எஃப் பிரிவில் நாக் அவுட் சுற்றில் நுழைவது யார்?- தென் கொரியாவுடன் ஜெர்மனி மோதல்; மற்றொரு ஆட்டத்தில் சுவீடன் – மெக்சிகோ பலப்பரீட்சை

ரஷ்யாவில் நடைபெற்று வரும் உலகக் கோப்பை கால்பந்து தொடரின் லீக் ஆட்டங்கள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளன. எஃப் பிரிவில் இன்று இரவு நடைபெறும் முக்கியமான ஆட்டங்களில் நடப்பு சாம்பியனான ஜெர்மனி, தென் கொரியாவுடன் மோதுகிறது. மற்றொரு ஆட்டத்தில் சுவீடன் – மெக்சிகோ அணியை சந்திக்கிறது. மெக்சிகோ 6 புள்ளிளுடன் முதலிடத்திலும் ஜெர்மனி, சுவீடன் அணிகள் தலா 3 புள்ளிகளுடன் அடுத்த இரு இடங்களில் உள்ளன. தென் கொரியா இரு ஆட்டங்களில் தோல்வி கண்டு புள்ளிகள் ஏதும் இல்லாத நிலையில் கடைசி இடத்தில் உள்ளது.

ஜெர்மனி முதல் ஆட்டத்தில் மெக்சிக்கோவிடம் 1-0 என தோல்வியடைந்த நிலையில் 2-வது ஆட்டத்தில் சுவீடனை 2-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி மீண்டு வந்தது. 3 புள்ளிகளுடன் உள்ள ஜெர்மனி, இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெற்றால் மட்டுமே நாக் அவுட் சுற்றுக்கு முன்னேற முடியும் என்ற நெருக்கடியில் உள்ளது. அதிலும் தென் கொரியாவுக்கு எதிராக 2 அல்லது அதற்கு மேற்பட்ட கோல்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றால் மட்டுமே ஜெர்மனி அணியால் எளிதாக நாக் அவுட் சுற்றுக்குள் கால்பதிக்க முடியும்.

அதேவேளையில் தென் கொரியா அணியும் நாக் அவுட் சுற்றுக்கு தகுதி பெற வாய்ப்பு உள்ளது. மெக்சிகோ, சுவீடன் அணிகளிடம் தோல்வி கண்ட தென் கொரியா, இன்றைய ஆட்டத்தில் ஜெர்மனி அணியை வீழ்த்தும் பட்சத்தில் அடுத்த சுற்றுக்கான வாய்ப்பை பெறக்கூடும். ஆனால் இதற்கு மெக்சிகோ அணி, சுவீடனை வெல்ல வேண்டும். மேலும் கோல்கள் வித்தியாசத்திலும் தென் கொரியா முன்னிலை வகிக்க வேண்டும். இது நடப்பதற்கான சாத்திய கூறுகள் அரிதுதான். ஜெர்மனி, சுவீடன் அணிகள் தங்களது ஆட்டத்தை டிரா செய்தால் மெக்சிகோ அணி 7 புள்ளிகளுடன் எளிதாக நாக் அவுட் சுற்றில் கால்பதித்துவிடும்.

இந்த சூழ்நிலை உருவானால் நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறும் 2-வது அணி, கோல்கள் வித்தியாசத்தில் முடிவாகும். இரு அணிகளும் சமஅளவிலான கோல்களை பெற்றிருந்தால் ஜெர்மனி அணியே நாக் சுற்றுக்கான வாய்ப்பை பெறும். ஏனெனில் அந்த அணி ஏற்கெனவே சுவீடனை வென்றுள்ளது. ஒருவேளை சுவீடன், ஜெர்மனி அணிகள் வெற்றி பெற்றால் இந்த இரு அணிகளும் தலா 6 புள்ளிகளை பெறும். இந்த சூழ்நிலை ஏற்பட்டால் ஏற்கெனவே 6 புள்ளிகளுடன் உள்ள மெக்சிகோ அணிக்கும் சிக்கல்தான்.

இ பிரிவில் இன்று நடைபெறும் ஆட்டம் ஒன்றில் சுவிட்சர்லாந்து – கோஸ்டா ரிகா அணிகள் மோதுகின்றன. சுவிட்சர்லாந்து அணி இன்றைய ஆட்டத்தை டிரா செய்தால் கூட நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறுவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளது. அந்த அணி இரு ஆட்டத்தில் ஒரு வெற்றி, ஒரு டிராவுடன் 4 புள்ளிகள் பெற்றுள்ளது. கோஸ்டா ரிகா அணி ஏற்கெனவே நாக் அவுட் சுற்றுக்கான வாய்ப்பை இழந்துவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

பிரேசில் – செர்பியா

இ பிரிவில் மற்றொரு ஆட்டத்தில் பிரேசில் – செர்பியா அணிகள் மோதுகின்றன. இந்த ஆட்டம் இரு அணிகளுக்குமே முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. பிரேசில் 4 புள்ளிகளுடனும், செர்பியா 3 புள்ளிகளுடனும் உள்ளன. இன்றைய ஆட்டத்தை பிரேசில் அணி டிரா செய்தாலே நாக் அவுட் சுற்றுக்கு தகுதி பெற்றுவிடலாம். எனினும் பிரேசில் அணி வெற்றி பெற்று தனது பிரிவில் முதலிடம் பிடிப்பதில் கவனம் செலுத்தக்கூடும். செர்பியா அணியை பொறுத்தவரையில் இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெற்றால் மட்டுமே அடுத்த சுற்றுக்குள் நுழைய முடியும்.

ஒருவேளை இந்த ஆட்டம் டிராவில் முடிந்தால், சுவிட்சர்லாந்து – கோஸ்டா ரிகா ஆட்டத்தின் முடிவை பொறுத்து சுவிட்சர்லாந்து தலைவிதி நிர்ணயமாகும். சுவிட்சர்லாந்து அணி ஒரு கோலுக்கும் அதிகமான வித்தியாசத்தில் தோல்வியடைந்தால் மட்டுமே செர்பியா அணியால் நாக் அவுட் சுற்றுக்கான வாய்ப்பை பெற முடியும். மாறாக செர்பியா அணி தோல்வியடைந்தால், சுவிட்சர்லாந்து அணி கோஸ்டா ரிகாவிடம் வீழ்ந்தால் கூட நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறிவிடும்.

Leave a comment

Your email address will not be published.