சத்தீஸ்கர் சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக அமோக வெற்றி பெறும் என்று அந்த கட்சியின் தேசிய தலைவர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
சத்தீஸ்கரில் இந்த ஆண்டு இறுதியில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. அந்த மாநிலத்தில் சுமார் 15 ஆண்டுகள் பாஜக ஆட்சியில் உள்ளது. 4-வது முறையாக ஆட்சியை தக்க வைத்து கொள்ள இப்போதே பாஜக பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறது. அங்கு அம்பிகாபூரில் நேற்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பாஜக தேசிய தலைவர் அமித் ஷா பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது:

கடந்த 4 ஆண்டுகள் என்னென்ன வளர்ச்சி திட்டங்கள் நடைபெற்றன என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கேள்வி எழுப்புகிறார். அவருக்கு பதில் அளிக்க வேண்டிய அவசியம் இல்லை. மக்களை சந்திக்கும்போது ஒவ்வொரு நிமிடத்துக்கும், ஒவ்வொரு பைசாவுக்கும் விளக்கம் அளிப்போம்.
கடந்த 55 ஆண்டு காலம் நாட்டை காங்கிரஸ் ஆட்சி செய்துள்ளது. அதுகுறித்து ராகுல் காந்தி அறிக்கை தயார் செய்யலாம். கோடை விடுமுறையின்போது இத்தாலி, ஐரோப்பிய நாடுகளுக்கு ராகுல் சுற்றுலா செல்கிறார். வாக்கு சேகரிக்க மட்டுமே இந்தியாவுக்கு வருகிறார்.
சத்தீஸ்கர் சட்டப்பேரவைத் தேர்தலில் மொத்தமுள்ள 90 தொகுதிகளில் பாஜக 65 தொகுதிகளைக் கைப்பற்றி அமோக வெற்றி பெறும். முதல்வர் ரமண் சிங் தலைமையில் மீண்டும் பாஜக ஆட்சி பதவியேற்கும்.
இவ்வாறு அவர் பேசினார்.