ஊழல் ஒழிப்பு என்பது பெயரளவுக்குத்தானா?

ஊழல் ஒழிப்புச் சட்டத்தில் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட திருத்தங்களுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்திருக்கிறார். புதிய திருத்தமானது குற்றம்செய்யும் நோக்கத்துடனான தவறான செயல் எது என்பதைச் சுருக்கமாகவும், வரையறுத்தும் கூறுவதால் வரவேற்புக்குரியது. என்றாலும், இந்த சட்டத்திருத்தம் ஊழலை ஒழிக்கும் நடைமுறைகளில் உள்ள சிக்கல்களைக் களையவில்லை என்பதால், கடும் விமர்சனங்களையும் எதிர்கொண்டிருக்கிறது.

பொதுப் பயன்பாட்டுக்கான ஒன்றைச் சொந்தப் பயன்பாட்டுக்கு மட்டும் சுயாதீனப்படுத்துவதோ, வருவாய்க்குப் பொருத்தமில்லாமல் சொத்துகளைச் சேர்ப்பதோ குற்றம் என்று சட்டத்திருத்தத்தில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. பதவிவகித்த காலத்தில், தான் சேர்த்த சொத்து, எந்தெந்த வருமானங்கள் மூலம் வாங்கப்பட்டது என்று ஒருவரால் நிரூபிக்க முடியவில்லை என்றால், அதை ‘உள்நோக்கத்துடன் சொத்து சேர்த்ததாக அனுமானித்துக்கொள்ளலாம்’ என்று திருத்தப்பட்டிருக்கிறது.

லஞ்சம் வாங்குவது குற்றம் என்பதைப் போல கொடுப்பதும் குற்றம் என்பதால், கொடுப்பவர்களையும் தண்டிக்க வேண்டும் என்பது ஐக்கிய நாடுகள் சபை ஆதரவில் நடந்த மாநாட்டில் எடுக்கப்பட்ட முடிவு. ஆனால், லஞ்சம் கொடுக்க ஒருவர் நிர்ப்பந்திக்கப்பட்டால், கொடுத்தவரைத் தண்டிக்கத் தேவையில்லை என்று அதற்கு விதிவிலக்கு அளிக்கப்பட்டிருக்கிறது. இந்த விதிவிலக்கு கடும் விவாதங்களை எழுப்பியிருக்கிறது. காவல் துறையோ, வேறு அதிகாரியோ லஞ்சம் கேட்டது தொடர்பாக மக்கள் அளிக்கும் புகார்களைப் பதிவுசெய்ய மறுத்துவிட்டால் என்ன செய்வது? அதுமட்டுமல்ல, நான் கேட்டபடி லஞ்சம் தராததுடன் மேல் அதிகாரியிடம் போய் புகார் செய்தாயா என்றும் சில ஊழல் அரசு அலுவலர்கள் மிரட்டக்கூடும்.

இந்தத் திருத்தத்திலேயே ஏற்க முடியாத மற்றொன்று, உரிய மேலதிகாரியின் ஒப்புதலைப் பெற்ற பிறகுதான் ஊழல் புகார் மீதான விசாரணையைத் தொடங்க வேண்டும் என்பது. வழக்கு நடத்த மேலதிகாரியின் அனுமதி தேவை என்று ஏற்கெனவே சட்டம் இருக்கிறது. அப்படி இருக்கும்போது விசாரணைக்கும் மேலதிகாரியின் ஒப்புதல் தேவை என்பது ஏற்க முடியாததாக இருக்கிறது. வீணான லஞ்சப் புகார்களால் அரசு அதிகாரிகள் அலைக்கழிக்கப்படக் கூடாது என்பதை ஏற்கும் அதே வேளையில், ஊழலுக்கு எதிரான சட்ட நடைமுறையில் இத்தனை நிபந்தனைகளையும் கட்டுப்பாடுகளையும் விதிப்பது சரியல்ல.

லஞ்சம் கேட்டார்கள் என்று புகார் தருவோருக்கு உரிய பாதுகாப்பை அளிக்காமல், ஊழலை ஒழிப்பதாகச் சொல்வது வெறும் பெயரளவுக்கானதாகவே இருக்கும். லஞ்சம் கேட்பவர்களும் வாங்குகிறவர்களும் சட்டப்படி உடனுக்குடன் தண்டிக்கப்பட வேண்டும். லஞ்சக் குற்றச்சாட்டுகளை விசாரிக்க லோக்பால் அல்லது லோக்ஆயுக்தாக்கள் நியமிக்கப்பட வேண்டும். இந்த விசாரணைகள் உரிய காலவரம்புக்குள் விசாரிக்கப்பட்டு தீர்ப்புகள் வழங்கப்படுவதும் முக்கியம். அப்போதுதான் ஊழல் ஒழிப்புச் சட்டத்தின் நோக்கம் நிறைவேறும்.

Leave a comment

Your email address will not be published.