எல்லை மேலாண்மை கொள்கையில் சட்டவிரோத வர்த்தகத்தை தடுப்பதே முக்கிய நோக்கம்: ஐ.நா. சபையில் இந்தியா தகவல்

சட்டவிரோத வர்த்தகத்தை தடுப்பதையே இந்தியா தனது எல்லை மேலாண்மை கொள்கையின் முக்கிய நோக்கமாகக் கொண்டுள்ளது என ஐ.நா. கருத்தரங் கில் தெரிவிக்கப்பட்டது.

சட்டவிரோத ஆயுத விற்பனையை தடுப்பதற்கான செயல்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தை மறுஆய்வு செய்வது தொடர்பான 3-வது கருத்தரங்கம் ஐ.நா. சபையில் நடைபெற்றது.

இதில் இந்தியத் தூதர் அமன்தீப் சிங் கில் பேசியதாவது:

சட்டவிரோத வர்த்தகத்துக்கு எதிராக நாட்டின் எல்லையை பாதுகாப்பதே இந்தியாவின் எல்லை மேலாண்மை கொள்கையின் முக்கிய நோக்கமாகும். எல்லை மேலாண்மை துறை ஏற்படுத்துவது, இருதரப்பு மற்றும் பலதரப்பு ஒத்துழைப்புக்கான வழிகளை ஏற்படுத்துவது உள்ளிட்ட நடவடிக்கை மூலம் இதை அடைவது இந்தியாவின் நோக்கமாகும்.

சிறிய மற்றும் மிதரக ஆயுதங்களின் சட்டவிரோத விற்பனையை பலதரப்பு ஒத்துழைப்பு மூலம் ஒழிக்கும் செயல்திட்டத்துக்கு இந்தியா அதிக முக்கியத்துவம் அளித்து வருகிறது. தீவிரவாதம், நாட்டுக்கு வெளியே திட்டமிடப்படும் குற்றச் செயல்கள், போதைப் பொருள் கடத்தல், கடற்கொள்ளை மற்றும் சட்டவிரோத ஆயுத விற்பனையால் இந்தியாவின் தேசப் பாதுகாப்பு பாதிக்கப்பட்டுள்ளது.

சட்டவிரோத ஆயுத விற்பனையை தடுக்கும் செயல்திட்டத்தை முழுமையாக செயல்படுத்துவதே இந்தியாவின் முன்னுரிமை பணியாக இருக்கும். தீவிரவாதம் மற்றும் நாட்டுக்கு வெளியே திட்டமிடப்படும் குற்றச் செயல்களைத் தடுப்பதற்கு இது ஒரு வழியாக இருக்கும்.

பொறுப்புள்ள நாடுகள் மற்றும் சர்வதேச அமைப்புகளின் முயற்சிகளுக்கு பிறகும் எல்லைகளை கடந்து சட்டவிரோத ஆயுத விற்பனை தொடர்கிறது. எனவே இதனை தடுப்பதற்கான செயல்திட்டத்தை வலுப்படுத்துவது அவசியம்.

இவ்வாறு அமன்தீப் சிங் கில் பேசினார்.

Leave a comment

Your email address will not be published.