ஸ்மார்ட்போன் செயல்பாட்டுக்குப் பெருமளவில் உதவி வருகிறது ஆண்ட்ராய்ட் மென்பொருள். இதனை தன்னுடைய வளர்ச்சிக்காக தவறுதலாக பயன்படுத்தியதற்காக கூகுள் நிறுவனத்தின் மீது 34 ஆயிரத்து 412 கோடி ரூபாயை அபராதம் விதித்துள்ளது ஐரோப்பிய யூனியன்.
சர்வதேச அளவில் தேடுதல் தளத்தில் முதலிடத்தில் உள்ளது கூகுள். இது ஸ்மார்ட்போன் பயன்பாட்டாளர்களிடமும் தன்னை முன்னிலைப்படுத்திக் கொள்ள ஆண்ட்ராய்ட் செயலியைப் போலவே கூகுள் ஆண்ட்ராய்ட் செயலியை உருவாக்கிக் கொண்டதாக புகார் எழுந்தது.
இந்த புகார் குறித்து, மூன்றாண்டுகளாக விசாரணை நடந்துவந்துள்ள நிலையில் இன்று தீர்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தீர்ப்பில், `கூகுள் நிறுவனம் ஆண்ட்ராய்டை தவறாகப் பயன்படுத்துவதை 90 நாட்களுக்குள் நிறுத்திக்கொள்ள வேண்டும். மீறினால் அபராதம் விதிக்கப்படும். ஏற்கெனவே முறைகேடாகப் பயன்படுத்தியதுக்கு 5.06 பில்லியன் அமெரிக்க டாலர் அபராதம் செலுத்த வேண்டும். தன்னுடைய போட்டியாளர்களை நல்ல முறையில் நடத்த வேண்டும். இணையத்தில் பல்வேறு வகையில் சிறப்பாக செயல்பட்டு வரும் சிறிய நிறுவனங்களை பாதிக்காத வகையில் செயல்படுவதற்கு அனுமதிக்க வேண்டும்’ என்று கேட்டுக்கொண்டுள்ளது ஐரோப்பிய யூனியன்.
5.06 பில்லியன் அமெரிக்க டாலர் என்பது இந்திய மதிப்பில் 34 ஆயிரத்து 412 கோடி ரூபாய் ஆகும். இவ்வளவு அபராத தொகை செலுத்த முடியாது என மேல் முறையீடு செய்யும் யோசனையில் இருக்கிறது கூகுள் நிறுவனம்.