எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கு தீர்ப்பின் மூலம் பழனிசாமி அரசின் ஆயுட்காலம் மேலும் 3 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது என்று அமமுக துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
சென்னை அடையாறில் உள்ள இல்லத்தில் செய்தியாளர்களிடம் அவர் நேற்று கூறியதாவது:

அடுத்த கட்டப் போராட்டம்
கட்சியைக் காப்பாற்றவும், கொள்கைக்காகவும் தங்களது பதவிகளை தியாகம் செய்த 18 எம்எல்ஏக்களும் எங்களுடன்தான் இருக்கிறார்கள். அவர்கள் நினைத்திருந்தால் சலுகைகளை நினைத்து ஆளுங்கட்சிக்கு ஆதரவாக இருந்திருக்கலாம். ஆனால், கட்சியைக் காப்பதற்காக தொண்டர்களின் விருப்பத்தை ஏற்று எங்களுடன் இருக்கின்றனர்.
நாங்கள் அடுத்தகட்ட போராட்டத்துக்கு தயாராகி வருகிறோம். நாங்கள் போராளிகள். பிழைப்புக்காகவோ, சொத்துக்காகவோ, பதவிக்காகவோ நாங்கள் இல்லை. அனைவரும் கொள்கைக்காக இருக்கிறோம்.
சென்னை உயர் நீதிமன்ற முதல் அமர்வில், ஒரு நீதிபதி பேரவைத் தலைவரின் தீர்ப்பு செல்லாது என்று தீர்ப்பளித்துள்ளார். மற்றொரு நீதிபதியான தலைமை நீதிபதி, பேரவைத் தலைவரின் தீர்ப்பு செல்லும் என்று தீர்ப்பளித்துள்ளார். சட்டம் என்பது ஒன்றாகத்தானே இருக்க முடியும்.
ஒரே நீதிபதி… மாறுபட்ட தீர்ப்பு
புதுச்சேரி சட்டப்பேரவைத் தலைவரின் தீர்ப்பு மீது ஒரு உத்தரவும், தமிழக சட்டப்பேரவைத் தலைவரின் தீர்ப்பு மீது மற்றொரு உத்தரவும் அதே நீதிமன்றத்தில், அதே நீதிபதியால் வழங்கப்பட்டிருப்பது எப்படி சரியாக வரும் என்பது கடவுளுக்குத்தான் வெளிச்சம். நீதிமன்ற உத்தரவால், மக்கள் விரும்பாத இந்த அரசின் ஆயுட்காலம் 3 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
ஆர்.கே.நகர் தேர்தல் முடிவைப் போலவே இந்த வழக்கின் தீர்ப்பையும் மக்கள் ஆவலுடன் எதிர்பார்த்தனர். பேரவைத் தலைவரின் தீர்ப்பில் நீதிமன்றம் தலையிடலாம் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் ஏற்கெனவே தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் 100 சதவீதம் நம்பிக்கை இருந்தது. இருந்தாலும் 50 சதவீத வெற்றி கிடைத்துள்ளது. நீதிமன்றத் தீர்ப்பின்படி மக்கள் தோல்வியடைந்துள் ளனர். இவ்வாறு டிடிவி தினகரன் கூறினார்.