கிம் ஜாங் அன் – உடனான சந்திப்பு சிறப்பாக அமைந்தது: டொனால்டு டிரம்ப்

வடகொரிய அதிபர் கிம் ஜாங் அன் – உடனான சந்திப்பு சிறப்பாக அமைந்தது என்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்து உள்ளார். #KimJongUn #DonaldTrump #SingaporeSummit
சிங்கப்பூர்,
உலக நாடுகளின் எதிர்ப்புகளை பொருட்படுத்தாமல், அணு ஆயுத சோதனை நடத்தி தனி ஆவர்த்தனம் நடத்திய வடகொரியா,  திடீரென தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டது. தென்கொரியாவில் நடைபெற்ற குளிர்கால ஒலிம்பிக்கில் கலந்து கொண்ட வடகொரியா, அதன்பிறகு, கடுமையான வார்த்தைப்போரில் ஈடுபட்ட அமெரிக்காவுடன் சமாதான பேச்சுவார்த்தைக்கு ஆர்வம் காட்டியது.
இதையடுத்து, சில முயற்சிகளுக்கு பிறகு அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்- வடகொரிய அதிபர் கிம் ஜாங் அன் சந்திப்பு நடைபெறுவது உறுதியானது. இந்த சந்திப்பு சிங்கப்பூரில் நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வந்தன. இந்த நிலையில், திடீர் திருப்பமாக சந்திப்பை ரத்து செய்வதாக டொனால்டு டிரம்ப் தெரிவித்தார். ஆனாலும், வடகொரியா கேட்டுக்கொண்டதையடுத்து, மீண்டும் சந்திப்புக்கு இரு தலைவர்களும் ஆயத்தமாகினர்.
இதையடுத்து, திட்டமிட்ட படி  இன்று (ஜூன் 12) சிங்கப்பூர் சென்டோசா தீவில் உள்ள நட்சத்திர ஓட்டலில், வடகொரியா அதிபர் கிம் ஜாங் அன் – அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் இடையேயான சந்திப்பு நடைபெற்றது.  உலக நாடுகள் உற்று நோக்கிய இந்த சந்திப்பு சுமார் 41 நிமிடங்கள் நீடித்தது. இரு நாட்டு தலைவர்களும் நேரடியாக சந்தித்துக்கொள்வது வரலாற்றில் இதுதான் முதல் தடவையாகும். இந்த சந்திப்பின் போது, அணு ஆயுத கைவிடல், பொருளாதார பிரச்சினை ஆகியவை குறித்து இரு தலைவர்களும் ஆலோசனை நடத்தினர்.  சந்திப்புக்கு பிறகு, பால்கனியில் வந்து இரு தலைவர்களும் செய்தியாளர்களை பார்த்து கையசத்தனர்.
இந்த நிலையில், கிம் ஜாங் அன் – உடனான சந்திப்பு சிறப்பாக அமைந்ததாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.  டிரம்ப் கூறும் போது, “ கிம் ஜாங் அன்னுடனான நேரடி பேச்சுவார்த்தை சிறப்பாக அமைந்தது.  நானும், கிம் ஜாங் அன்னும் இணைந்து மிகப்பெரும் பிரச்சினை, குழப்பங்களுக்கு தீர்வு காண்போம். அணு விவகாரத்தை பொறுத்தவரை இணைந்து பணியாற்றி, அதை கவனத்தில் எடுத்துக்கொண்டு செயல்படுவோம்” இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Leave a comment

Your email address will not be published.