“இனி பாஸ்வேர்டே தேவையில்லை – கூகுளின் புதிய தயாரிப்பு அறிவிப்பு”

இணையதளங்களில் ஒருவரின் தனிப்பட்ட தகவல்களை பாதுகாக்கும் கடவுச்சொல்லுக்கு மாற்றாக கூகுள் நிறுவனம் “டைட்டன் செக்யூரிட்டி கீ” என்னும் புதிய தயாரிப்பை அறிமுகம் செய்துள்ளது.

உலகம் முழுவதும் பல இணையதளங்கள் ஹேக் செய்யப்பட்டு பயனரின் தனிப்பட்ட தகவல்கள் பொதுவெளியில் வெளியாகும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. கடினமான கடவுச்சொல் அமைப்பது மட்டுமல்லாமல், பயன்படுத்தும் இணையதளங்களின் பாதுகாப்பை பரிசோதிப்பது, 2 கட்ட கடவுச்சொல் சரிப்பார்ப்பை பயன்படுத்துவது போன்ற பல பாதுகாப்பு சார்ந்த விடயங்கள் வல்லுநர்களால் பயனர்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது.

இனி பாஸ்வேர்டே தேவையில்லை - கூகுளின் புதிய தயாரிப்பு அறிவிப்பு

இந்நிலையில், உலகம் முழுவதுமுள்ள தனது 85,000 பணியாளர்களின் கடவுச்சொல் பாதுகாப்புக்கு பென் ட்ரைவ் போன்ற ஒரு பாதுகாப்பு கருவியை பயன்படுத்தி வருவதாக தெரிவித்த சில தினங்களில் கூகுள் நிறுவனம் “டைட்டன் செக்யூரிட்டி கீ” என்னும் புதிய தயாரிப்பை அறிமுகம் செய்துள்ளது.

அதாவது, இந்த கீயை உங்களது கணினியில் சொருகிவிட்டால் குரோம் உலாவியில் (புரௌசர்) ஃபேஸ்புக், ட்ராப்பாக்ஸ் போன்ற இணையதளங்களை எவ்வித கடவுச்சொல்லையும் பதிவிடாமல், ஒரு கிளிக்கில் பயன்படுத்த முடியும்.

இந்த கீயை முதல் முறையாக பயன்படுத்தும்போது மட்டும் கடவுச்சொல்லை பதிவிட்டால் அது பயனரின் கணினி மற்றும் கடவுச்சொல் பதியப்பட்டுள்ள இணையதளம் போன்றவற்றை எவரும் திருடமுடியாத என்க்ரிடட் வடிவில் சேமித்துக்கொள்ளும்.

தற்போதைக்கு கூகுளின் கிளவுட் சேவை பயன்பாட்டாளர்களுக்கு மட்டுமே அறிவிக்கப்பட்டுள்ள இந்த கருவி, விரைவில் மற்ற பயன்பாட்டாளர்களுக்கும் விற்பனைக்கு வரும் என்று கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது.

Leave a comment

Your email address will not be published.