கடலில் மீன்களின் எண்ணிக்கை குறைவது பற்றிய எச்சரிக்கைகள் ஏற்கனவே கொடுக்கப்பட்டதுதான். இருந்தும் இந்தப் பிரச்னையின் வீரியம் அதிகரித்திருக்கிறதே தவிரக் குறையவில்லை.

உலகின் 70 சதவிகித நிலப்பரப்பைத் தன்னகத்தே கொண்டிருக்கிறது கடல். மனித இனத்தின் வரலாற்றுப் பாதையில் ஒருங்கிணைந்து பயணித்துப் பல்வேறு முன்னேற்றங்களை அவனுக்களித்த பெருமை பெருங்கடல்களையே சேரும்.உயிர்களின் தோற்றத்தை தொடங்கி வைத்ததிலிருந்து சூழலியல் பயன்கள், வணிகத்தில் பரிணாம வளர்ச்சி, அவற்றோடு உணவு தேவை என்று கடல் செய்த சேவைகள் எண்ணிலடங்காதவை. சுற்றுச்சூழல் பாதுகாப்பு, சூழலியல் விழிப்புஉணர்வு மற்றும் பல சூழலியல் செயற்பாடுகள் நிலப்பரப்பைச் சார்ந்ததாகவே பெரும்பாலும் இருந்துவருகிறது. கடல் உணவுகளின் உற்பத்தி மற்றும் பற்றாக்குறையில் ஏற்பட்டிருக்கும் சிக்கல்களைச் சில கடலியலாளர்களும், கடலியல் விஞ்ஞானிகளும் கண்டறிந்துள்ளனர். கடலின் பல்லுயிர்ச் சூழல் குறைந்துவருவதும், மனிதர்களின் அதீத நுகர்வால் மீன்களின் இனப்பெருக்கத்தில் ஏற்படும் சிக்கல்களும் வருங்கால மீன் உணவுகளைக் கேள்விக்குறியாக்கிவிடும் போலிருக்கிறது.
21-ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் கடலியல் விஞ்ஞானிகளால் நடத்தப்பட்ட ஆய்வுகளின் மூலம் அப்போதே நாம் அதிகம் காணப்படும் மீன் வகைகளில் 75 சதவிகிதத்தை முழுமையாக நுகர்ந்து தீர்த்துவிட்டதாகப் பதிவுசெய்திருக்கிறார்கள். 2008-ம் ஆண்டில் சில சமூகவியல் பேராசிரியர்களோடு இணைந்து கடலியலாளர்கள் மீனவர்களிடையே ஆய்வு நடத்தினர். கிட்டத்தட்ட கடலின் வேட்டையாடி மீன்களில் 90 சதவிகிதம் வகைகளை நாம் அப்போதே இழந்துவிட்டிருந்தோம். அதீத நுகர்வாலும், அதிகப்படியான மீன் பிடித்தலாலும் கடலின் மீன் இருப்பு குறைவது மனிதர்கள் மத்தியில் உணவுப் பற்றாக்குறையை ஏற்படுத்துவது மட்டுமே பிரச்னையில்லை. அது கடலின் சுற்றுச்சூழலிலேயே பாதிப்பை ஏற்படுத்தும். சிறு மீனைச் சார்ந்திருக்கும் பெரு மீன்களும், சிறு மீன்களின் அழிவோடு சேர்ந்து அழிவைச் சந்திக்கும். அதைப்போலவே அதீத நுகர்வால் விளையும் பெரு மீன்களின் அழிவு, யாரும் சாப்பிட இயலாத சிறு மீன்களின் எண்ணிக்கையைப் பெருக்கி மற்ற உயிரினங்களின் வாழிடத்தைக் கேள்விக் குறியாக்கலாம். இதைப் போல் பல்வேறு சூழலியல் மாற்றங்களை அதீத மீன் பிடித்தல் விளைவிக்கும்.
உலகளவில் சுமார் 320கோடி மக்கள் தங்களக்குத் தேவைப்படும் புரதச் சத்துக்காக அன்றாட உணவில் மீன்களைச் சார்ந்து வாழ்கிறார்கள். 2016-ம் ஆண்டின் ஐ.நா அறிக்கைப்படி, அதற்காக அவர்கள் வருடத்திற்கு 15கோடி மெட்ரிக் டன் மீன்களைச் சாப்பிடுகிறார்கள். அந்தத் தேவை இந்த மாதம் வெளியான 2018-ம் ஆண்டின் அறிக்கைப்படி 17.1 கோடி மெட்ரிக் டன்னாக உயர்ந்துள்ளது. உலக மக்கள் தொகை அடுத்த சில பத்தாண்டுகளில் மேலும் ஒரு பில்லியன் அதிகமாகுமென்று கணிக்கப்படுகின்றது. மீன்பிடித் துறையைச் சேர்ந்தவர்கள் மீன்களுக்கான தேவை அதிகமாகுமென்று கணித்துள்ளனர். அதற்கேற்ப மூலதனத்தை அதிகப்படுத்த வேண்டுமென்றும் மீன்பிடி முறையை மேலும் எளிமை மற்றும் நவீனப்படுத்த வேண்டுமென்று ஆலோசித்து வருகின்றனர். ஆனால், அவர்கள் எளிமையாகப் பிடிப்பதற்கும், விற்பதற்கும் போதுமான அளவு மீன்கள் கடலில் இருக்கவேண்டுமே!
உலகளாவிய மீன் உணவுக்கான தேவையைச் சரிக்கட்டும் அளவிற்கு மீன்களின் உற்பத்தி எதிர்காலத்தில் கிடைக்குமாவென்பது சந்தேகமே. மீன் உற்பத்தி நிச்சயமாகப் போதுமான அளவு கிடைக்குமென்று உறுதியளிக்க முடியாமல் போவதற்கு அநேக காரணங்கள் உள்ளன. அவர்கள் இனப்பெருக்கம் செய்வதற்குப் போதுமான வளர்ந்த மீன்களை விட்டுவைப்பதில்லை. அப்படியே வளர்ந்த மீன்களைப் பிடித்தாலும், வளரும் மீன்களையாவது விட்டுவைக்க வேண்டும். தற்போதைய கார்ப்பரேட் மீனவர்கள் அதைச் செய்வதில்லை. முழுக்க முழுக்க வணிகரீதியிலான அவர்களது மீன்பிடி முறை கடல்வளத்தின் இருப்போடு தொடர்பு கொண்டதல்ல. அவர்களுக்குத் தேவையெல்லாம் லாபம் மட்டுமே. அந்தக் கார்ப்பரேட் மீனவர்களின் டிராலர்களால் அற்பாயுளில் ஆயிரக்கணக்கான மீன் குஞ்சுகள் அழிந்துள்ளன.
ஐ.நா-வின் உணவு மற்றும் விவசாய அமைப்பு (Food and agriculture organisation) கடலியல் மற்றும் மீன்வளம் தொடர்பாக இந்த மாதம் அறிக்கையொன்றை வெளியிட்டது. இந்த அமைப்பு வகுத்துள்ள மீன் உற்பத்தியையும் கடல் மற்றும் மீன் வள மேம்பாட்டையும் அடைவது நடப்பதற்கான சாத்தியங்கள் இல்லையென்று அவர்களே கூறியுள்ளார்கள். சட்டவிரோத மீன்பிடி முறைகள், அளவுக்கு அதிகமாக மீன் பிடித்தல், கடலில் கொட்டப்படும் குப்பைகள் மற்றும் தொழிற்சாலைக் கழிவுகளால் வளம் சீரழிவது போன்றவற்றால் அவர்களால் குறிபிட்ட இலக்கினை அடைய முடியாதென்கிறது அந்த ஆய்வறிக்கை.
தேவைக்கும் பற்றாக்குறைக்கும் மலைக்கும் மடுவுக்குமான வித்தியாசங்கள் இருந்தாலும், உற்பத்தியிலிருக்கும் குறைபாடுகளைக் களையவும் கடல் வளத்தைக் காக்கவும் ஐ.நா சில நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. மீன் பிடித்தலில் சில கடுமையான கட்டுபாடுகளை ஏற்படுத்துவது குறித்து ஆலோசித்து வருகிறார்கள். மீன் வளத்தைப் பெருக்குவதில் விஞ்ஞானப் பூர்வமான நடவடிக்கைகளை எடுப்பதுகுறித்து ஆய்வு நடத்திவருகிறார்கள். சட்டவிரோத மீன் பிடித்தல் மற்றும் அழிவை ஏற்படுத்தும் மீன்பிடி முறைகளைக் கட்டுப்படுத்த வலிமையான சட்ட விதிகளை விதித்துள்ளார்கள்.
“”கடல் மொத்தமும் சாப்பிடுவதற்கு உகந்த மீன்களின் எண்ணிக்கை எண்ணமுடியாத வகையிலிருப்பதாக நாம் நம்பிக் கொண்டிருந்தோம். அந்த மீன் வளத்தில் பாதிக்கும் மேல் இப்போது அழிந்துவிட்டது. 25 வருடங்களுக்கு முன்பிருந்ததைவிட இரண்டு மடங்கு மீன்பிடிக் கப்பல்கள் கடலில் உலவிக் கொண்டிருக்கிறது. ஆனால், அதைப்போலவே மீன்வளமும் இரண்டு மடங்கு அதிகரித்துள்ளதா? இந்தப் பற்றாக்குறை எப்படி உருவானது?” – எம்ப்டி ஓஷன் (Empty ocean), ரிச்சர்ட் எல்லீஸ் (Richard Ellis).