ஒரே நாளில் 13.38 செமீ மழைப் பதிவு; சேலத்தில் 5 மணி நேரம் கனமழை

சேலத்தில் நேற்று முன்தினம் இரவு தொடங்கி 5 மணி நேரம் கொட்டித் தீர்த்த கனமழையால் வீடுகளுக்குள் மழை நீர் புகுந்தது. சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. கடந்த 56 ஆண்டுகளுக்குப் பிறகு 13.38 செமீ மழை பதிவாகியுள்ளது. ஏரியில் மூழ்கி பெண் ஒருவர் பலியான நிலையில், ஓடை நீரில் அடித்துச் செல்லப்பட்ட மாணவரை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்றது.

சேலத்தில் நேற்று முன்தினம் இரவு 9.30 மணிக்கு குளிர்ந்த காற்று வீச, சாரல் மழையாய் ஆரம்பித்து, திடீரென இடி, மின்னலுடன் மழை பெய்தது. தங்குதடையின்றி கடும் வேகமெடுத்து மழை கொட்டியபடியே இருந்தது. சேலத்தைச் சுற்றியுள்ள சேர்வராயன் மலை, ஜருகுமலை, நாமமலை, சன்னியாசிகுண்டு, ஊத்துமலைகளில் இருந்து சேர்ந்த மழை நீர், ஓடைகளை நோக்கி பெருக்கெடுத்து ஓடியது. குமரகிரி ஏரியை நிருப்பி வெள்ளக்குட்டை ஓடை வழியாகச் சென்ற மழை நீர் திருமணிமுத்தாற்றில் பெருக்கெடுத்து ஓடியது. நீர் வழிப்பாதையில் உள்ள ஆக்கிரமிப்புகளால் ஊருக்குள் மழை நீர் வெள்ளம் புகுந்து வீடுகளைச் சூழ்ந்தது.

சேலம் பச்சப்பட்டியில் நீரில் அடித்துச் செல்லப்பட்ட மாணவரை தேடும் பணியில் ஈடுபட்ட தீயணைப்பு வீரர்கள். இப்பணியை மாநகர காவல் துணை ஆணையர் சுப்புலட்சுமி பார்வையிட்டார்.

சாலைகளில் முழங்கால் அளவுக்கு மழை நீர் ஓடியது. நேற்று முன்தினம் இரவு 9.30 மணி முதல் அதிகாலை 2.30 மணி வரை ஓயாமல் 5 மணி நேரம் மழை பெய்தது. சேலத்தில் கடந்த 56 ஆண்டுகளுக்குப் பிறகு 13.38 செமீ மழை பதிவானது குறிப்பிடத்தக்கது.

வீடுகளில் புகுந்த நீர்

இடைவிடாது கொட்டித் தீர்த்த மழையால் பச்சப்பட்டி குடியிருப்பு பகுதியில் தண்ணீர் சூழ்ந்தது. இதனால் பொதுமக்கள் வீடுகளுக்குள் செல்ல முடியாமல தவித்தனர்.

சேலம் மாநகராட்சிப் பகுதியில் சாக்கடை கால்வாய், ராஜ வாய்க்கால், தாழ்வான மோரி பாலங்களில் அடைப்புகள் இருந்ததால், அதிகப்படியான மழை நீர் செல்ல வழியின்றி ஊருக்குள் புகுந்து வீடுகளைச் சூழ்ந்தது. விடிய விடிய பொதுமக்கள் மழை நீரை வெளியேற்றியபடியே இருந்தனர். சேலம் களரம்பட்டி ஆட்டோ ஸ்டாண்டு, சிங்கமெத்தை மற்றும் தாதகாப்பட்டி பெரியார் வளைவு ஆகிய 3 இடங்களில் மழை வெள்ளம் வீடுகளில் புகுந்ததால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். போலீஸார் அவர்களை சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். இதனால், அந்த இடங்களில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

சேலம் நாராயணன் நகர், குறிஞ்சி நகர் ஹவுசிங் போர்டு பகுதியைச் சேர்ந்த வெள்ளிப்பட்டறை தொழிலாளி முகமது இசாத். இவரது மகன் முகமது ஷாத் பிளஸ் 1 படித்து வந்தார். நேற்று முன்தினம் இரவு முகமது ஷாத், சகோதரர் சாதம் உசேன் மற்றும் அப்துல் ஆகிய மூவரும் சினிமாவுக்கு சென்றுவிட்டு, நள்ளிரவு வீடு திரும்பிக் கொண்டிருந்தனர்.

குறிஞ்சி நகர் ஹவுசிங் போர்டு அருகே வந்தபோது, சாலையில் பெருக்கெடுத்து ஓடிய மழை நீரில் தட்டுத்தடுமாறி நடந்து வந்தனர். அப்போது, 10 அடி ஆழம் கொண்ட ஓடை இருப்பதை அறியாமல் முகமது ஷாத் தவறி விழ இருந்தார். அப்போது அவரின் கையை அவரது சகோதரர் சதாம் உசேன் பிடித்துக் கொண்டார். அவரையும் சேர்த்து தண்ணீர் இழுத்தது. இதில், முகமது ஷாத் கை நழுவி ஓடை நீரில் அடித்துச் செல்லப்பட்டார். தீயணைப்புத் துறை வீரர்கள், வருவாய்த் துறை மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் 7 குழுக்களாக பிரிந்து மாணவர் உடலை தேடும் பணியில் ஈடுபட்டனர். நேற்று இரவு வரை தேடும் பணி தொடர்ந்தது.

இதேபோல, கிச்சிப்பாளையம் முனியப்பன் கோயில் வீதியைச் சேர்ந்த ஆல்பர்ட் என்பவரின் மனைவி புஷ்பா (55) நேற்று முன்தினம் இரவு வீட்டில் இருந்து வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை. நேற்று காலை எருமாபாளையம் ஏரியில் தண்ணீரில் மூழ்கி இறந்து கிடந்தார். இவ்விரு சம்பவங்கள் குறித்தும் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

ஆட்சியர் ஆய்வு

போராட்டம் நடத்திய பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய சேலம் மாவட்ட ஆட்சியர் ரோஹிணி.

மாணவர் முகமது ஷாத் வெள்ளக்குட்டை ஓடையில் அடித்துச் செல்லப்பட்டதை அடுத்து, ஆட்சியர் ரோஹிணி, மாநகராட்சி ஆணையர் சதீஷ் ஆகியோர் கருவாட்டு பாலம் ஓடை பகுதியை ஆய்வு செய்தனர். பொக்லைன் வாகனங்கள் வரவழைக்கப்பட்டு ஆங்காங்கே அடைப்பு உள்ள இடங்களில் தூர் வார நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆட்சியர் ரோஹிணி கூறும்போது, ‘அதிகமான மழையே, சாலை, வீடுகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓட காரணமாக அமைந்தது. அடிக்கடி ஓடைகள் தூர் வாரப்பட்ட நிலையிலும், அளவுக்கு அதிகமான மழை வெள்ளத்தாலே, ஊருக்குள் நீர் புகுந்துள்ளது. மாணவர் உடலை மீட்கும் பணியில் அதிகாரிகள் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்’ என்றார்.

Leave a comment

Your email address will not be published.