கச்சா எண்ணெய் வர்த்தகத்தில் இரு்நது ஈரானை அகற்ற துடித்து வரும் அமெரிக்கா, சவுதி அரேபியா மூலம் காய் நகர்த்தி வருகிறது. இதன் ஒருபகுதியாக, கூடுதலாக கச்சா எண்ணெய் உற்பத்தி செய்து சப்ளை செய்யுமாறு சவுதி அரேபியாவை அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கேட்டுக் கொண்டுள்ளார்.
கச்சா எண்ணெய்யை அதிக அளவில் இறக்குமதி செய்யும் நாடுகளில் மூன்றாவது இடத்தில் இந்தியா இருக்கிறது. இராக், சவுதி அரேபியாவை தொடர்ந்து இந்தியாவுக்கு கச்சா எண்ணெய் அனுப்பும் 3வது பெரிய நாடு ஈரானாகும். இந்த நிலையில், ஈரான் உடனான அணு ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா விலகுவதாக அறிவித்தது.
அதன் பிறகு உலக அளவில் ஈரானை தனிமைபடுத்து வேலைகளை அமெரிக்கா செய்து வருகிறது. ஈரான் ஒரு நாளைக்கு 24 லட்சம் பேரல் கச்சா எண்ணெயை ஏற்றுமதி செய்கிறது. ஈரான் மீது அமெரிக்கா கடுமையான பொருளாதார தடைகளை விதிக்கும் என ட்ரம்ப் அறிவித்திருக்கிறார்.
இதனால் ஈரானிடமிருந்து கச்சா எண்ணெயை பிற நாடுகள் வாங்குவது தடுக்க அனைத்து நடவடிக்கைகளையும் ட்ரம்ப் எடுத்து வருகிறார். ஈரானின் கச்சா எண்ணெய் உற்பத்தி முன்பைவிடக் குறைந்து கச்சா எண்ணெய்க்கான தேவை அதிகரித்துள்ளது. தேவை அதிகரிப்பின் விளைவாக விலையும் அதிகரித்துள்ளது.
ஈரானில் அதிகஅளவு கச்சா எண்ணெய் வாங்கும் சீனா, இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு அமெரிக்கா நேரடியாகவே மிரட்டல் விடுத்துள்ளது. ஈரானில் இருந்து கச்சா எண்ணெய் வாங்கினால் சம்பந்தப்பட்ட நாடுகளுடனான வர்த்தக உறவுகளை துண்டிப்போம் எனவும் அமெரிக்கா கூறியுள்ளது. இதனால் உலக அளவில் கச்சா எண்ணெய் விலை அதிகரிப்பதுடன், இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு தேவையான கச்சா எண்ணெய் கிடைக்காத சூழல் உள்ளது.
இதையடுத்து உலக அளவில் ஈரானை தனிமைபடுத்த அமெரிக்க புதிய வியூகம் வகுத்துள்ளது. அதன்படி கச்சா எண்ணெய் உற்பத்தியை அதிகரிக்கும்படி சவுதி அரேபியாவை ட்ரம்ப் கேட்டுக் கொண்டுள்ளார். ஈரானின் போட்டி நாடாக விளங்கும் சவுதி அரேபியா, அமெரிக்காவுடன் நட்பு பாராட்டி வருகிறது. உலக அளவில் அதிகமான அளவு கச்சா எண்ணெயை உற்பத்தி செய்து சப்ளை செய்து வரும் நாடாக சவுதி அரேபியா விளங்குகிறது. எனவே சவுதி கச்சா எண்ணெயை மற்ற நாடுகளை வாங்க வைப்பதன் மூலம் ஈரானை தனிமைப்படுத்த முடியும் என ட்ரம்ப் நம்புகிறார்.
இதுதொடர்பாக சவுதி அரேபியாவின் மன்னர் சல்மான் பின் அப்துல் அசீசை, அதிபர் ட்ரம்ப் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது, அவர் சவுதியின் கச்சா எண்ணெய் வர்த்தகத்தை அதிகரிக்கவும், சர்வதேச எண்ணெய் சந்தையில் நிலைத்தன்மையை பாதுகாக்கவும் கூடுதலாக உற்பத்தி செய்யுமாறு கேட்டுக் கொண்டார். சவுதி அரேபியா, நாள் ஒன்றுக்கு 20 லட்சம் பேரல்கள் வரை எண்ணெய் உற்பத்தி செய்ய வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார்.
சவுதி அரேபிய மன்னர் சல்மான் பின் அப்துல் அசிஸ், தேவைப்பட்டால் எண்ணெய் உற்பத்தியை அதிகரிக்க தயாராக இருப்பதாக உறுதி அளித்துள்ளார்.