ஈரானில் உணவு, தங்குவதற்கு இடமின்றி சாலையோரத்தில் தவிக்கும் 21 தமிழக மீனவர்கள்: மீட்க முதல்வருக்கு கோரிக்கை

சென்னை: மீன்பிடி தொழிலுக்காக ஈரான் சென்ற தமிழக மீனவர்கள் 21 பேர் உணவு, தங்குவதற்கு இடமின்றி வீதியில் பரிதவிப்பதாக தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து ஈரானில் தவிக்கும் மீனவர்களை உடனடியாக மீட்க நடவடிக்கை எடுக்குமாறு தமிழக முதல்வருக்கு தெற்காசிய மீனவர் தோழமை அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் ராஜாக்கமங்கலம் துறை, கடியப்பட்டினம் போன்ற மீனவ கிராமங்களைச் சேர்ந்த 8 மீனவர்கள், நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த 7 பேர், தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த 6 பேர் என மொத்தம் 21 மீனவர்கள் மீன்பிடி தொழில் செய்வதற்காக ஈரான் நாட்டின் நகிதக்கி என்ற இடத்திற்கு சென்றனர்.

அந்த நாட்டைச் சேர்ந்த முகம்மது சலா என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் கடந்த 6 மாதங்களாக இவர்கள் மீன்பிடி தொழில் செய்து வந்தனர். இந்நிலையில் இவர்களுக்கு ஊதியம், உணவு, தங்கும் வசதி உள்ளிட்டவற்றை முகம்மது சலா செய்து கொடுக்கவில்லை என்றும், இதனால் தாங்கள் வீதிகளில் பரிதவிப்பதாகவும் தெற்காசிய மீனவ தோழமை அமைப்புக்கு கைப்பேசி மூலம் மீனவர்கள் தகவல் தெரிவித்துள்ளார். இரண்டு நாட்களுக்கு முன் மீன்பிடித்ததற்கான சம்பளத்தை வழங்குமாறு முகமது சலாவிடம் தாங்கள் கேட்டதாகவும், இதனால் ஆத்திரமடைந்த அவர் தங்களது அறையில் இருந்த துணிகள், பாஸ்போர்ட் ஆகியவற்றை பிடுங்கிக் கொண்டு தங்களை வெளியே அனுப்பி விட்டதாகவும் அவர்கள் கண்ணீருடன் கூறியுள்ளனர். மேலும் பாஸ்போர்ட் இல்லாததால் தங்களைக் கைது செய்ய வாய்ப்பிருப்பதாகவும், விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறும் மீனவர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

இதனையடுத்து மீனவர்களை மீட்க தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு, தமிழக முதல்வர் கே.பழனிசாமிக்கும், ஈரானில் உள்ள இந்திய தூதரகம் மற்றும் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் ஆகியவற்றுக்கும், தெற்காசிய மீனவர் தோழமை அமைப்பின் பொதுச்செயலாளர் சர்ச்சில் கோரிக்கை விடுத்துள்ளார்.

Leave a comment

Your email address will not be published.