கோவை: தென் மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ள நிலையில் கோவை மாவட்டம் முழுவதும் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. பலத்த காற்றுடன் மழை பெய்து வருவதால் மாநகரின் பல்வேறு பகுதிகளில் மரங்கள் சாய்ந்தன. இன்று அதிகாலை முதல் கோவையில் பீளமேடு, காந்திபுரம், சிங்காநல்லூர், அவிநாசி சாலை, சூளூர், கவுண்டன்பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. காலை நேரங்களில் வேலைக்கு செல்பவர்களும், பள்ளிக்கு செல்பவர்களும் கடும் சிரமத்திற்கு ஆளாகினர். இதனையடுத்து கோவை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை என ஆட்சியர் ஹரிஹரன் அறிவித்துள்ளார்.
நீலகிரி மாவட்டத்தில் பெய்தும் வரும் கனமழை காரணமாக 5 தாலுகாவில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கூடலூர், பந்தலூர், உதகை, குந்தாவில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதாக ஆட்சியர் கூறியுள்ளார். குன்னூர் தாலுகாவில் கேத்தி, எல்லநள்ளி பகுதியில் உள்ள பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து மழை பெய்து வருவதால், கோவை மாவட்ட மக்களின் குடிநீர் ஆதாரமாக விளங்கும் சிறுவாணி அணை வேகமாக நிரம்பி வருகிறது. மேலும், கோவை குற்றாலம் அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டுவதால் 4ஆவது நாளாக சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. பலத்த காற்றுடன் கூடிய மழை மற்றும் பல மரங்கள் சாய்ந்து விழுந்துள்ளதன் காரணமாக சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பினை கருத்தில் கொண்டு கோவை குற்றாலத்திற்கு தற்காலிகமாக பொதுமக்கள் செல்ல அனுமதி இல்லை என வனத்துறை உத்தரவிட்டுள்ளது.
கோவையில் உள்ள பவானி ஆற்றங்கரையோர மக்களுக்கு 4வது நாளாக வெள்ள அபாய எச்சரிக்கை விடுவிக்கப்பட்டுள்ளது. 100 அடிக்கொண்ட பில்லூர் அணை நிரம்பிய நிலையில் பாதுகாப்பு கருதி 97 அடி மட்டுமே நீர் தேக்கப்படுகிறது. அணைக்கு நேற்று காலை வினாடிக்கு 6,000 கனஅடி தண்ணீர் வந்த நிலையில் தொடர் மழையால் நீர் வரத்து படிப்படியாக அதிகரித்தது. இரவு 11 மணி அளவில் 18,000 கனஅடியாக உயர்ந்துள்ளது. நீர் வரத்து ஒரே நாளில் 12,000 கனஅடி அதிகரித்த நிலையில் அணைக்கு வரும் நீர் முழுவதும் வெளியேற்றம் செய்யப்படுகிறது. அதிகாரிகள் முன்னெச்சரிக்கையாக கரையோரம் பகுதிகளை கண்காணித்து வருகின்றனர். வெள்ள அபாய எச்சரிக்கையை தொடர்ந்து மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.