உயிராற்றல் என்ற மேற்பார்வையாளர்

உயிராற்றல் என்ற மேற்பார்வையாளர்

எந்த உடல் ஆரோக்கியத்துக்குக் காரணமோ, அதே உடல் தான் நோய்க்கும் காரணமாக இருக்கிறது. இங்கு உடல் என்று சொல்வது மனதையும் சேர்த்துத் தான். பிறந்ததிலிருந்து உடல் தானாகவே உயிர் வாழ்வதற்கான அடிப்படைச் செயல்களைச் செய்து கொண்டிருக்கிறது. தன்னுடைய செயல்களைச் செய்வதற்கு நம்முடைய அனுமதியைக் கேட்பதில்லை.

அதாவது இதயம் துடிப்பதற்கோ, நுரையீரல் சுருங்கி விரிவதற்கோ, சிறுநீரகங்கள் ரத்தத்தைச் சுத்திகரிப்பதற்கோ கல்லீரல் ரத்தஅணுக்களை உற்பத்தி செய்வதற்கோ, நிணநீர் சுரப்பிகள் பாதுகாப்பு படைவீரர்களை உருவாக்குவதற்கோ, உணர்ச்சிகளைக் கடத்தும் நரம்புமண்டலம் தன் மின்காந்த அலைகளை உருவாக்குவதற்கோ, நம்முடைய மேலான அனுமதியை எதிர்பார்த்துக் கொண்டிருந்தால் என்ன ஆகும்? எல்லாம் தானாக ஆனால் ஒழுங்கமைதியுடன் தங்கள் வேலைகளைப் பார்த்துக் கொண்டிருக்கின்றன.

இவற்றையெல்லாம் யாரோ மேற்பார்வை பார்க்கிறார் இல்லையா? அவருடைய ஒருங்கிணைந்த மேற்பார்வையில் தான் உடல் தன் ஆரோக்கியத்தை பேணிக் கொள்கிறது. அது தனக்கு எது தேவை என்று சொல்கிறது. தேவையில்லாததை நாம் செய்யும் போது எச்சரிக்கிறது. ஒரு முறையல்ல பல முறை. நாம் விடாப்பிடியாக அதைச் செய்யும் போது பலத்த குரலில் உடலின் மூலமாக நம் செவிட்டுக் காதுகளில் அலறுகிறது. இதையெல்லாம் ஒரு ஒழுங்குடன் செய்வதற்குக் கற்றுக் கொண்டுள்ளது. நாம் தான் நமது உடலைப் பற்றிய அறியாமையால் உடலைப் பாழ்படுத்துகிறோம்.

மேற்பார்வை பார்க்கிற மேற்பார்வையாளரை அல்லது தலைமைச் செயலாளரை நாம் உயிராற்றல் என்று சொல்லுவோம். இந்த உயிராற்றல் தான் நமது உடலும் மனமும் ஆரோக்கியமாக இருப்பதற்கு அடிப்படைக் காரணம். உயிராற்றல் என்ற இந்த மேற்பார்வையாளர் தான் நமது உடலின் எல்லா இயக்கங்களையும் ஒருங்கிணைத்து எல்லாச்செயல்களும் செவ்வனே நடைபெற உதவுகிறார். இந்த உயிராற்றலில் எப்போது பலவீனம் ஏற்படுகிறதோ அப்போது நோய் உடலைத் தாக்குவதற்கு ஏதுவான சூழலில் உடல் பாதுகாப்பற்று இருக்கிறது. அப்போது புறவயமாக எப்போதும் இருக்கும் பாக்டீரியாக்கள், வைரஸ்கள், லொட்டு லொசுக்கெல்லாம் உடலைப் போட்டுத் தாக்குகின்றன. உடல் நோய்வாய்ப் படுகிறது.

ஆக நம்முடைய உடல் நோய்வாய்ப்படுவதற்கு நம்முடைய உயிராற்றலில் ஏற்படும் பலவீனமே காரணம். இந்த பலவீனம் நமது உடலின் நோய் எதிர்ப்புத் திறனைக் குறைத்து விடுகிறது. நோய் ஏற்புத்திறன் அதிகரித்து விடுகிறது. இதனால் உடலில் எளிதில் மாற்றம் தோன்றுகிறது. நாம் நோயால் பாதிக்கப்படுகிறோம். உயிராற்றல் முழுச் சக்தியோடு இருக்கும் வரை நாம் பாக்டீரியா, வைரஸ், எலி, பன்றி, என்று எதைக்கண்டும் அஞ்ச வேண்டியதில்லை.

Leave a comment

Your email address will not be published.