குற்றத்தின் நிழலில் குழந்தைகள்

மொத்தத் தமிழகத்தையும் அதிர்ச்சியில் உறைய வைத்திருக்கிறது அந்தச் சம்பவம். சென்னையின் அடுக்குமாடிக் குடியிருப்பில் 12 வயதுக் குழந்தையை செக்யூரிட்டி முதல் பிளம்பர் வரை பலரும் மாதக்கணக்கில் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கிய கொடூரம்…  இதயம் நடுங்கச்செய்கிறது. 300-க்கும் மேற்பட்ட வீடுகளிருந்தும், ஒரு குழந்தைக்கு நிகழ்ந்த தொடர் கொடூரத்தைக் கவனிக்க யாருக்கும் நேரமிருக்கவில்லை.  நகர்ப்புற வாழ்க்கையில் மனிதர்களிடையே ஒட்டுறவின்மையும், பாதுகாப்பின்மையும் அதிகரித்துக்கொண்டே போகிறது. வாழ்வாதாரம் தேடி இடைவிடாது ஓடிக்கொண்டே யிருப்பதுதான் வாழ்க்கையென்றாகிவிட்டது. குழந்தைகள் அநியாயமாகக் கைவிடப்படுகிறார்கள். 

எவரும் துன்புறுத்தலாம் என்கிற நிலையில் வாழும் உயிரினங்களில் ஒன்றாக மாறியிருக்கின்றன குழந்தைகள். குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் இந்தியா வெகுவேகமாக முன்னேறிக்கொண்டிருக்கிறது. 2014-க்கும் 2016-க்கும் இடைப்பட்ட காலங்களில் நிகழ்ந்துள்ள குற்றப்பதிவுகளே அதற்கு ஆதாரம். குற்ற ஆவணக்காப்பக அறிக்கையின்படி 2014-ல் பதிவுசெய்யப்பட்ட மொத்த வழக்குகள் 89,423.  2016-ல், ஒரு லட்சத்தைத் தாண்டுகின்றன. தமிழகத்திலோ 2016-ல் 363 குழந்தைகள் பாலியல் கொடுமைகளுக்கு இரையாகியிருக்கிறார்கள். 1,043 குழந்தைகள்  கடத்தப்பட்டிருக்கிறார்கள்.

குழந்தைகள் தனிச்சொத்தல்ல; சமூகத்தின் சொத்து என்கிறது யுனிசெஃப் அமைப்பு. குழந்தைகளுக்குப் பாதுகாப்பளித்து, சத்துணவளித்து, கல்வியளித்து, சிறந்த குடிமக்களாக அவர்களை  உருவாக்க வேண்டியது சமூகத்தின் பொறுப்பு. ஆனால், சமூகவெளி குழந்தைகளுக்குப் பாதுகாப்பானதாக இல்லை. ஆண் பெண் வேறுபாடின்றி, பத்தில் ஆறு குழந்தைகள் ஏதோவொரு விதத்தில் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்படுவதாக யுனிசெஃப் அறிக்கைகள் சொல்கின்றன. பெரும்பாலும் குடும்ப உறவுகளிலிருந்தே இது தொடங்கிவிடுகிறது.

“சமீபமாக, குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் நிறைய பதிவாகின்றன. ஆண்டுக்காண்டு அந்த எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே போகிறது. ஆனால், தண்டிக்கப்பட்ட குற்றவாளிகளின் எண்ணிக்கை  குறைந்துகொண்டே வருகிறது. குழந்தைகள் மீதான பாலியல் வன்முறை வழக்குகளில் 3 முதல் 6 மாத காலத்திற்குள் தீர்ப்பு வழங்கப்படவேண்டும் என்று விதி இருக்கிறது. ஆனால் அது  பெரும்பாலும் பின்பற்றப்படு வதேயில்லை. இதுமாதிரியான வழக்குகளை மகளிர் பிரச்னைகளை விசாரிக்கும் மகிளா நீதிமன்றங்கள்தாம் விசாரிக்கின்றன. அந்த நீதிமன்றங்களில் ஏற்கெனவே நிறைய வழக்குகள் தேங்கிக் கிடக்கின்றன. எப்படி விரைவான தீர்ப்பு சாத்தியமாகும்..? குழந்தைகளுக்கெதிரான வன்முறைகளை மட்டுமே விசாரிக்கக்கூடிய  தனி நீதிமன்றங்கள் உருவாக்கப்பட்டால்தான் வழக்குகளுக்கு விரைவில் தீர்வுகாண முடியும்…” என்கிறார் குழந்தைகள் உரிமைக்கான தோழமை அமைப்பின் நிறுவனர் தேவநேயன்.

குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகளைக் கண்காணிக்கவும், அதுகுறித்துப்  புகார்களை அளிக்கவும் ஊராட்சித் தலைவர், அப்பகுதியில் பணியாற்றும் ஆசிரியர்கள் உள்ளடங்கிய குழுவை கிராமந்தோறும் அமைக்க வேண்டும்  என்று 2000-மாவது ஆண்டில் ஒரு தீர்ப்பில் உச்சநீதிமன்றம் குறிப்பிட்டது. 18 வருடங்கள் கடந்தும் அதை எந்த மாநிலமும் நடைமுறைப்ப டுத்தவில்லை.

தமிழகத்தில் மாநிலக் குழந்தை உரிமைப் பாதுகாப்பு ஆணையம் இருக்கிறது. அந்த ஆணையத்துக்குப் போதிய வசதிகள் செய்யப்படவில்லை. அந்த  ஆணையத்தின்கீழ்,  குழந்தைகள்மீதான குற்றங்களைக்  கண்காணிக்கும் அமைப்புகள் உருவாக்கப்பட வேண்டும். வழக்கறிஞர்கள், ஆய்வாளர்கள், மனநல மருத்துவர்களைக் கொண்ட ஒருங்கிணைந்த குழுவினர் அந்த அமைப்புகளில் இடம்பெற்றிருக்க வேண்டும். ஆனால் எதுவும் நடக்கவில்லை.

“குழந்தைகள் மற்றும் பெண்களுக்கென  மத்தியிலும் சில மாநிலங்களிலும் தனி அமைச்சகங்கள் உள்ளன. தமிழகத்தில் எந்த அரசும் அதற்கான முயற்சியில் இறங்கவில்லை.  குழந்தைகளுக்கெனத் தனி அமைச்சகம் இருந்தால்தான் அந்தத் துறைக்கென நிதி ஒதுக்கீடுகள் இருக்கும். அருகிலிருக்கும் கேரளாவில் குழந்தைகள் உரிமைப் பாதுகாப்பு ஆணையத்துக்கு ஆண்டுக்கு ஐந்தரைக்  கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. ஆனால், தமிழகத்தில் 55 லட்சம்தான் ஒதுக்குகிறார்கள்.  இங்கு, மாநிலக் குழந்தைகள் ஆணையம் பெயரளவில்தான் செயல்படுகிறது. மூன்றரை ஆண்டுகளுக்கு ஒரு முறை ஆணையத்தில் நிர்வாகிகளை மாற்ற வேண்டும்.  ஆறரை ஆண்டுகளாக எந்த மாற்றமும் நடக்கவில்லை. இங்கு குழந்தைகளின் பாதுகாப்பை உறுதிசெய்ய, பெற்றோருக்கு நேரமில்லை;  அரசுக்கு அக்கறை இல்லை. கொடூரங்கள் அரங்கேறிய பிறகு ஆணையமும், நல அமைப்புகளும் நிகழ்விடங்களுக்கு வந்து துக்கம் விசாரிப்பதோடு  கடமையை முடித்துக்கொள்கின்றன. இந்த நிலை மாறாவிட்டால், இதுமாதிரியான குற்றங்களைத் தடுக்கவே முடியாது…” என்கிறார் தேவநேயன்.

தமிழகத்தில், நகரங்களைவிட கிராமப்புறங்களில் குழந்தைகள்மீதான பாலியல் வன்முறைகள் அதிகம் நடப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. நகரத்தில் நடக்கும் சம்பவங்கள் ஊடகங்களின் உதவியோடு வெளிச்சத்துக்கு வந்துவிடுகின்றன. கிராமங்களில் நடக்கும் பல கொடூரங்கள் வெளியில் தெரியாமலே போய்விடுகின்றன. குழந்தைகளின் வளர்ப்பு முறை, கட்டுப்பாடுகள் காரணமாக, குழந்தைகள் தங்களுக்கு நேர்ந்ததை வெளியில் சொல்லவே வாய்ப்பு கிடைப்பதில்லை. எளிய குடும்பத்துப் பிள்ளைகள்மீது நிகழ்த்தப்படும் வன்முறைகள் வெளியில் வந்தாலும் வழக்குகளாகப் பதிவாவதில்லை. பஞ்சாயத்துகளோடு முடிந்துவிடுகின்றன.

“இப்போது, யார் நினைத்தாலும் ஒரு குழந்தையைத் தன் இச்சைக்குப் பலியாக்க முடியும் என்ற நிலை வந்துவிட்டது. பிள்ளைகளைப் பாதுகாத்து வளர்த்தெடுப்பது பெற்றோருக்கு மிகக்கடும் பொறுப்பாக மாறியிருக்கிறது. குழந்தைகளிடமும் பெண்களிடமும்  எளிதாக வன்முறை நிகழ்த்திவிட முடியும் என்ற எண்ணம்தான் அந்தத் துணிச்சலைத் தருகிறது. இங்கு யாரிடமிருந்து குழந்தையைப் பாதுகாப்பதென்பதே தெரியவில்லை. முகம் தெரியாத அந்நிய மனிதர்களைவிட, மாமாவால், சித்தப்பாவால், பக்கத்து வீட்டுக்காரரால், ஆசிரியரால்… ஏன்,  தந்தையால்கூடக் குழந்தைகள் அத்துமீறலுக்கு உள்ளாக்கப்படுகிறார்கள்.

‘குட் டச்’, ‘பேட் டச்’ பற்றியெல்லாம் இன்னும் எத்தனை காலத்துக்குப் பெண் குழந்தைகளிடம் மட்டும் பேசிக்கொண்டிருக்கப்போகிறோம்? தவறு செய்யும் மனிதர்களைத் திருத்த நம்மிடம் என்ன ‘மெக்கானிசம்’ இருக்கிறது..?  சட்டங்களெல்லாம் கடுமையாகவே இருக்கின்றன. குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகளுக்கென்றே ‘போக்ஸோ’ (Protection of Children from Sexual Offences Act (POCSO) ) சட்டம் இருக்கிறது. அந்தச் சட்டப்படி, குழந்தைகளைத் துன்புறுத்துவோருக்கு அதிகபட்சமாக ஆயுள் தண்டனை விதிக்க முடியும். ஆனால், இந்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் பல முட்டுக்கட்டைகள் இருக்கின்றன…” என்கிறார் குழந்தை உரிமை செயற்பாட்டாளரும் வழக்கறிஞருமான  செல்வகோமதி.

பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்படும் குழந்தை, உடல்ரீதியான தாக்குதலைத் தாண்டி, பெரும் மனச்சிக்கலுக்கும் உள்ளாகிறது. “அதன் எதிர்காலமே அதனால் பாதிக்கப்படும்” என்கிறார்கள் மருத்துவர்கள். காலம் முழுவதும் அதன் தாக்கத்தை அவர்கள் சுமந்துகொண்டே இருக்க நேரிடுகிறது.  “பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாகும் குழந்தைகள் இரண்டு விதமான விளைவுகளுக்கு உள்ளாவார்கள்.  ‘தாம்பத்யம் என்பதே ஒரு தவறான, கொடுமையான விஷயம்’ என்று அதை வெறுக்க ஆரம்பித்து விடுவார்கள். இன்னொரு விளைவு,  கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு அதில் தீவிரமான ஈடுபாடு உண்டாகிவிடும். எப்போதும் அது சார்ந்தே யோசித்துக் கொண்டிருப்பார்கள். இரண்டுமே ஆபத்துதான். பாதிப்புக்குப் பின்னால் அவர்களின் நடவடிக்கைகள் முற்றிலுமாக மாறிவிடும். எப்போதும் பதற்றத்துடனும்  பயத்துடனும் இருப்பார்கள்.  யாருடனும் சரியாகப் பேச மாட்டார்கள்.  முற்றிலும் ஆண்களை வெறுக்க ஆரம்பித்து விடுவார்கள். எதிர்காலத்தில் அவர்களின் திருமண வாழ்க்கையும் பாதிக்கும். தூக்கமின்மை, பயம், பதற்றம் போன்ற பாதிப்புகளுக்கு உள்ளாவார்கள். சில குழந்தைகளுக்கு, நடந்த தவறுகளுக்குத் தன் உடல்தான் காரணம் என்ற எண்ணம் உருவாகும். அதனால், ‘தற்கொலை செய்து கொள்ளலாமா’ என்றுகூட யோசிப்பார்கள். மற்றவர்களின் பார்வை தன்மீது விழுவதையே அருவருப்பாக நினைப்பார்கள். மற்றவர்கள் நம்மைக் கெட்டவளாக நினைப்பார்களோ என்ற பயமும் உருவாகும்.  பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு சரியான நேரத்தில் கவுன்சலிங்கும் பெற்றோர்களின் உறுதுணையும் தேவை” என்கிறார் மனநல ஆலோசகர் சித்ரா.

குழந்தைகள் விஷயத்தில் முழுப்பொறுப்பும் பெற்றோருக்குத்தான் இருக்கிறது. உடல் ரீதியாக, மன ரீதியாக, செயல்பாட்டு ரீதியாகக் குழந்தையிடம் நிகழும் மாற்றங்களைக் கூர்ந்து கவனித்து, தலைகோதி மனம்விட்டுப் பேசி, பிரச்னையைப் புரிந்துகொள்ள வேண்டும்.

“முன்பு குழந்தைகளுடன் பொழுதைக் கழிக்க வீட்டில் முதியவர்கள் இருந்தார்கள். மனம்விட்டுப் பேசுவார்கள். நெருக்கமாக விளையாடுவார்கள். கதை சொல்லி ஆற்றுப்படுத்துவார்கள். இன்று தனித்தனித் தீவுகளாக மாறிவிட்டது நம் வாழ்க்கை. யாரையும் நம்பிக் குழந்தைகளை விடமுடியாத நிலை. யார் குற்றமிழைப்பவர்கள் என்று அடையாளம் காணமுடியவில்லை.  நன்றாக அறிமுகமானவர்களுடன் பழகினால்கூட, குழந்தைகள்மீது ஒரு கண் வைத்திருக்க வேண்டும். ‘உறவினர்கள்தானே’, ‘நண்பர்கள்தானே’ என்று அலட்சியமாக இருக்கக் கூடாது. பெரும்பாலான குழந்தைகள் பாதிக்கப்படுவது தெரிந்தவர்களால்தான்.

குழந்தைகளுக்கு அடிக்கடி வயிற்றுவலி வந்தாலோ, பிறப்புறுப்பில் ரத்தக்கறை இருந்தாலோ, குழந்தை அடிக்கடி சிறுநீர் கழித்தாலோ உடனடியாக மருத்துவரிடம் அழைத்துச் செல்ல வேண்டும்.  எந்தவிதக் காரணமுமில்லாமல் குழந்தைகளின் படிப்பு, விளையாட்டு போன்ற செயல்பாடுகளில் ஆர்வம் குறைந்தாலோ; அதிக கோபம், அழுகை, சோகம், தனிமை, அடம்பிடித்தல், தூக்கமின்மை போன்ற பாதிப்புகள் தென்பட்டாலோ உடனடியாக மருத்துவரிடம் அழைத்துச்செல்ல வேண்டும்.

டான்ஸ் க்ளாஸ், கராத்தே க்ளாஸ், ட்யூஷன் போன்ற இடங்களுக்குக் குழந்தைகள் செல்ல மறுத்தால், வலுக்கட்டாயமாக அனுப்பக் கூடாது. பொறுமையாக அன்பாக அவர்களிடம் பேசி, போக மறுப்பதன் காரணத்தைத் தெரிந்துகொள்ள வேண்டும். பாலியல் ரீதியான துன்புறுத்தல்கள் காரணமாகக்கூடக் குழந்தைகள் போக மறுக்கலாம். குழந்தைகளை மிரட்டாமல், மனம்விட்டு வெளிப்படையாகப் பேசவேண்டும். பயந்துதான் பல விஷயங்களைக் குழந்தைகள் வெளியே சொல்லாமல் தவிர்க்கிறார்கள்.  குழந்தைகளோடு உரையாடாமல், சமூகத்தில் விழிப்பு உணர்வு இல்லாமல் இதுபோன்ற குற்றங்களைக் குறைக்க முடியாது” என்கிறார்,  குழந்தைகளுக்கான உளவியல் ஆலோசகர் கண்ணன்.

குழந்தைகளைப் பாலியல் பண்டங்களாகப் பார்ப்பதென்பது ஒரு மிருக மனநிலை. வீடு, பள்ளி என எல்லா இடங்களிலும் பாலின சமத்துவத்தையும், பாலியல் விழிப்பு உணர்வையும் உருவாக்க வேண்டியது காலத்தின் கட்டாயம். குற்றமிழைப்பவர்கள்மீது காலம் தாழ்த்தாமல் கடும் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். அந்த நடவடிக்கைகள் தவறு செய்ய நினைப்போருக்குப் பாடமாக அமைய வேண்டும். வீடு, பள்ளி, சமூகம் ஆகியவை ஒருங்கிணைந்து குழந்தைகளின் சுதந்திரத்தை, அவர்களின் உரிமைகளை உறுதி செய்ய வேண்டும்.

8 comments

  1. Coadministration with finasteride for BPH Tadalafil 5 mg plus finasteride 5 mg PO once daily for 26 weeks; incremental benefit of tadalafil decreases from 4 weeks until 26 weeks, and the benefit beyond 26 weeks is unknown priligy reviews Is it legal for me to personally import drugs

Leave a comment

Your email address will not be published.