காலா படத்துக்கு எதிர்ப்பார்த்ததைவிட எதிர்ப்பு குறைவாகத்தான் வந்திருக்கிறது என்று நடிகர் ரஜினி காந்த தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து இன்று (செவ்வாய்க்கிழமை) விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த ரஜினி கூறும்போது,
”காலா படத்துக்கு கர்நாடகத்தில் தடை இருக்காது என்று நினைக்கிறேன். எந்த காரணமும் இல்லாமல் தடை என்று கூறிக் கொண்டிருக்கிறார்கள். அங்கு தமிழ் மக்கள் மட்டும் அல்ல, பல மொழிகள் பேசும் மக்கள் இருக்கிறார்கள். அவர்களை ஏமாற்ற கூடாது. ஏதாவது பிரச்சினை ஏற்பட்டால் பாதுகாப்பு கொடுப்பார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது” என்றார்.
காவிரி விவகாரம் தொடர்பாக கமல் குமாராசாமி சந்திப்பு குறித்து பத்திரிக்கையாளர்கள் கேட்டதற்கு, “முயற்சி எடுப்பதில் தவறில்லை. அவர்கள் நமக்கு எதிரி அல்ல பெரிய விஷயங்கள் எல்லாம் பேசித்தான் தீர்க்கப்பட்டுள்ளது” என்று ரஜினி தெரிவித்தார்.
நீட் தேர்வில் தேர்ச்சி பெறாததால் விழுப்புரத்தைச் சேர்ந்த பிரதிபா என்ற மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தமிழ்கத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதுபற்றிய கேள்விக்கு ரஜினி, “இது மிகவும் வேதனையான விஷயம். இதற்கு பெரியவர்கள்தான் சேர்ந்து முற்றுபுள்ளி வைக்க வேண்டும். இது இப்படியே தொடரக் கூடாது” என்றார்.