உச்ச நீதிமன்றத்தில் இன்று பிற்பகலுக்குள் விசாரணைக்கு ஆஜராக முஷாரப்புக்கு கெடு

இஸ்லாமாபாத்: இன்று பிற்பகலுக்குள் பாகிஸ்தான் உச்ச நீதிமன்றத்தில் ஆஜராக முஷாரப்புக்கு கெடு விதிக்கப்பட்டுள்ளது.பாகிஸ்தான் முன்னாள் அதிபரும், ராணுவ தலைமை தளபதியுமான முஷாரப் தேசத் துரோக வழக்கில் நாடு கடத்தப்பட்டு துபாயில் உள்ளார்.  இந்நிலையில், ஜூலை 25ல் பாகிஸ்தானில் நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் சித்ரால் தொகுதியில் போட்டியிட முஷாரப் சார்பில் வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஆனால், 2007ல் பாகிஸ்தானில் அவசரநிலையை அமல்படுத்திய வழக்கில் அவர் ஆயுட்காலம் முழுவதும் தேர்தலில் போட்டியிட பெஷாவர் உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

இந்த தடையை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் முஷாரப் சார்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி சாகிப் நிசார் தலைமையிலான அமர்வு. முஷாரப் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட அனுமதி வழங்கியது. ஆனால், அவர் லாகூர் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்று நிபந்தனை விதித்தது. இந்த வழக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சாகிப் நிசார் தலைமையிலான மூன்று நீதிபதிகளை கொண்ட அமர்வின் முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, முஷாரப் இன்று பிற்பகல் 2 மணிக்குள் ஆஜராக வேண்டும் என உச்ச நீதிமன்றம் இறுதி உத்தரவு பிறப்பித்தது. ஆனால், உயிருக்கு ஆபத்து இருப்பதாக முஷாரப் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதுபற்றி கருத்து தெரிவித்த நீதிபதிகள், ‘‘பாகிஸ்தான் வரும் முஷாரப்புக்கு தேவையான பாதுகாப்பு அளிக்க ஏற்பாடு செய்யப்படும். இதை எழுத்துப்பூர்வ வாக்குறுதியாக அளிக்க முடியாது. அப்படி நாளை அவர் ஆஜராக தவறினால் சட்டப்படி அடுத்தகட்ட மேல் நடவடிக்கை எடுப்பது தொடர்பாக தீர்மானிக்கப்படும்’ என குறிப்பிட்டனர்.
‘சொந்த நாடு திரும்ப முஷாரப்புக்கு பயமா?’
பாகிஸ்தான் வந்தால் தனது உயிருக்கு ஆபத்து என்று முஷாரப் தனது மனுவில் குறிப்பிட்டு இருந்தார். இது பற்றி பாகிஸ்தான் தலைமை நீதிபதி சாகிப் நிசார் கூறுகையில், ‘‘முஷாரப் குறிப்பிடுவதை உச்ச நீதிமன்றம் ஏற்றுக்கொள்ளாது. அவர் நாடு திரும்பினால் போதுமான பாதுகாப்பு அளிக்கப்படும். அதற்கு எழுத்துப்பூர்வமான கடிதம் எல்லாம் அளிக்கப்பட மாட்டாது. முஷாரப் ஒரு கமாண்டோவாகத்தான் ராணுவத்தில் தனது பணியை தொடங்கினார். அவர் ஒரு கமாண்டோவாக இருந்தால் இப்போது எங்கள் முன் வந்து நின்று இருப்பார். அதற்கு பதில் அரசியல்வாதி போல் திரும்ப திரும்ப ஒரே கருத்தை கூறிவருகிறார். முஷாரப் ஏன் பாதுகாப்பு கேட்கிறார்?. அவர் மிகவும் பயப்படுகிறாரா என்ன? ஒரு கமாண்டோவுக்கு எப்படி பயம் வரும்? தான் பலமுறை மரணத்தை தொட்டுவிட்டு வந்ததாகவும், ஆனால் ஒரு முறை கூட பயந்ததே இல்லை என்றும் அவர் பலமுறை கூறியிருக்கிறார். அவர் இப்போது பயந்தவராக இருந்தால் எப்படி தன் கைகளை உயர்த்தி காண்பிப்பார்? முஷாரப் முதலில் அரசியல் சாசனத்தையும், சட்டத்தையும், இந்த நாட்டையும், நீதிமன்றத்தையும் மதிக்க வேண்டும்’’ என்று தெரிவித்தார்.

Leave a comment

Your email address will not be published.