உலக கோப்பைக்கு முன்பாக பலமிக்க அணியை உருவாக்குவது அவசியம்: விராட் கோலி

இங்கிலாந்தில் இந்திய அணி சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இந்த சுற்றுப்பயணத்தின் துவக்கமாக 20 ஓவர் போட்டித்தொடரில் இந்திய அணி பங்கேற்றது. 3 போட்டிகள் கொண்ட தொடரை, 2-1 என்ற கணக்கில் இந்திய அணி கைப்பற்றியது.
இதையடுத்து, மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்றது. இதில், முதல் போட்டியில் இந்திய அணியும், 2-வது போட்டியில் இங்கிலாந்து அணியும் வெற்றி பெற்றிருந்த நிலையில், தொடரை நிர்ணயிக்கும் மூன்றாவது கிரிக்கெட் போட்டி நேற்று நடைபெற்றது.  இப்போட்டியில், இங்கிலாந்து அணி வெற்றி பெற்று தொடரை வென்றது.
இந்த நிலையில், நேற்று நடைபெற்ற பரிசளிப்பு விழாவிற்கு பிறகு இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி கூறியதாவது:- “ வலுவான அணியாக நாம் திகழ வேண்டியது அவசியம்.
உலக கோப்பைக்கு முன்பாக, நமது விளையாட்டு சரியான வகையில் இருப்பதை பெறுவது அவசியம். ஒரே ஒரு திறமையை மட்டும் சார்ந்து நாம் இருக்க கூடாது. அனைத்து துறைகளிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவது அவசியம். இன்றைய (நேற்று) போட்டியை பற்றி பேசுவதென்றால், ரன்களை பொறுத்தவரை நாங்கள் போதிய அளவு சேர்க்கவில்லை. 25-30 ரன்கள் குறைவாக எடுத்துவிட்டோம்.
அனைத்து துறைகளிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இங்கிலாந்து வெற்றிக்கு தகுதியான அணியாகும். இங்கிலாந்து போன்ற அணிக்கு எதிராக விளையாடும் போது, நாம் முழுத்திறமையையும் வெளிப்படுத்த வேண்டும். நாள் முழுவதும் ஆடுகளம் மெதுவாக இருந்தது. ஈரப்பதமாக இல்லை. கொஞ்சம் மந்தமான பிட்ச் ஆக இருந்தது.
இதற்கு முன்பு, இது போன்ற ஒரு பிட்சை பார்த்தது இல்லை. பந்து வீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டனர்.  ரஷித்துக்கு எதிராக 19-வயதுக்குட்பட்டோருக்கான போட்டியில் இருந்தே நான் விளையாடி வருகிறேன். ரஷித் பந்துவீச்சு மிகவும் அற்புதமாக இருந்தது. தினேஷ் கார்த்திக் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என்று நாங்கள் நினைத்தோம். ஆனால், தினேஷ் கார்த்திக், தனது துவக்கத்தை, பெரிய ஸ்கோராக கொண்டு செல்லவில்லை. பேட்டிங் ஆர்டரை மாற்றியதற்காக நாங்கள் கவலைப்படவில்லை” என்றார்.

Leave a comment

Your email address will not be published.