாரமாக பயன்படுத்த முடியும். இந்தக் கருவியைப் பயன்படுத்துவதற்கு வைஃபை, செல்போன் போன்ற எந்த வசதியும் தேவை இல்லை. இது எதுவும் இல்லாமல் பாதிக்கப்பட்ட பெண் எந்த இடத்தில் இருக்கிறார் என கண்டறியமுடியும் என நவீன் ஜெயின் கூறினார். அமெரிக்கா, சுவிட்சர்லாந்து மற்றும் இந்தியாவை சேர்ந்த 5 அணிகள் இறுதி போட்டியில் இடம்பிடித்திருந்தன. உடல் அசைவுக்கு ஏற்ப அவசர தகவல்களை அனுப்பும் கருவி, அணிகலன் மாதிரியில் உடலில் அணியத்தக்க கருவி என பலவகையான பாதுகாப்புக் கருவிகள் இந்தப் போட்டியில் இடம்பெற்றிருந்தன. டெல்லியில் நிகழ்ந்த நிர்பயா கூட்டு பாலியல் வன்கொடுமை இந்தக் கருவியை உருவாக்குவதற்கான உந்துதலை ஏற்படுத்தியதாக லீஃப் வியரபில்ஸ் இணை நிறுவனர் மாணிக் மேத்தா கூறினார்.

Leave a comment

Your email address will not be published.