வங்கதேச தலைநகர் டாக்காவில் உலகிலேயே மிகப்பெரிய இந்திய விசா மையத்தை மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் நேற்று திறந்து வைத்தார்.
இந்தியாவுக்கு ஒரு நாட்டிலிருந்து அதிக எண்ணிக்கையில் வரும் சுற்றுலாப் பயணிகளில் வங்கதேசத்தைச் சேர்ந்தவர்களும் இடம்பிடித்துள்ளனர். கடந்த ஆண்டில் வங்கதேசத்தைச் சேர்ந்த 14 லட்சம் பேருக்கு விசா வழங்கப்பட்டுள்ளது.
மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் 3 நாள் பயணமாக நேற்று முன்தினம் வங்கதேச தலைநகர் டாக்கா சென்றடைந்தார். இந்நிலையில், டாக்கா நகரின் ஜமுனா பியூச்சர் பார்க் பகுதியில் புதிதாக கட்டப்பட்டுள்ள இந்திய விசா விண்ணப்ப மையத்தை ராஜ்நாத் சிங்கும் வங்கதேச உள்துறை அமைச்சர் அசாதுஜமான் கானும் நேற்று திறந்து வைத்தனர்.
18,500 சதுர அடி பரப்பளவில் அமைந்துள்ள இந்த மையம், மோதிஜீல், உத்தாரா, குல்ஷன் மற்றும் மிர்பூர் ஆகிய இடங்களில் இப்போது செயல்பட்டு வரும் இந்திய விசா மையங்களுக்கு மாற்றாக அமையும். இதன் மூலம் விண்ணப்பதாரர்களுக்கு காலதாமதம் இல்லாமல் உடனுக்குடன் விசா கிடைக்கும்.
இதுகுறித்து, வங்கதேசத்துக்கான இந்திய தூதர் ஹர்ஷ் வர்தன் ஷ்ரிங்ளா கூறும்போது, “உலகிலேயே மிகப்பெரிய இந்திய விசா மையம் இதுதான். மேலும் வேறு எந்த நாட்டுக்கும் இவ்வளவு பெரிய விசா மையம் இருக்க வாய்ப்பில்லை என்று கருதுகிறேன்” என்றார்.
மேலும் வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனாவை அவரது இல்லத்தில் ராஜ்நாத் சிங் நேற்று சந்தித்துப் பேசினார்.
இந்த சந்திப்புக்குப் பிறகு ராஜ்நாத் சிங் தனது ட்விட்டர் பக்கத்தில், “வங்கதேச பிரதமருடனான சந்திப்பு மிகவும் சிறப்பாக இருந்தது. இரு நாடுகளுக்கிடையிலான பிரச்சினைகள் மற்றும் தீவிரவாதம் உள்ளிட்ட பிராந்திய பிரச்சினைகள் குறித்து ஆலோசனை நடத்தினோம்” என பதிவிட்டுள்ளார்.
ஷேக் ஹசீனா கூறும்போது, “இரு நாடுகளுக்கு இடையிலான பிரச்சினைகளுக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு கிடைக்கும் என எதிர்பார்க்கிறோம். எங்கள் மண்ணிலிருந்து எந்த ஒரு நாட்டுக்கு எதிராகவும் சதித் திட்டம் தீட்டுவதற்கு தீவிரவாதிகளை அனுமதிக்க மாட்டோம்” என்றார்.-