பெங்களூரு: கர்நாடக மாநிலம் கபினி அணையில் இருந்து தமிழகத்துக்கு 1000 கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது. கபினி அணை வேகமாக நிரம்பி வருவதால் தமிழ்நாட்டுக்கு கர்நாடகம் தண்ணீர் திறந்துள்ளது. கபினி அணையில் இருந்து காவிரி நீர் 2 நாட்களில் தமிழகம் வந்தடையும் என கூறப்படுகிறது.
கடந்த சில நாட்களாக காவிரி ஆற்றின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழை காரணமாக கே.ஆர்.எஸ்., கபினி, ஹாரங்கி அணைகள் வேகமாக நிரம்புகின்றன. கடந்த மே 30ம் தேதி கர்நாடகாவின் கடலோர பகுதிகளில் பருவமழை தொடங்கியது. இதனால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து வருகிறது. தற்போது கர்நாடக அணைகளின் நீர்வரத்து இன்றைய நிலவரப்படி வினாடிக்கு 50,000 கன அடியை தாண்டியிருக்க வாய்ப்புள்ளது.
அணைகளின் நீர் இருப்பும் 25 டி.எம்.சியை தாண்டியிருக்கக் கூடும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பின்படி ஜூன் மாதத்தில் 10 டி.எம்.சியும், ஜூலையில் 34 டி.எம்.சியும் தமிழகத்திற்கு வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இது காவிரி பாசன மாவட்டங்களில் குறுவை சாகுபடியை தொடங்க போதுமானதாக இருக்கும் என கூறியுள்ளனர்.