ஓய்வுபெற்ற அதிகாரிகளுக்கு நலவாரியம், காவலர்களுக்கு இலவச உடல் பரிசோதனை; ரூ.342 கோடியில் 90 புதிய திட்டங்கள்- காவல் துறையினருக்கான முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார் முதல்வர் பழனிசாமி

ஓய்வுபெற்ற அதிகாரிகளுக்கு நலவாரியம், 30 வயதுக்கு மேற்பட்ட காவலர்களுக்கு இலவச முழு உடல் பரிசோதனை என்பன உட்பட காவல் துறையினருக்கு ரூ.342 கோடியில் 90 புதிய அறிவிப்புகளை முதல்வர் கே.பழனி சாமி வெளியிட்டார்.

சட்டப்பேரவையில் காவல், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணி கள் ஆகிய துறைகளின் மானியக் கோரிக்கைகள் மீது நேற்று முன்தினம் விவாதம் நடந்தது. இதில் எதிர்க்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின் உள்ளிட்ட உறுப்பினர் கள் பேசினர். விவாதத்துக்கு முதல்வர் நேற்று பதிலளித்து பேசினார். தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு சிறப்பாக பராமரிக்கப்படுவதாகவும் குற்றங்கள் வெகு வாக குறைந்துள்ளதாகவும் அப் போது அவர் தெரிவித்தார்.

அதைத் தொடர்ந்து காவல் துறையினருக்காக பல புதிய அறிவிப்புகளை வெளியிட்டார். அவர் கூறியதாவது:

காவல் துறையில் 30 வயதுக்கு மேற்பட்ட காவலர்களுக்கு இலவசமாக முழு உடல் பரிசோதனை மேற்கொள்ளப்படும். ஓய்வுபெற்ற காவல் அதிகாரிகளுக் கான நலவாரியம் ஒன்று உருவாக்கப்படும். டிஜிபி அலுவலகத் தில் அலுவலக கணினிமயமாக் கல் எஸ்பி பதவி, உயர் நீதிமன்ற மதுரை கிளைக்கு கூடுதலாக 3 ஆயுதப்படை பிரிவுகள், அதற்கு அமைச்சுப் பணியாளர் இடங்கள் ஆகியவை ரூ.13 கோடியே 51 லட்சத்தில் உருவாக்கப்படும். காவல் துறைக்கு வஜ்ரா, வருண் வாகனங்கள், பேருந்துகள், இருசக்கர வாகனங்கள், ஆம்புலன்ஸ், வேன், நடமாடும் கழிப்பறை வாகனங்கள் உட்பட 1,397 வாகனங் கள் ரூ.119 கோடியே 73 லட்சம் மதிப்பில் வாங்கப்படும்.

இடமாற்றம்

கடலோரப் பாதுகாப்புப் பிரி வின் காவல் கண்காணிப்பாளர் தலைமை இடம், நாகையில் இருந்து சென்னைக்கு மாற்றப்படும்.

மேலும் மாநில குற்ற ஆவணக் காப்பக காவல் துறைத் தலைவர் பதவி, காவல் துறைத் தலைவர் (பொது) என பெயர் மாற்றம் செய்யப்படும். உயர் நீதிமன்ற மதுரை கிளையிலும் திருப்பூர் மாவட்டம் திருமுருகன்பூண்டி, சேலம் மாவட்டம் கொங்கணாபுரத்திலும் காவல் நிலையங்கள், வாழப்பாடியில் அனைத்து மகளிர் காவல் நிலையம் ஆகியவை ரூ.15 கோடியே 79 லட்சத்தில் உருவாக்கப்படும்.

இதேபோல் 30 மாவட்டங்கள், 14 சிறப்பு படைப் பிரிவுகளில் காவல் வாத்தியக் குழுக்கள் ரூ.3 கோடியே 31 லட்சத்தில் உருவாக் கப்படும்.

19 வகை சிறப்புக் கருவிகள்

காவலர்கள் பயிற்சிக்காக ரூ.4 கோடியே 20 லட்சத்தில் ரெமிங் டன் கன், அண்டர் பேரல் கிரி னேடு லாஞ்சர், மல்டி செல் லாஞ்சர், கேஸ் கன், சப் மெஷின் கன் போன்ற 19 வகையான சிறப்புக் கருவிகள் வாங்கப்படும். கலவரத் தடுப்பு முன்னெச்சரிக்கை மென்பொருள் திட்டம் ரூ.1 கோடியே 32 லட்சம் மதிப்பில் உருவாக்கப்படும்.

தடய அறிவியல் துறையில் சிறந்து விளங்கும் 2 அறிவியல் அறிஞர்களுக்கு ரூ.30 ஆயிரம் செலவில், ‘தமிழ்நாடு முதல்வரின் தடய அறிவியல் துறையில் சிறந்தோருக்கான விருது’ இந்தாண்டு முதல் வழங்கப்படும்.

தடயவியல் துறைக்கு வாயு இயல்பை அறியும் கருவி, அகச் சிவப்பு மற்றும் புறஊதா புகைப்படக் கருவி, எளிய நுண்நோக்கிகள், மாற்று ஒளி ஊற்றுகள் போன்ற புதிய உபகரணங்கள் ரூ.8 கோடியே 31 லட்சத்தில் வழங்கப்படும்.

தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையின் அமைச்சுப் பணியாளர்களுக்கும் காவலர் அங்காடி வசதிகள் விரிவுபடுத்தப்படும். தீயணைப்புத் துறை பணியாளர்கள் 10, 15, 20 ஆண்டுகள் தண்டனை இன்றி பணியாற்றி னால் வழங்கப்படும் நீள்பணி சிறப்பூதியம் ரூ.5, ரூ.8, ரூ.10 என்பதை மாற்றி ரூ.100, ரூ.160 மற்றும் ரூ.200 என உயர்த்தப்படும். இவ்வாறு முதல்வர் பழனிசாமி அறிவித்தார்.

காவல் மற்றும் தீயணைப்புத் துறைக்கு மொத்தமாக ரூ.342 கோடியே 6 லட்சம் மதிப்பிலான 90 புதிய திட்டங்களை முதல்வர் வெளியிட்டார்.

Leave a comment

Your email address will not be published.