ஏமனின் அல்குடாய்டா பகுதியைக் குறிவைத்து அதிபரின் ஆதரவு படை வீரர்கள் நேற்று தாக்குதல் நடத்தினர்.
ஏமன் நாட்டில் உள்நாட்டுப் போர் தீவிரமடைந்துள்ளது. இதன் காரணமாக சுமார் 80 லட்சம் பேர் உணவின்றிப் பரிதவிக்கின்றனர் என்று ஐ.நா. சபை தெரிவித்துள்ளது.
தென்மேற்கு ஆசியாவில் உள்ள ஏமன் நாட்டில் சன்னி பிரிவைச் சேர்ந்த அதிபர் மன்சூர் ஹைதிக்கும் ஷியா பிரிவைச் சேர்ந்த ஹவுத்தி கிளர்ச்சிப் படைக்கும் இடையே கடந்த 2015 மார்ச் முதல் உள்நாட்டுப் போர் நடைபெற்று வருகிறது. அதிபர் மன்சூர் ஹைதிக்கு சவுதி அரேபியாவும் ஹவுத்தி கிளர்ச்சிப் படைக்கு ஈரானும் ஆதரவு அளிக்கின்றன. தலைநகர் சனா உட்பட பெரும்பான்மை பகுதி ஹவுத்தி கிளர்ச்சிப் படையின் வசம் உள்ளன.
இந்தப் பின்னணியில் கிளர்ச்சிப் படை கட்டுப்பாட்டில் உள்ள அல்-குடாய்டா துறைமுகம், விமான நிலையத்தை குறிவைத்து அதிபரின் படைகள் கடந்த சில நாட்களாக தீவிர தாக்குதல் நடத்தி வருகின்றன. இந்த துறைமுகத்தின் மூலமாகவே 80 சதவீத உணவுப் பொருட்கள், மருந்துகள் இறக்குமதி செய்யப்பட்டு வந்தன. துறைமுகத்தை குறிவைத்து தாக்குதல் நடப்பதால் இறக்குமதி தடைபட்டு ஹவுத்தி பகுதிகளில் கடும் உணவுப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. ஏமனின் மொத்த மக்கள் தொகையான 2.7 கோடி பேரில் சுமார் 80 லட்சம் பேர் பட்டினியால் பரிதவிப்பதாக ஐ.நா. சபை கவலை தெரிவித்துள்ளது.
அல்-குடாய்டா துறைமுகம் மீதான தாக்குதலை கைவிடுமாறு ஐ.நா. சபை வலியுறுத்தியுள்ளது. ஆனால் இருதரப்பினரும் ஏற்க மறுத்து சண்டையில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த 2 நாட்களில் மட்டும் 50 பேர் பலியாகி உள்ளனர். இதேநிலை நீடித்தால் துறைமுகத்தை சுற்றி வசிக்கும் சுமார் 25 ஆயிரம் பேர் பலியாகக்கூடும் என்று தன்னார்வ தொண்டு அமைப்புகள் தெரிவித்துள்ளன. அல்-குடாய்டா மட்டுமன்றி வேறு பகுதிகளிலும் சண்டை நடைபெறுகிறது. அந்த பகுதிகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் பாதுகாப்பான இடங்களைத் தேடி இடம்பெயர்ந்து செல்கின்றனர்.