உருகுவேயை சமாளிக்குமா போர்ச்சுக்கல்?- வெளியேறப்போவது யார்?

உலகக் கோப்பை கால்பந்து தொடரில் நாக் அவுட் சுற்றின் 2-வது ஆட்டத்தில் போர்ச்சுக்கல் – உருகுவே அணிகள் இன்று சோச்சி நகரில் மோதுகின்றன.

உருகுவே, போர்ச்சுக்கல் ஆகிய இரு அணிகளும் லீக் சுற்றில் தோல்வியடையாமல் நாக் அவுட் சுற்றில் கால்பதித்துள்ளது. அதிலும் உருகுவே அணி லீக் சுற்றில் 3 ஆட்டங்களிலும் வெற்றி கண்டுள்ளது. இதன் மூலம் ஏ பிரிவில் ஆதிக்கம் செலுத்திய அந்த அணி 9 புள்ளிகளுடன் நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறியது. இந்த உலகக் கோப்பையில் எதிரணியிடம் கோல் வாங்காத ஒரே அணி உருகுவேதான். தொடக்க ஆட்டத்தில் 1-0 என்ற கணக்கில் எகிப்து அணியை வீழ்த்திய நிலையில் அடுத்த ஆட்டத்தில் சவுதி அரேபியாவை 1-0 தோற்கடித்திருந்தது உருகுவே அணி.

இதன் பின்னர் கடைசி ஆட்டத்தில் போட்டியை நடத்திய ரஷ்யாவை 3-0 என்ற கோல் கணக்கில் பந்தாடியது. சவுதி அரேபியா, ரஷ்யா அணிகளுக்கு எதிரான ஆட்டத்தில் நட்சத்திர வீரரான லூயிஸ் சுவாரஸ் கோல் அடித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்திருந்தார். 101 ஆட்டங்களில் 53 கோல்கள் அடித்துள்ள அவர், உருகுவே அணியை கால் இறுதிக்கு அழைத்துச் செல்வதில் முனைப்பு காட்டக்கூடும். லூயிஸ் சுவாரஸுடன், எடிசன் கவானியும் அணியின் அசுர பலமாக உள்ளார். இவர்களுடன் நடுகளத்தில் ரோட்ரிகோ பென்டன்குர், லூகாஸ் டொர்ரிரா, மார்டீஸ் வெசினோ பலம் சேர்ப்பவர்களாக உள்ளனர். சென்ட்ரல் டிபன்ஸில் இன்றைய ஆட்டத்தில் கேப்டன் காடினுடன் கிம்மென்ஸ் களமிறங்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கிறிஸ்டியானோ ரொனால்டோ தலைமையிலான போர்ச்சுக்கல் அணி தனது முதல் ஆட்டத்தை பலம் வாய்ந்த ஸ்பெயின் அணிக்கு எதிராக 3-3 என்ற கோல் கணக்கில் டிரா செய்திருந்தது. இதைத் தொடர்ந்து 2-வது ஆட்டத்தில் மொராக்கோ அணியை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி நாக் அவுட் சுற்றுக்கான வாய்ப்பை உறுதி செய்த நிலையில் கடைசி ஆட்டத்தில் ஈரான் அணியை 1-1 என்ற கோல் கணக்கில் டிரா செய்தது.

இதன் மூலம் 5 புள்ளிகளுடன் பி பிரிவில் போர்ச்சுக்கல் அணி 2-வது இடத்தை பிடித்திருந்தது. ஸ்பெயின் அணிக்கு எதிராக ஹாட்ரிக் கோல் அடித்து சாதனை படைத்திருந்த ரொனால்டோ, மொராக்கோ அணிக்கு எதிராகவும் கோல் அடித்து அசத்தியிருந்தார். 153 ஆட்டங்களில் 85 கோல்கள் அடித்துள்ள ரொனால்டோ மீண்டும் ஒரு முறை கோல் வேட்டை நடத்தைக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பெர்னார்டோ சில்வா, கோன்கலோ குயிடஸ் ஆகியோரும் அணியில் நம்பிக்கை அளிக்கக்கூடியவர்களாக உள்ளனர். இரு அணிகளுமே தாக்குதல் ஆட்டத்தை ஆயுதமாக மேற்கொள்ளும் திறன் கொண்டவை. இதனால் வெற்றி பெற கடுமையான போட்டி நிலவக்கூடும்.

நேருக்கு நேர்

உருகுவே – போர்ச்சுக்கல் அணிகள் இதுவரை இரு முறை நேருக்கு நேர் மோதி உள்ளன. இதில் போர்ச்சுக்கல் ஒரு ஆட்டத்தில் வெற்றி பெற்றது. ஒரு ஆட்டம் டிராவில் முடிவடைந்தது. 1972-ம் ஆண்டு இரு அணிகளும் மோதிய ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிவடைந்திருந்தது. அதேவேளையில் 1966-ம் ஆண்டு நடைபெற்ற ஆட்டத்தில் போர்ச்சுக்கல் அணி 3-0 என்ற கோல்கணக்கில் உருகுவே அணியை வீழ்த்தியிருந்தது.

 

Leave a comment

Your email address will not be published.