மத்திய அமெரிக்க நாடான கவுதமாலாவில் எரிமலை வெடிப்பில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 75-ஆக உயர்ந்துள் ளது.
கவுதமாலா நாட்டின் தென் பகுதியில் பியூகோ எரிமலை அமைந்துள்ளது. மத்திய அமெரிக்க நாடுகளில் உள்ள எரிமலைகளில் மிகவும் அபாயகரமான எரிமலையாக இது கருதப்படுகிறது.

இதனிடையே, கடந்த ஞாயிற்றுக்கிழமை பிற்பகலில், பியூகோ எரிமலையில் திடீர் சீற்றம் ஏற்பட்டு வெடித்து சிதறியது. எரிமலை வெடிப்பினால் வெளியான லாவா குழம்புகள், விஷ வாயுக்கள் தாக்கியதில் 50 பேர் பலியாகினர். பலர் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் அங்குள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
எரிமலை சீற்றம் தணிந்ததைத் தொடர்ந்து, கவுதமாலா நாட்டின் பேரிடர் மீட்புக் குழுவினர் அங்கு இரண்டு நாட்களாக காயமடைந்தவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில், நேற்று முன்தினம், மீண்டும் எரிமலை வெடிப்பு ஏற்பட்டது. இதில், அப்பகுதியைச் சேர்ந்த 25 பேர் உயிரிழந்தனர். எனவே, இந்த எரிமலை வெடிப்புக்கு பலியானவர்களின் எண்ணிக்கை தற்போது 75-ஆக உயர்ந்துள்ளது. மேலும், 200 பேரைக் காணவில்லை எனக் கூறப்படுகிறது. அவர்களைத் தேடும் பணியில் அந்நாட்டு ராணுவத்தினரும், மீட்புக் குழுக்களும் ஈடுபட்டு வருகின்றன.
எரிமலை தொடர்ந்து சீற்றத்துடன் இருப்பதால், மீட்பு நடவடிக்கைகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, பியூகோ எரிமலை அருகில் வசிக்கும் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு செல்லப்பட்டு தங்க வைக்கப்பட்டுள்ளனர்.