கொடைக்கானல் மலைப்பாதையில், 80 அடி பள்ளத்தில் வேன் பாய்ந்து கல்லூரி மாணவி உள்பட 2 பேர் பலி – 4 பேர் படுகாயம்

கொடைக்கானல் மலைப்பாதையில், 80 அடி பள்ளத்தில் வேன் பாய்ந்து கல்லூரி மாணவி உள்பட 2 பேர் பலி – 4 பேர் படுகாயம்

கொடைக்கானல்,

🌈🌈கொடைக்கானல் அண்ணாநகரை சேர்ந்தவர் சாதிக் (வயது 45). இவரும், ஆனந்தகிரி 1-வது தெருவை சேர்ந்த ரகமத்துல்லா (40) என்பவரும் சேர்ந்து நாயுடுபுரம் பகுதியில் ஓட்டல் நடத்தி வருகின்றனர். சாதிக்கின் மகள் ரூபிதாஹரின் (18). இவர், திருச்சியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். ரகமத்துல்லாவின் மகன் ராசிக்பரீத் (13). இவர், கொடைக்கானலில் உள்ள தனியார் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தார்.

இதற்கிடையே நேற்று முன்தினம் வத்தலக்குண்டுவில் நடந்த சாதிக்கின் உறவினர் திருமண விழாவில் சாதிக், ரகமத்துல்லா குடும்பத்தினர் கலந்து கொண்டனர். அதன்பிறகு திருச்சிக்கு சென்று சாதிக்கின் மகள் ரூபிதாஹரினை அழைத்துக்கொண்டு, வேனில் கொடைக்கானல் நோக்கி வந்து கொண்டிருந்தனர். அந்த வேனை ரகமத்துல்லா ஓட்டினார்.

நள்ளிரவு 12.45 மணிக்கு வெள்ளி நீர்வீழ்ச்சி அருகே மலைப்பாதையில் வேன் வந்தது. அப்போது அடர்ந்த மேகமூட்டமாக இருந்தது. அந்தநேரத்தில் சாலையின் குறுக்கே திடீரென காட்டெருமை வந்தது. இதனைக்கண்டு அதிர்ச்சி அடைந்த ரகமத்துல்லா, திடீரென வேனை நிறுத்த முயன்றார். இதில் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த வேன், சாலையோரத்தில் இருந்த தடுப்பு சுவரை உடைத்துக் கொண்டு சுமார் 80 அடி கிடு கிடு பள்ளத்தில் பாய்ந்தது.

இதில் ரூபிதாஹரின், ராசிக் பரீத், ரகமத்துல்லா, அவருடைய மனைவி சர்மிளா (35), சாதிக், அவருடைய மனைவி கமருன்னிசா (43) ஆகியோர் படுகாயமடைந்தனர். ரகமத்துல்லாவின் மகள் சம்ரா பாத்திமா (8) காயமின்றி உயிர் தப்பினாள். அவள் விபத்து நடந்த பள்ளத்தில் இருந்து மேலே ஏறி வந்து சாலையில் நின்று உதவி கோரினார்.

அப்போது அந்த வழியாக காரில் வந்தவர்கள் கொடைக்கானல் போலீசாருக்கும், தீயணைப்பு துறையினருக்கும் தகவல் கொடுத்தனர். இதனையடுத்து போலீஸ் துணை சூப்பிரண்டு ஆத்மநாதன், இன்ஸ்பெக்டர் ராஜசேகர், சப்-இன்ஸ்பெக்டர் பொன்.குணசேகரன் தலைமையிலான போலீசாரும், தீயணைப்பு துறையினரும் சம்பவ இடத்திற்கு சென்றனர். பின்னர் கயிறு கட்டி கீழே இறங்கி விபத்தில் சிக்கி காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக கொடைக்கானல் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் பரிசோதனை செய்ததில் ரூபிதாஹரின், ராசிக் பரீத் ஆகியோர் ஏற்கனவே இறந்துவிட்டது தெரியவந்தது. படுகாயம் அடைந்த சாதிக், கமருன்னிசா, ரகமத்துல்லா, சர்மிளா ஆகிய 4 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த விபத்து குறித்து கொடைக்கானல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்*🛑