முட்டையை சமைத்தோ, அரை வேக்காடாகவோ, முழுமையாக வேகவைத்தோ, அல்லது ஆம்லேட்டாகவோ எந்த வடிவில் சாப்பிட்டாலும், அது இளம் குழந்தைகளின் வளர்ச்சியை ஊக்குவிக்கும்.
வளர்ச்சி குறைவைத் தடுக்கும் எளிய, மலிவான, எளிய வழி இது என்று `பீடியாட்ரிக்ஸ்` சஞ்சிகையில் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
குழந்தையின் முதல் இரண்டு வருடங்கள், அதன் வளர்ச்சிக்கும் அபிவிருத்திக்கும் முக்கியமானது.
வயதுக்கு குறைந்த வளர்ச்சி
உயரமாக வளர்வதற்கான முக்கியத் தடை ஊட்டச்சத்துக் குறைபாடுதான். சிறுவயதில் ஏற்படும் நோய்தொற்றுகளும், நோயும் குழந்தைகளின் உயரத்தை பாதிக்கின்றன.
உலக சுகாதார நிறுவனத்தின் கூற்றுப்படி, ஐந்து வயதுக்கு குறைவான 155 மில்லியன் குழந்தைகள் தங்கள் வயதிற்கு ஏற்ற உயரத்தில் இல்லை, குள்ளமாக இருக்கிறார்கள்.
முட்டை விருந்துகள்
ஆய்வில் எடுத்துக்கொண்ட160 இளம் குழந்தைகளில் பாதிக்கு மேற்பட்டவர்கள் தினமும் ஒரு முட்டை உட்கொண்டனர், அவர்கள், எஞ்சியவர்களுடன் (தினமும் ஒரு முட்டை சாப்பிடாத, ஆனால் ஆராய்ச்சிக்கு உட்படுத்தப்பட்டவர்களுடன்) கண்காணிக்கப்பட்டு, ஒப்பீடு செய்யப்பட்டனர்.
குழந்தைகளின் வீடுகளுக்கு வார்ந்தோறும் சென்ற ஆய்வாளர்கள், முட்டையால் அலர்ஜி ஏற்பட்டதா என்பது உட்பட, முட்டை கொடுப்பதால் குழந்தைகளுக்கு வேறு ஏதேனும் பிரச்சனை வருகிறதா என்பதையும் கண்காணித்தார்கள்.

ஆறு மாத ஆய்வின் முடிவில் ஆச்சரியமான வித்தியாசம் தெரிந்த்து. முட்டை சாப்பிடாத குழுவினரை விட முட்டைச் சாப்பிட்ட 47% குழந்தைகளின் வளர்ச்சி விகிதம் அதிகமாக இருந்தது.
ஆய்வின் துவக்கத்தில் தங்கள் வயதுக்கு குறைவான வளர்ச்சியுள்ளவர்களாக கருதப்பட்ட, முட்டை சாப்பிட்ட குழந்தைகளின் வளர்ச்சிகூட, ஆய்வின் முடிவில் ஒப்பீட்டளவில் அதிகரித்திருந்த்து.
தினமும் முட்டை சாப்பிட்ட குழுவில் இருந்த குழந்தைகளின் உயரம் குறிப்பிடத்தக்க அளவு அதிகரித்திருந்தது.
குழந்தை பிறந்த முதல் ஆறு மாதங்களுக்கு தாய்ப்பால் மட்டுமே கொடுத்தால், அவர்கள் வளர்ச்சி சீராக இருப்பதுடன், ஆரோக்கியமாகவும் இருப்பார்கள் என்று உலக சுகாதார நிறுவனம் தாய்மார்களுக்கு பரிந்துரை செய்கிறது.
ஆறு மாதங்கள் பூர்த்தியான குழந்தைகளுக்கு, தாய்ப்பாலுடன், ஊட்டச்சத்து மிகுந்த பிற உணவுகளையும் கொடுக்கலாம். குழந்தைக்கு இரண்டு வயதாகும் வரை அல்லது அதற்கு மேலும் தாய்ப்பால் கொடுக்கலாம் என்றும் உலக சுகாதார நிறுவனம் கூறுகிறது.
“முட்டையில் பல ஊட்டச்சத்துக்கள் உள்ளன. குழந்தைகளின் உணவில் பல்வேறு வகைகள் இருக்கவேண்டும், குழந்தைகளுக்கு தேவைப்படும் வைட்டமின்கள், தாதுப்பொருட்கள் மட்டுமல்லாமல், பல்வேறு விதமான உணவுகளையும், மாறுபட்ட சுவைகளையும் சாப்பிட அனுமதிக்கவேண்டும்” என்று பிரிட்டிஷ் ஊட்டச்சத்து அறக்கட்டளை அறிவுறுத்துகிறது.
“குழந்தைகளின் உணவில் புரதச்சத்து நிறைந்திருக்கவேண்டும். முட்டை மட்டுமல்ல, பீன்ஸ், பருப்பு, மீன், குறிப்பாக எண்ணெய் மீன், இறைச்சி மற்றும் பால் பொருட்கள் அவர்களின் உணவில் இடம்பெறவேண்டும்.”