மும்பை : மகாராஷ்டிராவில் செய்தியாளர்களிடம் பேசிய காங்., தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, பிரதமர் மோடியை கடுமையாக தாக்கி உள்ளார்.
அவர் கூறியதாவது: ஒவ்வொரு கூட்டத்திலும் பிரதமர் மோடி கேட்கிறார், கடந்த 70 ஆண்டுகளில் காங்., நாட்டிற்காக என்ன செய்தது என்று. ஆனால், காங்., கட்சி ஜனநாயகத்தை காத்ததாலேயே அவரை போன்ற டீக்கடைக்காரர் பிரதமராக முடிந்தது. இந்திரா,ராஜிவ், சோனியாவை தாக்கி பேசப்படுபவை அனைத்தும் பா.ஜ.,வினர் வேண்டுமென்றே நடத்துபவை. காங்., என்பது குடும்பம். நாங்கள் அனைவரும் அதன் உறுப்பினர்கள்.
அவசர காலம் குறித்து பிரதமர் மோடி பேசுகிறாரே, ஆனால் கடந்த 4 ஆண்டுகளாக அறிவிக்கப்படாத அவசர கால நிலை இருந்து வருகிறதே அதற்கு என்ன சொல்ல போகிறார்? விவசாயிகள் தற்கொலை செய்து கொள்கிறார்கள், வேளாண் திட்டங்கள் தோல்வி அடைந்துள்ளன, விவசாயிகளால் புதிய கடன்கள் பெற முடியவில்லை, வர்த்தகம் மந்த கதியில் செல்கிறது. மத்திய அரசின் விளம்பர செலவு நிற்காமல் உயர்ந்து கொண்டே செல்கிறது. மோடி அரசு வீழ்ந்தால் தான் மக்களுக்கு நல்ல காலம் பிறக்கும்.
பா.ஜ.,வுக்கு எதிராக மிகப் பெரிய கூட்டணியை காங்., அமைக்கும். மகாராஷ்டிரா தேர்தலில் காங்., வெற்றி பெற்றால் லோக்சபா தேர்தலிலும் நிச்சயம் வெற்றி பெறும். மகாராஷ்டிராவின் தேர்தல் முடிவுகள் தான் எப்போதும் மத்திய அரசை தீர்மானிக்கும் என்றார்.