ஜம்மு-காஷ்மீர்: ஜம்மு-காஷ்மீரில் ஆளுநர் வோராவின் ஆட்சியை அமல்படுத்த குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்தார். இதனையடுத்து அங்கு உடனடியாக ஆளுநர் ஆட்சி அமலுக்கு வந்தது. ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதம் மற்றும் வன்முறையை கட்டுப்படுத்த தவறியதால் முதல்வர் மெஹபூபா முப்தி அரசுக்கு அளித்து வந்த ஆதரவை பா.ஜ., நேற்று வாபஸ் பெற்றது. இதனையடுத்து முதல்வர் பதவியை மெஹபூபா முப்தி ராஜினாமா செய்தார். இதனையடுத்து ஜம்மு-காஷ்மீரில் ஆளுநர் ஆட்சி அமலுக்கு வந்தது.
காஷ்மீர் முன்னாள் முதல் முதல்வர் முப்தி முகம்மது சயீத் மறைவுக்கு பின்னர் அவரது மகள், மெகபூபா முப்தி தலைமையில் பிடிபி-பாஜக கூட்டணி ஆட்சி நடந்து வந்தது. ஆனால், சமீபகாலமாக ஆளும் கூட்டணி கட்சிகளுக்குள் கருத்து மோதல் இருந்து வந்த நிலையில், நேற்று பகிரங்கமாக வெடித்தது. காஷ்மீர் மாநில சட்டசபையில் இடம்பெற்றுள்ள பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் அனைவரையும் டெல்லி வரும்படி பா.ஜ.க. தலைவர் அமித் ஷா அழைப்பு விடுத்திருந்தார்.
அதன்படி நேற்று எம்.எல்.ஏ.க்களுடன் ஆலோசனை நடத்தப்பட்டது. அதன் பின்னர் மெகபூபா முப்தி தலைமையிலான கூட்டணி அரசில் இருந்து விலகுவதாக பா.ஜ.க. அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இந்த அறிவிப்புக்கு பின்னர் தனது முதல் முதல்வர் பதவியை மெகபூபா முப்தி உடனடியாக ராஜினாமா செய்தார். தொடர்ந்து ஆளுநர் ஆட்சியை அமல்படுத்த குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்திற்கு பரிந்துரை அனுப்பப்பட்டது.
இந்நிலையில் ஜம்மு-காஷ்மீரில் ஆளுநர் வோராவின் ஆட்சிக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்துள்ளார். குடியரசுத் தலைவரின் ஒப்புதலை தொடர்ந்து இன்று முதல் ஜம்மு-காஷ்மீரில் ஆளுநர் ஆட்சி அமலுக்கு வந்துள்ளது. ஜம்மு-காஷ்மீரில் 8வது முறையாக ஆளுநர் ஆட்சி அமலாவது குறிப்பிடத்தக்கது.