“கிளப்லெவல்” பீல்டிங், பந்துவீச்சு, சாது பேட்டிங்: ‘சர்வதேச’(!) டி20யில் அயர்லாந்தை நசுக்கியது இந்தியா: பேட்டிங் பயிற்சி எடுத்த ரோஹித், தவண்

ரோகித் சர்மா, தவணின் காட்டிபேட்டிங், ரிஸ்ட் ஸ்பின்னர்களின் மாயஜாலப் பந்துவீச்சு ஆகியவற்றால், டப்லின் நகரில் நேற்று நடந்த அயர்லாந்து அணிக்கு எதிரான முதலாவது டி20 போட்டியில் 76 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது இந்திய அணி.

அயர்லாந்து வீரர்களுடன் கைகுலுக்கும் இந்திய அணி.

ஒரு வேதனை:

ஐபிஎல் தொடரில் ஃபார்மில் இல்லாத மணிஷ் பாண்டேவுக்கு இந்த போட்டியில் வாய்ப்பு அளித்து, அருமையான ஃபார்மில் இருக்கும் தினேஷ் கார்த்திக்கை அமரவைத்து வேதனைக்குரியதாகும். இதை முதலில் பதிவு செய்வது அவசியமாகும். இன்னமும் கூட ஷார்ட் பிட்ச் பந்துகளை ஆட முடியாத ரெய்னாவுக்கு அணியில் இடம். தோனி, கோலி, ரோஹித் சர்மா ஆகியோர் ஒரு ‘கார்ட்டெல்’ ஆக செயல்படுகின்றனர். அடுத்த தொடரில் தினேஷ் கார்த்திக் மேல் யோ-யோ பாய்ந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. ஒரு போட்டியில் உட்கார வைத்து விட்டு அடுத்த போட்டியில் தேர்வு செய்யப்படும் வீரர் நிலையையெல்லாம் தினேஷ் கார்த்திக் கடந்து விட்டார், அவருக்கு தொடர்ச்சியாக அணியில் இடமளிப்பதுதான் கேப்டன் விராட் கோலி மீதான நம் நம்பிக்கையை அதிகரிக்கும், இல்லையெனில் இது உள்குத்து அணி என்றே கூற வேண்டியிருக்கும்

கிளப் மட்ட பந்து வீச்சு, பீல்டிங், இதுதான் சர்வதேச டி20யா?

டி20 தரவரிசையில் 3-வது இடத்தில் இருக்கும் இந்திய அணிக்கு ஆச்சர்யத்தை கொடுத்த வெற்றி என்று சொல்லிவிடமுடியாது. உலக அணிகளுக்கு அச்சுறுத்தல் விடுக்கும், டாப்கிளாஸ் பேட்ஸ்மேன்கள், பந்துவீச்சாளர்கள், பீல்டிங் இருக்கும் இந்திய அணியோடு அயர்லாந்து விளையாடுவது என்பது “புள்ளபூச்சியை” அடிப்பதுபோலத்தான். அப்படித்தான் நேற்றைய ஆட்டமும் அமைந்திருந்தது.

இந்திய வீரர்களுக்கு சிறிது கூட சிரமம் கொடுக்கும் வகையில் அயர்லாந்து அணியின் பந்துவீச்சு அமையவில்லை ரான்கின் வீசிய முதல் ஓவரைத் தவிர்த்து அயர்லாந்து வீரர்களின் பந்துவீச்சு தவணுக்கும், ரோகித் சர்மாவுக்கும் நெருக்கடியை அளிக்காமல், பேட்டிங் பயிற்சியாகவே அமைந்தது.

அயர்லாந்து வீரர்களின் பந்துவீச்சு இன்னும் சர்வதேச தரத்துக்கு உயரவில்லை, “கிளப்லெவல்” போன்றும், வலைப்பயிற்சியில் ஈடுபடும் வீரர்களுக்கு வீசப்படும் பந்துவீச்சுபோன்றுதான் இருக்கிறது. பேட்ஸ்மேன்களுக்கு நெருக்கடி கொடுக்கும் வகையில் யார்கர்கள், ஸ்விங்குகள் என எதையும் அயர்லாந்து வீரர்கள் வீசவில்லை. ஒட்டுமொத்தமாக நேற்றைய போட்டியில் 5 யார்கர்கள் என்ற பெயரில் வீசினாலும் அதை துல்லியமான யார்கர்களாக எடுத்துக்கொள்ள முடியாது.

டி20 போட்டிகளில் வேகப்பந்துவீச்சாளர்கள் “யார்கர்கள்”, “லெக்கட்டர்கள்”, “இன்ஸ்விங்”, “ஸ்லோபால் பவுன்சர்”, “பவுன்சர்”, “விரலிடுக்கின் மூலம் வீசும் பந்து” எனச் சொல்லப்படும் பந்துகளும் பேட்ஸ்மேன்கள் கணிக்கமுடியாமல் வேகமாக செல்லும் பந்துகளையும் வீசுவது அவசியமாகும். ஆனால், அயர்லாந்து அணி வீரர்களின் பந்துவீச்சில் இந்த பன்முகத்தை பூதக்கண்ணாடி போட்டுத் தேடினாலும் கிடைக்காது.

வேகப்பந்துவீச்சு, சுழற்பந்துவீச்சில் பன்முகம் இருந்தால்தான் எதிரணியினருக்கு நெருக்கடி அளிக்கமுடியும். ஆனால், அயர்லாந்து அணியில் 4 வேகப்பந்துவீச்சாளர்களும் ஒரேமாதிரியாகவே பந்துவீசியதை என்னவென்று சொல்வது.

சுழற்பந்துவீச்சாளர்கள் என்ற பெயரில் 3 பேர் பந்துவீசியும் பந்துகள் சுழலும் இல்லை, பேட்ஸ்மேன்களுக்கு குழப்பத்தை விளைவிக்கும் அளவுக்கு நெருக்கடியும் அளிக்கவில்லை. 7 பந்துவீச்சாளர்கள் பந்துவீசியும் முதல் விக்கெட்டை பிரிப்பதற்கு 16ஓவர்கள் தேவைப்பட்டது.

பீல்டிங்கிலும் அயர்லாந்து அணியினருக்கு போதிய பயிற்சி இல்லை. ஷிகர் தவணுக்கும், ரோகித் சர்மாவுக்கு மட்டும் நேற்று 5 கேட்சுகளை தவறவிட்டனர். இதில் 3 கேட்சுகள் கொஞ்சம் சிரத்தை எடுத்திருந்தால் பிடித்திருக்கக் கூடியது. அயர்லாந்து அணிக்கு கைமாறு செய்யும் வகையில் ரோகித் சர்மா ஒரு கேட்ச் நழுவவிட்டார், பாண்டியாவும் ஒரு வாய்ப்பை தவறவிட்டார்.

தவண், ரோஹித் நெட் பிராக்டீஸ்

இந்திய வீரர்கள் தவணும், ரோகித் சர்மாவுக்கும் தங்களின் சுய சாதனையை உயர்த்திக் கொள்வதற்கு நேற்று நல்ல வாய்ப்பு கிடைத்தது. அதை அவர்கள் பயன்படுத்திக்கொண்டாலும், ரோகித் சர்மாவின் மெத்தனமான மனப்பான்மை அவரை சதம் அடிக்கவிடாமல் செய்துவிட்டது. மற்றவகையில், தவண், ரோகித் சர்மாவின் பேட்டிங் திறமைக்கு இந்த போட்டி தூசுபோன்றதுதான்.

“லெக்திசையில் இடுப்புக்கு மேல்” வரும் பந்தை இன்னும் சுரேஷ்ரெய்னா ஆடத்தெரியாமமல் விக்கெட்டை பறிகொடுத்து வருகிறார். அவரின் “வீக்பாயின்ட்” பகுதியை இன்னும் அவர் சரிசெய்யவில்லை என்றே தெரிகிறது. இந்த போட்டியில் மிகவும் எதிர்பார்க்கப்பட்டது நட்சத்திர வீரர்களான விராட் கோலி, தோனி ஆகியோருக்கு பதிலாக தினேஷ் கார்த்திக் மற்றும் இளம் வீரர்களுக்கு வாய்ப்பு அளித்திருக்கலாம்.

ஆனால், ஐபிஎல் தொடரில் மோசமாக விளையாடிய மணிஷ்பாண்டேவுக்கு நேற்று வாய்ப்பு அளிக்கப்பட்டது. ஆனால், தினேஷ் கார்த்திக்குக்கு வாய்ப்பு இல்லை. தோனிக்கு பதிலாகக்கூட தினேஷ் கார்த்திக்கை பயன்படுத்தி இருக்கலாம்.

ரோகித் சர்மா, தவண் ஆட்டமிழந்தபின் களமிறங்கிய டாப்கிளாஸ் வீரர்களான ரெய்னா, தோனி, விராட் கோலி ஆகியோரின் பேட்டிங் அதிர்ச்சி அளிக்கும் வகையில் அமைந்தது. அடித்துவிளையாடுவது, கத்துக்குட்டிதானே என்ற நோக்கில் அணுகினார்கள். அதனால்தான் கடைசி ஓவரில் 3 விக்கெட்டுகளை தேவையில்லாமல் இழக்க நேர்ந்தது.

அயர்லாந்து அணியைப் பொறுத்தவரை சுழற்பந்துவீச்சைக் கண்டு தொடை நடுங்கினார்கள். அதிலும் வழக்கமான சுழற்பந்துவீச்சைக்காட்டிலும், சாஹல், குல்தீப் யாதவின் “ரிஸ்ட் ஸ்பின்னை” எதிர்கொள்ளும் விதம் தெரியாமல் பாவம் தடுமாறுகிறார்கள்.

கடந்த மார்ச்மாதம் உலகக்கோப்பை தகுதிச்சுற்றுப்போட்டியில், ஆப்கானிஸ்தான் வீரர் ரஷித்கானின் பந்துவீச்சை கணிக்கமுடியாமல் அயர்லாந்து வீரர்கள் பரிதாபமாக வீழ்ந்தது மிகச்சிறந்த உதாரணம். அதேபோலவே இந்தப் போட்டியிலும் குல்தீப், சாஹல் பந்துவீச்சை கணிக்கமுடியாமல் பேட்ஸ்மேன்கள் திணறினார்கள்.

சாஹல் 38 ரன்கள் அதிகம்தான்!

சாஹல் பலவித்தில் பந்துவீசுவார் என்று பெரிதாக ஊதப்பட்ட நிலையில், நேற்றைய போட்டியில் 4 ஓவர்களில் 38 ரன்கள் விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டை பெற்றார். அதில் 4 சிக்ஸர்கள் அடிக்கப்பட்டது. ஆனால், குல்தீப் 4 ஓவர்கள் வீசி ஒரு மெய்டன், 11 டாட்பந்துகள், 21 ரன்கள் விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

அதிலும் இந்தியா போன்ற வலிமையான அணியுடன் விளையாடும்போது, டாஸ்வென்றால், முதலில் பேட்டிங் செய்து ஓரளவுக்கு அடித்து ஆடியிருந்தால், பந்துவீச்சில் நெருக்கடி கொடுத்திருக்கலாம். ஆனால், டாஸ்வென்ற அயர்லாந்து கேப்டன், தோல்வியை வெற்றிலைப் பாக்கு வைத்து அழைப்பது போன்று இந்திய அணியை பேட் செய்ய அழைத்ததை என்னவென்று சொல்வது. கேப்டன்ஷிப்பிலும் அயர்லாந்து கேப்டன் வில்சன் தோற்றுவிட்டார்.

இந்தியாவின் வேகப்பந்துவீச்சை ஓரளவுக்கு கணித்து ஆடிய அயர்லாந்து பேட்ஸ்மேன்கள் சுழற்பந்துவீச்சில் சரணடைந்தனர். இன்னும் அந்த அயர்லாந்து அணி கிளப்லெவன் தரத்துக்கு மட்டுமே விளையாடிவருகிறது என்பது தெளிவாகிறது.

கடந்த 9 டி20 போட்டிகளில் இதுவரை ஒரு போட்டியில் மட்டுமே அயர்லாந்து அணி வென்றுள்ளது. இதுவரை ஒரு டி20 தொடரிலும் அந்த விளையாடமல், முதல்முறையாக இந்த மாதம் இறுதியில் நெதர்லாந்துடன் முத்தரப்பு டி20 தொடரில் அயர்லாந்து விளையாடப்போகிறது.

பீல்டிங் தேர்வு செய்து தோல்வியை வெற்றிலைப் பாக்கு வைத்து அழைத்த அயர்லாந்து

டாஸ்வென்ற அயர்லாந்து அணி பீல்டிங்கைத் தேர்வு செய்தது. முதலில் பேட் செய்த இந்திய அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பக்கு 208 ரன்கள் குவித்தது. 209 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் கடினமான இலக்குடன் களமிறங்கிய அயர்லாந்து அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 132 ரன்கள் மட்டுமே சேர்த்து தோல்வி அடைந்தது.

இந்திய அணிக்கு தவண், ரோகித் சர்மா நல்ல தொடக்கத்தையும், வலுவான அடித்தளத்தையும் அமைத்துக்கொடுத்தனர். முதல் விக்கெட்டுக்கு 160 ரன்கள் சேர்த்தனர். டி20 போட்டியில் முதல் விக்கட்டுக்கு இந்தியாவின் 2-வது அதிகபட்ச ஸ்கோர் இதுவாகும்.

முதல் ஓவரைத் தவிர்த்து அனைத்து ஓவர்களையும், தவணும், ரோகித் சர்மாவும் நொறுக்கிஎடுத்துவிட்டனர். ஒவ்வொரு ஓவரிலும் யாராவது ஒருவர் பவுண்டரி, அல்லது சிக்ஸர் அடிக்க தவறாமல் அடித்துவந்தனர். இதனால், 5 ஓவர்களில் 50 ரன்களையும், 10 ஓவர்களில் 100 ரன்களையும் இந்திய அணி எட்டியது. 16 ஓவர்கள் வரையிலும் 10ம் வாய்ப்பாடு படித்தனர்.

ஆக்ரோஷம் காட்டி அடித்த தவண் 27 பந்துகளில் தனது அரைசதத்தை பதிவு செய்தார். டி20 போட்டியில் அவர் அடிக்கும் 7-வது அரைசதமாகும். ரோகித் சர்மா 39 பந்துகளில் அரைசதம் அடித்தார். சராசரியாக ஓவருக்கு 10 ரன்ரேட்டில் இந்திய அணி சென்றதால், 15 ஓவரில் 150 ரன்களை எட்டியது.

சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட தவண் 74 ரன்களில்(45பந்துகள்)ஓபிரையன் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இவரின் கணக்கில் 5 சிக்ஸர்கள், 5 பவுண்டரிகள் அடங்கும்.

கோலி, தோனி ஏமாற்றம்

அடுத்து வந்த ரெய்னா 10 ரன்கள் சேர்த்த நிலையில் சேஸ் பந்துவீச்சில் விக்கெட்டை பறிகொடுத்தார். கடைசி ஓவரில்இந்திய வீரர்களுக்கு என்ன நேர்ந்தது எனத் தெரியவில்லை. மிகவும் எதிர்பார்க்கப்பட்ட தோனி “வெடி” ஒருசிக்ஸர், பவுண்டரி மட்டுமே அடித்தார். அதன்பின் “புஸ்வானமாக” “டீப் மிட்விக்கெட்டில்” தூக்கி அடித்து 11 ரன்களில் ஆட்டமிழந்தார்.

தோனி ஏமாற்றம்.

 

சதத்தை நெருங்கிய ரோகித் சர்மா 97 ரன்களில்(61பந்து) சேஸ் பந்துவீச்சில் க்ளீன் போல்டாகினார். இதில் 8 பவுண்டரி, 5 சிக்ஸர்கள் அடக்கம். அடுத்து வந்த விராட்கோலியும் டீப் மிட்விக்கெட்டில் தூக்கிஅடித்து ஆட்டமிழந்தார். ஹர்திக் பாண்டியா கடைசி பந்தில் ஒரு ஹெலிகாப்டர் ஷாட் மூலம் சிக்ஸர் அடிக்க ஆட்டம் முடிவுக்கு வந்தது.

இந்திய அணி 20 ஓவர்களில் 5 விக்கட் இழப்புக்கு 208 ரன்கள் சேர்த்தது. அயர்லாந்து அணித் தரப்பில் சேஸ் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

209 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும்இலக்குடன் களமிறங்கிய அயர்லாந்து அணிக்கு தொடக்கத்தில் இருந்தே அதிர்ச்சிமேல் அதிர்ச்சியாக அமைந்தது. பும்ரா வேகத்தில் ஸ்டிர்லிங் ஒரு ரன்னில் ஆட்டமிழந்தார்.

இந்திய வீரர்களும் அயர்லாந்து பீல்டிங்குக்கு குறைந்தவர்கள் இல்லை என்ற கணக்கில் நேற்று பீல்டிங்கிலும், கேட்ச்பிடிப்பதிலும் கோட்டை விட்டனர். முதல் ஓவரிலேயே ஹர்திக் பாண்டயா கேட்ச்வாய்ப்பை நழுவவிட்டார். 4-வது ஓவரில் ரோகித் சர்மா கேட்ச் வாய்ப்பை நழுவவிட்டார்.

மற்றவகையில் குல்தீவ் யாதவ், சாஹல் பந்துவீச அழைக்கப்பட்டதில் இருந்து அயர்லாந்து வீரர்கள் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்துவந்தனர். இதில் வேகபந்துவீச்சாளர்கள் பும்ரா, புவனேஷ்குமார் , குல்தீப் யாதவ் ஆகியோர் கட்டுக்கோப்பாக பந்துவீசினார்கள். ஆனால், ஹர்திக்பாண்டியா, சாஹல் ஆகியோர் 35 ரன்களுக்கு மேல் கொடுத்தனர்.

7-வது ஓவரில் இருந்து அயர்லாந்து வீரர்கள் 2 ஓவர்களுக்கு ஒருவிக்கெட் என்கிற வீதத்தில் விக்கெட்டை இழந்துவந்தனர். சாஹல் வீசய 13-வது ஓவரில் ஓபிரையன்(10), வில்சன்(5) அடுத்தடுத்து விக்கெட்டை இழந்தனர். அதேபோல குல்தீப் யாதவ் வீசிய 16-வது ஓவரில் தாம்ஸன்(12), பாயின்டர்(7) ஆகியோர் விக்கெட்டுகள் வீழ்ந்தன.

20 ஓவர்கள் முடிவில் அயர்லாந்து அணி 9 விக்கெட் இழப்புக்கு 129 ரன்கள் மட்டுமே சேர்த்து தோல்வி அடைந்தது. ரான்கின் 3 ரன்களுடனும், சேஸ் ஒருரன்னுடன் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். இந்தியத் தரப்பில் குல்தீப் 4 விக்கெட்டுகளையும், சாஹல் 3 விக்கெட்டுகளையும், பும்ரா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார்கள்.

Leave a comment

Your email address will not be published.