பணவீக்கத்தை அடிப்படையாகக் கொண்ட மொத்தவிலைக் குறியீடு ஜூன் மாதத்தில் 5.77 சதவீதமாக அதிகரித்துள்ளது. எரிபொருள்கள், காய்கறிகள் விலை உயர்ந்துள்ளதால் மொத்த விலை பணவீக்கம் அதிகரித்துள்ளது.
இதற்கு முந்தைய மாதமான மே மாதத்தில் 4.43 சதவீதமாக இருந்தது. கடந்த ஆண்டின் ஜூன் மாதத்தில் 0.90 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
குறிப்பாக எரிபொருள்களின் விலைக் குறியீடு ஜூன் மாதத்தில் 16.18 சதவீதம் அதிகரித்தது. இதன் மொத்த விலைக் குறியீடு மே மாதத்தில் 11.22 சதவீதமாக இருந்தது. கச்சா எண்ணெய் விலை உயர்வால், உள்நாட்டிலும் பெட்ரோல், டீசல் விலை அதிகரித்து வருகிறது.
வெங்காயத்தின் மீதான மொத்த விலைக் குறியீடு 13.20 சதவீதத்திலிருந்து 18.25 சதவீதமாக உயர்ந்துள்ளது.
முன்னதாக ஏப்ரல் மாதத்தில் 3.18 சதவீதமாக இருக்கும் என கணிக்கப்பட்ட பணவீக்கம் 3.62 சதவீதமாக அதிகரித்துள்ளது. பணவீக்கம் தொடர்ச்சியாக உயர்ந்து வருவதை ரிசர்வ் வங்கி கண்காணித்து வருகிறது. கடந்த ஆண்டு அக்டோபர்- மார்ச் மாதங்களில் 4.7 சதவீதமாக இருந்தது.
கடந்த மாதம் நடைபெற்ற ரிசர்வ் வங்கியின் இரண்டாவது நிதிக் கொள்கை கூட்டத்தில் 0.25 வட்டி விகிதம் உயர்த்தப்பட்டது. நான்கு ஆண்டுகளுக்கு பின்னர் இந்த வட்டி விகிதத்தினை ரிசர்வ் வங்கி உயர்த்தியது. இந்த நிலையில் ஏப்ரல் மாதத்தில் இருந்து கச்சா எண்ணெயின் விலை ஒரு பேரல் 66 டாலர் என்கிற விலையிலிருந்து தற்போது 74 டாலர் வரை உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. வரும் 30-ம் தேதி ரிசர்வ் வங்கியில் அடுத்த நிதிக் கொள்கை கூட்டம் நடைபெற உள்ளது.