காவிரி, முல்லை பெரியாறு உள்ளிட்ட விவகாரங்களில் தமிழகத்தின் உரிமைகளை விட்டுக் கொடுக்காத வண்ணம் அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும் என்று முதல்வர் கே.பழனிசாமி சட்டப்பேரவையில் தெரிவித்தார்.
சட்டப்பேரவையில் நேற்று பொதுப்பணித் துறை மானிய கோரிக்கை விவாதத்துக்கு பதிலளித்து முதல்வர் கே.பழனிசாமி பேசியதாவது:

ஜெயலலிதா முயற்சிக்கு வெற்றி
காவிரி விவகாரத்தில், உச்ச நீதிமன்றத்தின் இறுதி தீர்ப்பின்படி, காவிரி நீர் மேலாண்மை ஆணையம், காவிரி நீர் முறைப்படுத்தும் குழு அமைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து, மத்திய அரசிதழில் கடந்த ஜூன் 1-ம் தேதி வெளியிட்டுள்ளது. இந்த சிறப்பு மிக்க தீர்ப்பை அரசிதழில் வெளியிட்ட நாள், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் முயற்சிக்கு வெற்றி கிடைத்த நாளாகும்.
ஜெயலலிதா நடத்திய சட்டப்பேராட்டத்தின் மூலம், முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டம் 142 அடியாக உயர்த்தப்பட்டது. உச்ச நீதிமன்ற உத்தரவின்படி அணையை பலப்படுத்தும் 6 பணிகளில் 3 பணிகள் முடிந்துள்ளன. மீதமுள்ள பணிகளுக்கு கேரள வனத்துறை அனுமதியளிக்காததால், தாமதமாகிறது. இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு, நிலுவையில் உள்ளது. தமிழக அரசின் சிறப்பு வழக்கறிஞர்கள் மூலம் இதில் கவனம் செலுத்தப்படுகிறது.
கேரள அரசு முல்லை பெரியாறு அணையின் நீர்ப்பரப்பு உள்ளடக்கிய பகுதியில் பெரும் வாகன நிறுத்தத்தை நிறுவ திட்டமிட்டது. இதை எதிர்த்து பசுமை தீர்ப்பாயத்தில் தொடரப்பட்ட வழக்கில், தமிழக அரசும் தன்னை இணைத்துக் கொண்டது.
இந்த வழக்கில், பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் கேரள அரசுக்கு இடைக்கால தடை பிறப்பிக்கப் பட்டுள்ளது.
தமிழகத்தின் உரிமைகளை விட்டுக் கொடுக்காத வகையில், அனைத்து முயற்சிகளையும் இந்த அரசு தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. மேலும், ஆந்திரா வழியாக தமிழகத்துக்குள் பாயும், பாலாற்றின் குறுக்கில் ஆந்திர அரசு கட்ட திட்டமிட்ட அணையும் தடுக்கப்பட்டு, நிறைவேற்றாத வண்ணம் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கேரளாவுடன் பேச்சுவார்த்தை
பரம்பிக்குளம் – ஆழியாறு திட்டத்தை பொறுத்தவரை, தமிழகம்- கேரள அரசுகளுக்கிடையில் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. ஆனைமலையாற்றில் இருந்து பரம்பிக்குளம்- ஆழியாறு திட்டத்துக்கு 2.5 டிஎம்சி அடி நீரை திருப்ப, ஒப்பந்தப்படி உரிமை உண்டு. ஆனால், இடமலையாறு திட்டம் முடிவடையவில்லை என கேரள அரசு தொடர்ந்து கூறி வருவதால் ஒப்பந்தப்படி திட்டம் நடக்க இயலவில்லை. தமிழக அரசு இத்திட்டத்தை செயலாக்க நடவடிக்கை எடுத்து வருகிறது.
புதிய பாசன உட்கட்டமைப்பு
கோதாவரி ஆற்றின் மிகை நீரில் ஒரு பகுதியை தமிழகத்துக்கு திருப்பும் விவகாரத்தில், திட்டத்தை அமலுக்கு கொண்டுவரும் நடவடிக்கைகளை தsொடர்ந்து அரசு மேற்கொள்ளும். குடிமராமத்து திட்டத்தை பொறுத்தவரை, தற்போது 1,511 பணிகள் ரூ.328 கோடியே 95 லட்சம் மதிப்பில் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.
பெருகி வரும் மக்கள் தொகையால் அதிகரித்துள்ள உணவு, குடிநீர் தேவை பற்றாக்குறையை சரி செய்ய, புதிய பாசன உட்கட்டமைப்புகள் உருவாக்கப்பட்டு வருகின்றன.
இந்தாண்டில், திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை- கண்டலேறு பூண்டி கால்வாயின் சரிந்த மற்றும் பாதிப்படைந்த பகுதிகள் ரூ.27 கோடியே 30 லட்சத்தில் சீரமைக்கப்படும். செம்பரம்பாக்கம் ஏரியில் உள்ள 19 கதவுகளில் ரோலர் அமைப்பு, பக்கவாட்டு, அடிப்பக்க சீல் அமைப்புகளை பழுதுபார்த்து சீரமைப்பதுடன், 24 நீர்ப் போக்கி கதவுகள் ரூ.2 கோடியே 25 லட்சம் மதிப்பில் சீரமைக்கப்படும்.
சென்னை சேப்பாக்கத்தில் உள்ள பாரம்பரியம் மிக்க புராதன கட்டிடம் ரூ.20 கோடியில் புதுப்பிக்கப்படும். மேலும், தீயால் பாதிக்கப்பட்ட பாரம்பரியம் மிக்க புராதன கட்டிடமான ஹூமாயூன் மகால் ரூ.36 கோடியே 38 லட்சத்தில் புனரமைக்கப்படும். இவ்வாறு முதல்வர் கே.பழனிசாமி தெரிவித்தார்.