#எதிர்ப்பு சக்தி… ஏ டூ இஸட்…

#எதிர்ப்பு சக்தி… ஏ டூ இஸட்…

அனைத்து விதமான வசதிகளும், செல்வமும் நிறைவாக இருந்தாலும் ஆரோக்கியம் இல்லை என்றால் ஒரு மனிதனின் வாழ்க்கையில் மகிழ்ச்சி இருக்காது.

நிறைவான வாழ்க்கை வாழ உடல் ஆரோக்கியம் மிகவும் இன்றியமையாதது. அதற்கு உடலின் நோய் எதிர்ப்பு மண்டலம் வலுவாக இருக்க வேண்டியது அவசியம். இதனை நம் அன்றாட வாழ்வியல் பழக்கங்களை நெறிப்படுத்துவதன் மூலமே சரி செய்துவிட முடியும் என்கிறார்கள் மருத்துவ நிபுணர்கள். அந்த எளிமையான வழிமுறைகளை உங்களுக்காக இங்கே..

நம் ரத்தத்தில் உள்ள ரத்த வெள்ளை அணுக்கள்(White Blood Cells) நோய்க்கிருமிகளை எதிர்த்துப் போராடி அவற்றை அழிக்கும் திறனுடையது. எனவே, இந்த அணுக்களை படைவீரர்கள் என்றும் அழைப்பதுண்டு. இது சுற்றுச்சூழலிலிருந்து நம் உடலை நோக்கி வரும் வைரஸ், பாக்டீரியா மற்றும் பூஞ்சை போன்றவற்றை எதிர்த்துப் போராடி, அதனால் ஏற்படுகிற நோய்களிலிருந்து நம் உடலுக்கு பாதுகாப்பு அளிக்கும் பணியை மேற்கொள்கிறது. இதனால் இந்த வெள்ளை அணுக்கள் உடல் நோய் எதிர்ப்பு ஆற்றலுக்கு அடிப்படையாக உள்ளது.

பொதுவாக நம் உடலில் உள்ள ஒரு மைக்ரோ லிட்டர் ரத்தத்தில் 4000 முதல் 11,000 என்ற அளவில் ரத்த வெள்ளை அணுக்கள் இருக்கும். ரத்தத்தில் இந்த வெள்ளை அணுக்களின் எண்ணிக்கை குறைந்தால், நோய்க் கிருமிகளுக்கு எதிராகப் போராடும் சக்தியை நம் உடல் இழந்துவிடும். அப்படி உடலின் நோய் எதிர்ப்பு ஆற்றல் குறையும்போதுதான் நமக்கு சளி, காய்ச்சல் போன்ற உடல்நல பிரச்னைகள் திரும்பத் திரும்ப ஏற்படுகிறது.

ரத்த ஓட்டம்….

நம் உடலில் உள்ள ஒவ்வொரு உறுப்புகளின் இயக்கத்திற்கும் தேவையான ஆற்றல் ரத்தத்திலிருந்து கிடைக்கிறது. ஒவ்வொரு உடல் உறுப்புக்கும் ரத்தம் சீராக செல்லாவிட்டால், அதனுடைய இயக்கம் தடைபட்டு பாதிப்புக்கு உள்ளாகிறது. எனவே, ரத்த ஓட்டம் சீராக இருப்பதோடு அதை சரியான முறையில் பேணிக்காப்பது மிகவும் அவசியம். உடலில் ரத்த ஓட்டம் சீராக இல்லையெனில் சிறுநீரகப் பிரச்னை, உயர் ரத்த அழுத்தம், நரம்பு வீக்கம் போன்ற பிரச்னைகள் ஏற்படுகிறது.

ரத்த அணுக்களின் அவசியம்…

ரத்தத்தில் ரத்த வெள்ளையணுக்கள், ரத்த சிவப்பணுக்கள், பிளேட்லெட்டுகள் போன்ற மூன்று வகையான அணுக்களும் திரவ நிலையிலுள்ள பிளாஸ்மா என்கிற பொருளும் உள்ளன. மேற்சொன்ன மூன்று அணுக்களும் எலும்பு மஜ்ஜையிலிருந்து உருவாகின்றன. ரத்த சிவப்பணுக்களில் உள்ள ஹீமோகுளோபின் என்கிற பொருளே ரத்தத்திற்கு சிவப்பு நிறத்தைக் கொடுக்கிறது. உடல் செல்களுக்கு ஆக்சிஜனை கொண்டு சேர்ப்பது, கார்பன் டை ஆக்சைடு வாயுவை சுமந்து சென்று வெளியேற்றுவது போன்ற பணிகளை இந்த ரத்த சிவப்பணுக்கள் மேற்கொள்கிறது. இதிலுள்ள ஹீமோகுளோபின் அளவு குறைவதால் ரத்தசோகை நோய் ஏற்படுகிறது.

உடலில் காயம் ஏற்பட்டவுடன் ரத்தம் வெளியேறுவதை இயற்கையாகவே தடுக்கும் அமைப்பாக செயல்படுகிறது ரத்தத்திலுள்ள பிளேட்லெட் அணுக்கள். நமது உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்வதற்கு ரத்தத்திலுள்ள ஒவ்வொரு பொருளும் மிகவும் அவசியம். அதில் ரத்த வெள்ளை அணுக்களே உடல் நோய் எதிர்ப்பு ஆற்றலுக்கான முக்கியக் காரணியாக திகழ்கிறது.

நோய் எதிர்ப்பு மண்டலம் என்பது என்ன?

ரத்தம், செல்கள், திசுக்கள் மற்றும் உடல் உறுப்புகள் போன்றவற்றால் உருவான உடலை பாதுகாக்கும் கட்டமைப்பினையே நோய் எதிர்ப்பு மண்டலம் என்று சொல்கிறோம். இந்த நோய் எதிர்ப்பு மண்டலம் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு எப்போதும் சோர்வு, அடிக்கடி காய்ச்சல், சளி மற்றும் தொண்டைப்புண் போன்ற பாதிப்புகள் ஏற்படுவதோடு, சுற்றுப்புற தூசிகள், மாசுக்கள் போன்றவற்றால் உடனே சரும அழற்சி, சுவாசப் பாதை அழற்சி போன்றவையும் ஏற்படுகிறது.

பிறந்த குழந்தைகளின் உடலில் நோய் எதிர்ப்பு மண்டலம் முதிர்ச்சி அடைந்திருக்காது. எனவே, தாய்ப்பால் வழியாகவே குழந்தைகளுக்குத் தேவையான நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்கிறது. அதனால்தான் குழந்தை பிறந்த முதல் ஆறு மாதங்களுக்குத் தாய்ப்பால் மட்டுமே அளிக்க வேண்டும். அதன் பிறகு தாய்ப்பால் புகட்டுவதுடன், வேறு உணவுகளையும் அளிக்கலாம். ஆனால், கட்டாயம் ஓராண்டு வரை தாய்ப்பால் கொடுக்க வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.

ஒரு பக்கம் மருத்துவத்துறை வளர்ச்சி பெரிய அளவில் இருந்தாலும், மறுபக்கம் நாளுக்கு நாள் புதுப்புது நோய்கள் புதுப்புது பெயர்களுடன் வந்து நம்மை பயமுறுத்திக் கொண்டுதான் இருக்கின்றன. நோய்களுக்கு ஏற்ப மருந்து சாப்பிட்டாலும் அவ்வளவு எளிதில் அது குணமடைவதும் கிடையாது. மேலும் மருந்தே கண்டுபிடிக்கப்படாத நோய்களும் அவ்வப்போது ஏற்படுகின்றன. சிலருக்கு அடிக்கடி ஏதாவது உடல்நல பிரச்னை வந்துகொண்டே இருக்கும். அதிலும் காலநிலை மாறும்போதெல்லாம் உடனே காய்ச்சல், சளி என ஏதாவது வந்து கொண்டே இருக்கும். இதற்கெல்லாம் காரணம் உடலின் நோய் எதிர்ப்பு மண்டலம் சரி வர தன் பணியை செய்யாததே காரணம்.

எதிர்ப்பு சக்தி குறைவதற்கான காரணங்கள்…

உடல் சோர்வு, தொடர்ச்சியாக கிருமித் தொற்று ஏற்படுதல், ப்ளூ, சளி, தொண்டைப்புண் ஏற்படுதல், அழற்சிகள், காயங்கள் ஆற நாளாதல், பலவீனமான உடல் அமைப்பு, மன அழுத்தம், ஒவ்வாமை ஏற்படுத்தக்கூடிய சூழல், தூக்கமின்மை, சர்க்கரை மற்றும் புற்றுநோய் பாதிப்பு, உடல் உறுப்பு மாற்று அறுவைசிகிச்சை செய்திருப்பது, மது, புகை மற்றும் போதைப் பழக்கம் போன்ற காரணிகளும் நோய் எதிர்ப்பு சக்தி
குறைவதற்கு காரணமாகிறது.

தூக்கம் அவசியம்….

உடலில் வளர்சிதை மாற்றங்கள் சிறப்பாக நடைபெற தூக்கம் மிகவும் அவசியம். தூக்கமின்மையால் ஏற்படும் மன அழுத்தத்தால் உடலில் கார்டிசோல்(Cortisol) என்னும் ஹார்மோன் சுரப்பது அதிகமாகிறது. இது உடலின் நோய் எதிர்ப்பு செயல்பாடுகளைப் பாதிக்கிறது. எனவே ஆழ்ந்த தூக்கத்தைப் பெற்றுக் கொள்ள கவனம் செலுத்துங்கள்.

ஆரோக்கியமான உணவுப்பழக்கம்..

உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும் பால் பொருட்கள், காய்கறிகள், சிட்ரஸ் பழங்கள், பருப்புகள், கீரைகள், பயிறு வகைகள் போன்றவற்றை அதிக அளவு உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். போதுமான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும். தண்ணீர் உடலின் கழிவுகளை வெளியேற்றி உடலுக்குத் தேவையான ஆற்றலைத் தருகிறது. உடல் வெப்பத்தைச் சீராகப் பராமரிக்கிறது. உடல் வளர்சிதை மாற்றத்தை அதிகரித்து, எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் உதவுகிறது. நாம் உண்ணும் உணவில் உடல் ஆரோக்கியத்துக்கு அவசியமான வைட்டமின்கள் மற்றும் தாதுச்சத்துக்கள் நிறைந்திருப்பது அவசியம்.

ஆற்றலை அதிகரிக்கும் உணவுகள்….

உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும் பூண்டு, மஞ்சள், வெங்காயம் போன்றவற்றை உணவில் தினசரி சேர்த்துக்கொள்வது நல்லது. ஆயுர்வேத மருத்துவத்தில் தலைவலி முதல் புற்றுநோய் வரை பல நோய்களையும் குணமாக்க வெள்ளைப் பூண்டு பயன்படுத்தப்படுகிறது. இது உடலுக்குக் கெடுதல் செய்யும் வைரஸ் மற்றும் பாக்டீரியாக்களை எதிர்க்கும் திறன் கொண்டது. மஞ்சள் ஒரு இயற்கையான ஆன்டிபயாட்டிக் என்பதால் நோய் எதிர்ப்பு சக்தி அதிரிக்க உதவுகிறது.

வெங்காயத்தில் உள்ள செலினியம் என்கிற தாதுச்சத்து நோய் எதிர்ப்பு செயல்பாட்டினைத் தூண்டும் தன்மையுடையது. இதில் உள்ள அலிலின் என்னும் வேதிப்பொருள் பாக்டீரியாக்கள், நச்சுகள், காளான் போன்றவை உடலில் சேராமல் தடுக்க உதவுகின்றன. பாதாம் பருப்பு போன்ற பிற கொட்டை வகை உணவுகளில் உள்ள மாங்கனீஸ், வைட்டமின் ஈ போன்ற சத்துக்கள் நோய் எதிர்ப்பு சக்திக்குக் காரணமான வெள்ளை அணுக்களின் செயல்பாட்டைத் தூண்டிவிடுகின்றன.

இதுபோன்று உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் பல்வேறு உணவுப்பொருட்களை சாப்பிடுவதன் மூலம் நோய் எதிர்ப்பு சக்தியை
அதிகப்படுத்தலாம்.

சுத்தம்… சுகாதாரம்…

சாப்பிடுவதற்கு முன்னும் பின்னும், செல்லப் பிராணிகளை தொட்ட பிறகு, வேலைகள் செய்த பிறகு, கழிவறைக்குச் சென்ற பிறகு கைகளை சுத்தமாக கழுவுதல் அவசியம். காய்கறிகளை நன்றாக கழுவி சமைப்பதோடு, சமையல் அறை பொருட்களையும் சுத்தமாக வைத்திருப்பது அவசியம். நாம் உண்ணும் பொருட்கள் சத்துக்கள் நிறைந்துள்ளதாக இருப்பதோடு, சுகாதாரமானதாகவும் இருப்பதை நாம் உறுதி செய்துகொள்வது நல்லது.

வாழ்வியல் மாற்றங்கள்….

யோகா மற்றும் உடற்பயிற்சிகளை தினசரி செய்வதால் உடலில் ரத்த ஓட்டம் சீராகிறது. இதனால் உடல் உறுப்புகள் வலுப்பெற்று நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது. வாய்விட்டு சிரித்தால் நோய்விட்டுப் போகும் என்பதற்கேற்ப, மனம்விட்டு சிரித்துப் பழகுங்கள். இதனால் மன அழுத்தத்தை உண்டாக்கும் ஹார்மோன்களின் அளவு குறைந்து, நோய் எதிர்ப்பு செல்கள் அதிகரிக்கும். காலை நேர சூரிய ஒளி உங்கள் மீது தினமும் படும்படி பார்த்துக் கொள்ளுங்கள். இது உங்களுக்குப் போதுமான அளவு வைட்டமின் டி கிடைக்க உதவியாக இருக்கும்.

தவிர்க்க வேண்டியவை…..

சிகரெட்டில் உள்ள புகையிலை உடலில் உள்ள ஆன்டி ஆக்ஸிடென்டுகளை அழித்து நோய் எதிர்ப்பு சக்தியை குறைக்கிறது. அதிக அளவு மது குடிப்பதால் அதில் உள்ள ஆல்கஹால், வைட்டமின் மற்றும் கனிமச் சத்துக்களை உடல் உறிஞ்சிக்கொள்வதைத் தடுப்பதோடு, வெள்ளையணுக்களை அழித்து நோய் எதிர்ப்பு சக்தி குறைய காரணமாகிறது. எனவே, உடல்நல சீர்கேடுகளை உண்டாக்கும் புகை, மது, போதைப் பொருள், துரித உணவுகள் மற்றும் வெள்ளைச் சர்க்கரை போன்றவற்றின் பயன்பாட்டினைத் தவிர்ப்பது நல்லது.

நமது உடல் எப்போதும் வலிமையோடும் ஆரோக்கியத்தோடும் இருப்பதற்கு உணவு மட்டும் போதாது. அதற்கு நம் பழக்கவழக்கங்கள், வாழ்க்கைமுறை, உடற்பயிற்சி போன்றவையும் அவசியம். இவை அனைத்தும் ஒன்றிணையும்போதுதான் உடலிலுள்ள நோய் எதிர்ப்பு சக்தியின் ஆற்றல் அதிகரிக்கிறது. இப்படி உடல் நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலிமையாக வைத்துக் கொண்டால் நாம் நோய்களின்றி ஆரோக்கியமாக வாழலாம்…❣ ❣ ❣ ❣ ❣ ❣ ❣ ❣ ❣ ❣ ❣