உலக பேட்மின்டன் சாம்பியன்ஷிப் – 2வது சுற்றில் இந்திய வீரர்கள் பிரணாய், சமீர்!

பேட்மின்டன்

உலக பேட்மின்டன் சாம்பியன்ஷிப் போட்டியின் 2வது சுற்றுக்கு முன்னேறியுள்ளனர் இந்திய வீரர்கள். சீனாவின் நான்ஜிங்கில் (Nanjing) ஜுலை 30 ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 5 ஆம் தேதி வரை உலக பேட்மின்டன் சாம்பியன்ஷிப் போட்டிகள் நடக்கின்றன. முதல் நாளான நேற்று இந்திய வீரர்களின் வெற்றிக்கணக்கை ஆரம்பித்து வைத்துள்ளார் HS பிரணாய். தனது முதல் சுற்றில் நியூசிலாந்தின் அபினவ் மனோட்டாவுடன் மோதிய பிரணாய் அபினவ்விற்கு கொஞ்சமும் வாய்ப்பளிக்காமல் 21-12, 21-12 என நேர் செட்களில் 28 நிமிடங்களில் ஆட்டத்தை முடித்துள்ளார். முதல் சுற்றின் மற்றொரு ஆட்டத்தில் இந்தியாவின் சமீர் வர்மா 21-13, 21-10 என்ற நேர் செட்களில் பிரான்ஸ் வீரர் லூகாஸ் கார்வீயை வீழ்த்தினார். உலக ரேங்க் பட்டியலில் 19வது இடத்தில் இருக்கும் சமீர் தனது 2வது சுற்றில் 5 முறை உலக சாம்பியனான லின் டானை எதிர்கொள்கிறார்.

ஆண்கள் இரட்டையர் பிரிவின் முதல் சுற்றில் அட்ரி மானு – ரெட்டி பி சுமீத் ஜோடி பல்கேரியாவின் டேனியல் நிக்கோலோவ் – இவன் ருசேவ் ஜோடியை 21-13, 21-18 என வீழ்த்தியுள்ளனர். கலப்பு இரட்டையரைப் பொறுத்தவரையில் நான்கு ஜோடிகளும் வெற்றி பெற்றுள்ளது. சட்விக்சாய்ராஜ் ராங்கிரெட்டி- அஷ்வினி பொன்னப்பா ஜோடி டென்மார்ர்கின் நட்சத்திர ஜோடியான நிக்லாஸ் நோஹ்ர் – சாரா தைகெசென் ஜோடியை 21-9, 22-20 என வீழ்த்தியுள்ளனர். ப்ரனவ் ஜெர்ரி சோப்ரா – ரெட்டி என் சிக்கி, சௌரப் சர்மா – அனோஷ்கா பரிக், ரோஹன் கபூர் – குஹோ கர்க் ஆகிய கலப்பு இரட்டையர் ஜோடிகளும் தங்களது இரண்டாவது சுற்றுக்கு முன்னேறியுள்ளனர். பெண்கள் இரட்டையர் பிரிவின் ப்ரஜக்தா சவந்த், சன்யோகிதா கோர்படே ஜோடி மட்டுமே தோல்வியைத் தழுவி உள்ளது. தங்களது முதல் சுற்றில் துருக்கியின் பென்கிசு எர்செடின் – னஸ்லிகன் இன்சி ஜோடியை எதிர்கொண்டவர்கள் 20-22, 14-21 என செட்களை இழந்தனர். சாய்னா நேவால், கிடாம்பி ஶ்ரீகாந்த் என நட்சத்திர ஆட்டக்காரர்கள் இன்று களம் காண உள்ளனர்.

8 comments

Leave a comment

Your email address will not be published.