உலக கோப்பை கால்பந்தில் 3-வது இடம் யாருக்கு? – பெல்ஜியம், இங்கிலாந்து அணிகள் இன்று பலப்பரீட்சை

செயின்ட் பீட்டர்ஸ்பர்க்,

21-வது உலக கோப்பை கால்பந்து போட்டி ரஷியாவில் நடந்து வருகிறது. இந்த கால்பந்து திருவிழாவில் இன்னும் 2 ஆட்டங்களே எஞ்சியுள்ளன. நாளை நடக்கும் இறுதிப்போட்டியில் முன்னாள் சாம்பியன் பிரான்ஸ் அணி, குரோஷியாவை எதிர்கொள்கிறது. முன்னதாக வெண்கலப்பதக்கம் யாருக்கு என்பதை நிர்ணயிக்கும் 3-வது இடத்திற்கான ஆட்டத்தில் பெல்ஜியம்- இங்கிலாந்து அணிகள் இன்று செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் மோதுகின்றன.

லீக் சுற்றில் அதிக கோல்கள் அடித்த அணியான பெல்ஜியம், இந்த தொடரில் பிரமிக்கத்தக்க வகையில் விளையாடியது. கால்இறுதியில் முன்னாள் சாம்பியன் பிரேசிலுக்கு அதிர்ச்சி அளித்தது. ஆனால் பெல்ஜியத்துக்கு அதிர்ஷ்டம் இல்லாமல் போய் விட்டது. அரைஇறுதியில் பிரான்சிடம் ஒரு கோல் வாங்கி தோல்வியை தழுவியது.

1986-ம் ஆண்டில் 4-வது இடம் பிடித்ததே உலக கோப்பையில் பெல்ஜியத்தின் சிறந்த நிலையாகும். இந்த முறை மேலும் ஒரு படி முன்னேறும் வேட்கையில் இருக்கிறார்கள். எடன் ஹசார்ட், ரோம்லு லுகாகு, பெல்லானி, கெவின் டி புருன் உள்ளிட்டோர் பெல்ஜியம் அணியில் நல்ல பார்மில் உள்ளனர். இளம் வீரர்களை கொண்ட இங்கிலாந்து அணி அரைஇறுதியில் 1-2 என்ற கோல் கணக்கில் குரோஷியாவிடம் தோற்று இறுதிசுற்று வாய்ப்பை கோட்டை விட்டது. 1966-ம் ஆண்டு சாம்பியனான இங்கிலாந்து அணி அதன்பிறகு உயரிய நிலையுடன் தாயகம் திரும்புவதில் ஆர்வம் காட்டும்.

இங்கிலாந்து கேப்டன் ஹாரிகேன் இதுவரை 6 கோல்கள் அடித்து தங்க ஷூ வெல்லும் வாய்ப்பில் முன்னணியில் இருக்கிறார். இந்த ஆட்டத்திலும் ஒன்றிரண்டு கோல்கள் போட்டால் அந்த விருது அவருக்கு உறுதியாகி விடும். ஏற்கனவே லீக் சுற்றில் இங்கிலாந்து அணி 0-1 என்ற கோல் கணக்கில் பெல்ஜியத்திடம் தோற்று இருந்தது. அந்த தோல்விக்கு பழிதீர்க்க இங்கிலாந்து வீரர்கள் தீவிரமாக உள்ளனர்.

3-வது இடத்தை பிடிக்கும் அணிக்கு ரூ.161 கோடியும், 4-வது இடத்தை பெறும் அணிக்கு ரூ.148 கோடியும் பரிசுத்தொகையாக கிடைக்கும்.

இங்கிலாந்து பயிற்சியாளர் காரெத் சவுத்கேட் கூறுகையில், ‘அரைஇறுதியில் ஏற்பட்ட தோல்வியால் எங்களது வீரர்களுக்கு கடந்த சில நாட்கள் மனரீதியாக மிகவும் கடினமாக இருந்தது. ஒரு வழியாக வீரர்கள் நேற்று மீண்டும் பயிற்சியை தொடங்கினர். இந்த உலக கோப்பையில் பெல்ஜியத்தின் பயணம் பிரமாதமாக இருந்தது. வெற்றியுடன் இந்த தொடரை முடிக்க அவர்கள் விரும்புவார்கள். நாங்களும் அப்படி தான். இந்த உலக கோப்பையில் நாங்கள் முன்னணி அணிகளை வீழ்த்தவில்லை. அதனால் இந்த வாய்ப்பை நாங்கள் சரியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும்’ என்றார்.

இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை சோனி டென்2, சோனி இ.எஸ்.பி.என். சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன.

Leave a comment

Your email address will not be published.